Header Ads



பொருட்கள், சேவைக் கட்டணங்களை 20% வீதத்தினால் குறைக்க முடியும்


அதிகரித்துள்ள பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணங்களை, மின்சாரக் கட்டணத் திருத்தத்தின் ஊடாக 20% சதவீதத்தினால் குறைக்க முடியும் என மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்தார். 


மின் கட்டணம் அதிகரிக்கும் தினத்தன்று அதிகரிக்கப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணத்தை,  மின் கட்டணம் குறைக்கப்படும் அதே தினத்தில் இருந்து குறைக்க நடவடிக்கை எடுக்குமாறும் மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் வர்த்தக சமூகத்திடம் கேட்டுக்கொண்டார்.


மின்சாரம் மற்றும் எரிபொருளின் விலைகளை பாரியளவில் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இருப்பினும் இந்த நாட்டில் பொருட்கள் மற்றும் சேவைக் கட்டணக் குறைப்பின் பலன் இன்னும் நுகர்வோருக்கு கிடைக்கவில்லை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (16) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனைத் தெரிவித்தார். 

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் கஞ்சன விஜேசேகர,


“ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, ஒக்டோபர் மாதங்களில் மின் கட்டணம் திருத்தப்பட வேண்டும் என்று அரசாங்கம் முடிவு செய்துள்ளது. கடந்த மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தின் பின்னர், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கோரிக்கையின் பேரில், ஏப்ரல் மாதத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படாமல் ஜூலை மாதம் திருத்தம் செய்ய இணக்கம் காணப்பட்டது. இந்த மின் கட்டணத் திருத்தம் ஜூலை 16 முதல் அமுலுக்கு வருகிறது.


அடுத்த கட்டணத் திருத்த முன்மொழிவை ஒக்டோபர் மாதத்தில் வெளியிட எதிர்பார்க்கப்படுகிறது. மின் கட்டணக் குறைவுக்கு பல முக்கிய காரணங்கள் உள்ளன. 2022 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால், கடந்த காலங்களில் வங்கி வட்டி விகிதம் 36% வரை அதிகரித்தது. ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் நிலவி வருவதால், நிலக்கரி மற்றும் உலை எண்ணெய் (furnace oil) விலையும் அதிகரித்தது. அமெரிக்க டொலரிற்கு செலுத்த வேண்டிய தொகை அதிரடியாக உயர்ந்தது. இதன்படி, 09 வருடங்களின் பின்னர் மின் கட்டணத்தைத்  திருத்தியமைக்க வேண்டியிருந்தது. 2014 இற்குப் பிறகு, ஓகஸ்ட் 2022 இல் மின் கட்டணம் திருத்தப்பட்டது.


கடந்த இரண்டு வருடங்களைப் பொருத்தவரை, மழை வீழ்ச்சியும் அதிகரித்துள்ளது. அதனால், நீர் மின் உற்பத்தி அதிகரித்தது. மேலும், புதுப்பிக்கத்தக்க வலுசக்தி உற்பத்தியும் அதிகரித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம், உமா ஓயா நீர்மின் நிலையத்தின் மின்சாரம் தேசிய உற்பத்தி கட்டமைப்புடன் இணைக்கப்பட்டது. கடந்த 18 மாதங்களில், இலங்கை மின்சார சபை செயற்பாட்டுச் செலவுகளைக் குறைத்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை மின்சார சபைக்கு எந்த ஒரு ஊழியரும் புதிதாக இணைத்துக் கொள்ளப்படவில்லை. தேவைப்பாடுள்ள 26,000 ஊழியர்களுக்குப் பதிலாக, இன்று 22,000 ஊழியர்கள் மாத்திரமே உள்ளனர்.


மேலும், செயற்பாட்டுச் செலவுகளைக் குறைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்க முடிந்தது. குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தும் மக்களுக்கு இந்த மின் திருத்தத்தின் மூலம் அதிக நிவாரணம் கிடைத்துள்ளது. 79% வீடுகள் 90 அலகுகளிற்கும் குறைவான மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. அவர்களுக்கு பாரிய அளவு நிவாரணம் கிடைத்துள்ளது. மின்கட்டணம் அதிகரித்த போது ஒரு மின் அலகு உற்பத்திச் செலவு சுமார் 48 ரூபா. இன்று முப்பத்தைந்து ரூபா என்ற நிலையை எட்டியுள்ளது. உணவகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு 25% - 26% வரை நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. மத வழிபாட்டுத் தலங்களுக்கு 30% குறைக்கப்பட்டுள்ளது. இந்த அரசாங்கம், மின் கட்டணத்தை திருத்த முன்னர் நடைமுறையில் இருந்த கட்டணத்தை விடக் குறையும் வகையில் இந்த திருத்தத்தில், கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.


