Header Ads



வாக்களிப்பு நிறைவு - ஈரானில் அடுத்த ஜனாதிபதி யார்..?


ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி ஹெலிகொப்டர் விபத்தில் கொல்லப்பட்ட நிலையில் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கு ஈரான் மக்கள் வாக்களித்தனர்.


ஈரானில் வாக்காளிக்க தகுதி பெற்ற சுமார் 61 மில்லியன் மக்கள் நேற்றுக் காலை எட்டு மணி தொடக்கம் நாடு முழுவதிலும் உள்ள 58,640 வாக்குச் சாவடிகளில் தமது வாக்குகளை அளித்தனர். இதில் பழைமைவாத முகாமில் பிளவு ஏற்பட்டிருக்கும் நிலையில் 69 வயதான சீர்திருத்தவாதியான மசூத் பெசஷ்கியான் வெற்றி வாய்ப்பை எதிர்பார்த்துள்ளார்.


பாதுகாவளர் கௌசிலால் தேர்வு செய்யப்படுபர்களே தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படும் நிலையில், பெசஷ்கியான் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்பட்டதோடு அவரை எதிர்த்து பழைமைவாதிகளான பாராளுமன்ற சபாநாயகர் முஹமது பகர் கலிபஃப் மற்றும் முன்னாள் அணு சக்தி பேச்சுவார்த்தையாளர் சயீத் ