முடக்கப்பட்ட முஸ்லிம் மாணவிகளின் பெறுபேறு - பாராளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்ட விடயம்
- நூருல் ஹுதா உமர் -
திருகோணமலை சாஹிரா கல்லூரி மாணவிகள் 70 பேரின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் நிறுத்தப்பட்டமை இதனால் அந்த மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும் மன உளைச்சலில் உள்ள விடயங்கள் தொடர்பில் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் சபையில் எடுத்துரைத்து அந்த மாணவிகளின் பெறுபேறுகளை உடனடியாக வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கல்வியமைச்சரை கேட்டுக் கொண்டார்.
இன்றைய (05) பாராளுமன்ற விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும், திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ், இது தொடர்பில் பேசிக்கொண்டிருந்தபோது இதற்கு பதிலளிக்கும் விதமாக எழுந்த கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த, இது சம்பந்தமான விசாரணைகள் முடிவடைந்து விட்டன. பெறுபேற்றை உடனடியாக வெளியிடுமாறு நான் பரீட்சை திணைக்கள ஆணையாளரிடம் கூறியிருக்கிறேன்.
அத்துடன் விரைவில் இந்தப் பெறுபேறுகளை வெளியிடுமாறு அதிகாரிகளை பணித்துள்ளேன்.
உங்கள் வேண்டுகோளுக்கிணங்க இந்த நடவடிக்கையை எடுத்துள்ளேன் என பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸிடம் உறுதியளித்தார்.
இதன்போது குறுக்கிட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் மாணவிகளின் பெறுபேறுகளை இந்த வாரத்தினுள் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இதன்போது பதிலளித்த அமைச்சர், பெறுபேற்றை இந்த வாரம் வெளியிட நடவடிக்கை எடுத்துள்ளதாக உறுதியளித்ததுடன் இந்த விடயத்தில் பெரிய தவறு இடம்பெற்றுள்ளமை விசாரணைகளில் தெரிய வருகிறது. இது முஸ்லிம் பெண்களின் கலாசார உடையான பர்தா அணிந்து வந்தமையால் ஏற்பட்ட பிரச்சினை என்றார்.
Post a Comment