Header Ads



தனது முன்னோடிகளில் ஒருவரை, கௌரவிக்கும் ஜாமிஆ நளீமிய்யா


ஜாமிஆ நளீமிய்யா அதன் முன்னோடிகளில் ஒருவர் பங்களாதேஷ் நாட்டைச் சேர்ந்த மெளலானா ஷஹீதுல்லாஹ் கவ்தர் அவர்களை கெளரவிக்கிறது!


ஜாமிஆ நளீமிய்யா இஸ்லாமிய ஷரீஆ கற்கைகளுடன் மானுடவியல் கற்கைகளை இலங்கையில் சர்வதேச தராதரத்தில் 1973 ஆம் ஆண்டு அறிமுகம் செய்த பொழுது எகிப்து, கானா, சூடான், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்தும் விரிவரையாளர்களை உள்வாங்கியமை குறிப்பிடத் தக்கது.


அந்த வகையில் பாகிஸ்தான் ஜாமிஆ அல்-அலீமிய்யாஹ் மற்றும் கராச்சி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் பட்டதாரி முதுகலைமாணி மாணவர் மெளலான ஷஹீதுல்லாஹ் கவ்தர் அவர்களையும் 1978 ஆம் ஆண்டு வரவழைத்துக் கொண்டது.


இந்தியத் துணைக் கண்ட இஸ்லாமியப் பிரச்சாரகர் மெளலானா அப்துல் அலீம் சித்தீகி அல்காதிரி அவர்களின் மாணவர் சர்வதேச கீர்த்தி பெற்ற மெளலானா பஸ்லுர் ரஹ்மான் அன்ஸாரி அல்காதிரி அவர்களால் சர்வதேச இஸ்லாமிய மிஷனரிகள் ஒன்றியத்தின் கீழ் தனது ஆசான் பெயரில் ஜாமிஆ அலீமிய்யா ஸ்தாபிக்கப் பட்டமை குறிப்பிடத்தக்கது, (ரஹிமஹுமல்லாஹ்).


பங்களாதேஷில் 1952 ஆம் ஆண்டு பிறந்து தனது 7 முதல் 11 ஆவது வயதில் அல்குர்ஆனை முழுமையாக மனனமிட்ட ஷஹீதுல்லாஹ் பின்னர் முஃப்தி பைழுல்லாஹ் அவர்களின் மொகுல் மஸ்ஜித் கல்லூரியில் தனது ஷரீஆ மற்றும் உருது, அரபு, பாரசீக மொழிகளையும் கற்றார்.


பின்னர் 1969 ஆண்டு ஹஜ்ஜாஜிகள் கப்பலில் பாகிஸ்தான் பயணித்து முஜாஹிதாபாத்தில் உள்ள ஜாமிஆ பாரூக்கியாவில் கற்கைகளைத் தொடங்கினார்.


அதன் பின்னர் புலமைப்பரிசில் பெற்று சர்வதேச பிரசித்தி பெற்ற கராச்சி நகரில் உள்ள ஜாமிஆ அலீமிய்யாவில் பன்னாட்டு மாணவர்களுடன் அரபு ஆங்கில மொழிகளில் பட்டதாரி ஷரீஆ கற்கைகளை தொடர்ந்த அவர் ஏக காலத்தில் கராச்சி பல்கலைக் கழகத்தில் இளமாணி கற்கைகளையும் நிறைவு செய்தார்.


ஜாமிஆ நளீமிய்யாவின் முதலாவது அதிபர் மெளலவி தாஸீம் நத்வி (ரஹிமஹுல்லாஹ்) அவர்களது (1977) வபாஃத்திற்கு பின்னர் நளீம் ஹாஜியார், கலாநிதி ஷுக்ரி (ரஹிமஹுமல்லாஹ்) ஹிபதுல்லாஹ் ஹாஜியார் போன்றவர்கள் பாகிஸ்தான் பயணித்து தகைமையுள்ள அதிபர் மற்றும் விரிவுரையாளர்களை தேடிய பொழுது மெளலானா ஷஹீதுல்லாஹ் கவ்தர் அவர்களது பெயர் சிபாரிசு செய்யப்பட்டு 1978 மே மாதம் இலங்கை வந்தார்.


அவரது வருகைக்கு பின்னர் அங்கிருந்த மற்றுமொரு அமெரிக்க பிரஜையான இஸ்லாமிய அறிஞர் யூஸூப் தலால் அலி அவர்களும் இலங்கைக்கு வருகை தந்தார் அவர் அதிபராகவும், மெளலானா ஷஹீதுல்லாஹ் பிரதி அதிபராகவும் நியமனம் பெற்றனர்.


1981 ஆம் ஆண்டு கலாநிதி ஷுக்ரி அவர்கள் பணிப்பாளராக நியமனம் பெற்றதன் பின்னர் கல்வித் துறை பீடாதிபதியாகவும் தொடர்ந்து பிரதிப் பணிப்பாளராகவும் மெளலானா ஷஹீதுல்லாஹ் கவ்தர் நியமனம் பெற்றார்.


ஒரு வருடத்தில் பாகிஸ்தான் திரும்பி தனது முதுகலைமாணி கலாநிதி கற்கைகளை கற்க இருந்த அவர் அவற்றை அர்பணித்து 2000 ஆம் ஆண்டுவரை ஜாமிஆவில் பணி செய்தார்.


தாய்நாடு திரும்பியது முதல் பங்களதேஷ் சிட்டகொங் நகரில் உள்ள 1600 மாணவர்களைக் கொண்ட பிரபலமான ஜாமிஆ தாருல் மஆரிஃப் அல் இஸ்லாமியாவில் கல்வித் துறை பீடாதிபதியாக 23 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார்.


ஜாமிஆ பழைய மாணவர் அமைப்பின் வருடாந்த மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்க தனது பாரியாருடன் வருகை தந்துள்ள அவரை ஜாமிஆவும் பழைய மாணவர்களும் கெளரவிப்பதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அவருக்கு நல்லாரோக்கியத்தையும் தீன் பணியில் நீண்ட ஆயுளையும் தருவானாக!


- மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ் -


25.06.2024

No comments

Powered by Blogger.