Header Ads



ஜனாதிபதித் தேர்தல் கட்டுப்பணத்தை 30 லட்சமாக திருத்தவும்


ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை திருத்தம் செய்ய வேண்டும். இதற்கமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளரின் கட்டுப்பணத்தை 25 லட்சமாகவும், சுயாதீன வேட்பாளரின் கட்டுப்பணத்தை 30 லட்சமாகவும் திருத்தம் செய்ய வேண்டும். அப்போது தான் போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை வரையறுக்கப்படும் என எதிரணியின் சுயாதீன உறுப்பினர் டலஸ் அழகப்பெரும சபையில் வலியுறுத்தினார்.


நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.


ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை திருத்தம் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌சவிடம் கோரிக்கை விடுத்தது. இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.


1981 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க தேர்தல் சட்டத்துக்கு அமைய அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளரிடமிருந்து 50 ஆயிரம் ரூபா கட்டுப்பணமும், சுயாதீன வேட்பாளரிடமிருந்து 75 ஆயிரம் ரூபாவும் கட்டுப்பணமும் அறவிடப்படுகிறது.


அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியின் வேட்பாளரிடமிருந்து அறவிடும் கட்டுப்பணத்தை 25 லட்சமாகவும், சுயாதீன வேட்பாளரின் கட்டுப்பணத்தை 30 லட்சமாகவும் திருத்தம் செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வலியுறுத்தியது.


2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 35 வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். இரண்டு வேட்பாளர்களை தவிர ஏனைய வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரசுடமையாக்கப்பட்டது. எவ்விதமான வரையறைகளும் இல்லாமல் வேட்பாளர்கள் முன்னிலையாகுவதால் அரச நிதியே வீண்விரயமாக்கப்படுகிறது.


41 ஆண்டுகளுக்கு பின்னரே கட்டுப்பணம் தொடர்பில் திருத்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தம் அவசரமாக கொண்டு வரப்பட்டுள்ளது. அதேபோல் கட்டுப்பணம் விவகாரத்திலும் கவனம் செலுத்தி திருத்தம் ஒன்றை முன்வைக்குமாறு வலியுறுத்துகிறேன் என குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.