ஜனாதிபதித் தேர்தலை இடைநிறுத்தும் மனு - 8 ஆம் திகதி முக்கிய தீர்மானம்
அதற்கமைய, குறித்த மனு எதிர்வரும் திங்கட்கிழமை (08) ஐவர் அடங்கிய குறித்த நீதிமன்ற குழாம் முன்னிலையில் பரிசீலிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக்காலம் தொடர்பில் சமிந்திர தயான் லெனவ எனும் வர்த்தகர் சமர்ப்பித்த அடிப்படை உரிமை மனுவை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்ததைத் தொடர்ந்து ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் அதனை பரிசீலிக்க உயர் நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
அதற்கமைய, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய, விஜித் மலல்கொட, முர்து பெனாண்டோ, பிரீத்தி பத்மன் சூரசேன, எஸ். துரைராஜா ஆகிய ஐந்து நீதியரசர்கள் இக்குழாமில் பெயரிடப்பட்டுள்ளனர்.
அரசியலமைப்பிற்கிணங்க ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவடையும் திகதிகள் தொடர்பில் உயர் நீதிமன்றம் விளக்கம் அளிக்கும் வரை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதைத் தடுக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் உரிய மனுவில் மேலும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஜனாதிபதியின் பதவிக்காலம் 5 வருடங்கள் என்பதோடு, 2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் ஆணைக்குழுவின் தீர்மானம் சரியானது என்பதே தனது நிலைப்பாடாகும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (04) விடுத்திருந்த ஊடக அறிக்கையில் தெரிவித்திருந்தது.
அத்துடன், ஜனாதிபதியின் பதவிக் காலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வதற்கு முன்னர் சமிந்திர தயான் லெனவ என்பவர் தன்னிடமோ அல்லது தனது சட்டத்தரணிகளுடனோ அது தொடர்பில் கலந்தாலோசிக்கவோ ஆலோசனை பெறவோ இல்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியிருந்தது.
Post a Comment