மின் உற்பத்திச் செலவைக் குறைத்தால்தான் எதிர்காலத்தில் மின் கட்டணத்தைக் குறைக்க முடியும். அதற்கு குறைந்த செலவில் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய மின் உற்பத்தி நிலையங்களை விரைவாக அமைக்க வேண்டும். இந்தப் புதிய மின் உற்பத்தி நிலையங்களை அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் நிர்மாணித்து முடிக்க எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, அடுத்த மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மின் கட்டணத்தை, இதனை விடக் குறைக்க எதிர்பார்க்கப்படுகிறது. 180 அலகுகளுக்கு மேல் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 189,000 பேர் மாத்திமே உள்ளனர். 30 அலகுகள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் 290 ரூபா மட்டுமே செலுத்த வேண்டும். நீங்கள் 01 - 60 அலகுகளை பயண்படுத்தினால், நீங்கள் 790 ரூபா செலுத்த வேண்டும்.


மேலும், இந்த மின் கட்டணத் திருத்தத்தில் தொழிற்சாலைகள் மற்றும் சிறு வர்த்தகங்களுக்கு குறைந்தபட்சம் 20% விலை குறைக்கப்பட்டுள்ளது. மின்சார விலை அதிகரிக்கப்பட்ட அதே தினத்தில் அதிகரிக்கப்படும் உணவுப் பொருட்களின் விலைகளையும் வர்த்தக நிறுவனங்களின் உற்பத்தி மற்றும் சேவைக் கட்டணங்களையும் குறைக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். சமீபகாலமாக எரிபொருள் விலையும் மண்ணெண்ணெய் விலையும் குறைந்துள்ளது. அந்தச் சந்தர்ப்பங்களிலும், பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் குறைவதை நாம் காணவில்லை. எனவேதான் இம்முறை மின்சாரத்தின் பாரிய கட்டணக் குறைப்பின் பலனை மக்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம். குறைந்தபட்சம் 20% விலை குறைக்க முடியும்.


மின்கட்டண அதிகரிப்பின் போது, எமது பிராந்திய நாடுகளின் மின் கட்டணம் குறித்து ஊடகங்கள் அதிகம் கதைத்தன. எனவே இம்முறை கட்டணக் குறைப்பு தொடர்பிலும் பிராந்திய மின் கட்டணம் மற்றும் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவது தொடர்பிலும் ஊடகவியலாளர்கள் ஒரு கருத்தாடலை உருவாக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். தேர்தல் காலம் காரணமாக இந்த விலை திருத்தம் செய்யப்பட்டதாக சில ஊடக நிறுவனங்களும் ஊடகவியலாளர்களும் தெரிவிக்கின்றனர். ஆனால் இந்த கொள்கைகளை நாம் 2022 இல் தயாரித்தோம்.


அதன்படி, சிறப்பாக மேற்கொள்ளப்பட்ட பணிகள் காரணமாக இந்த திருத்தம் சாத்தியமாகியுள்ளது. நாங்கள் பிரபலமான முடிவுகளை எடுக்கவில்லை. சரியான கொள்கைகளின் அடிப்படையில் இவை அனைத்தையும் செய்ய முடிந்துள்ளது. மின் கட்டணத்தை உயர்த்தும் போது, ஜனாதிபதிக்கும், அரசாங்கத்திற்கும் வழங்கப்படும் விளம்பரத்தைப் போன்று, விலை குறைக்கப்பட்டாலும், அதே விளம்பரத்தை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். எதிர்காலத்தில் செயல்திறன் மற்றும் குறைந்த செயற்பாட்டுச் செலவுகள் கொண்ட உற்பத்தித் திட்டத்தை அறிமுகப்படுத்த நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். 2022 ஆம் ஆண்டுக்கு முன்னர், மின்சாரத் துறை நட்டத்திலேயே இயங்கியது. 


ஆனால் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில், செயற்பாட்டு இலாபத்தை பதிவு செய்ய முடிந்தது. சர்வதேச நாணய நிதியத்தின் இணக்கப்பாட்டுடன் மின்சார சபைக்கு இதுவரை கிடைத்து வந்த நிதி கிடைக்காமல் தடைப்பட்டது. எனவே, மின்சார சபை இலாபம் ஈட்டும் நிலையை எட்ட வேண்டியதாயிற்று. எனவே, நிதி ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து செயற்பாட்டு இலாபத்தைப் பெற முடிந்தது. அதன்படி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் திறைசேரியில் இருந்து மின்சார சபை நிதி பெற்றுக்கொள்ளவில்லை.

 

மின்சார சபை ஏனைய நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய கடனில், பெரும் தொகையை மீளச் செலுத்தியுள்ளது. சோலார் பேனல்களை பொருத்தும் மக்களை ஊக்குவிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கூரை மேல் பொருத்தப்பட்ட சோலார் பேனல்கள் மூலம் ஆண்டுக்கு 150 மெகாவாட் மின்சாரத்தை தேசிய மின்கட்டமைப்பிற்கு வழங்க திட்டமிடப்பட்டது. இதுவரை சூரிய சக்தி கட்டமைப்புக்கள் மூலம் 149 மெகாவாட் மின்சாரம் பெற முடிந்துள்ளது.


ஜனாதிபதி ஊடகப் பிரிவு  

16.07.2024

No comments

Powered by Blogger.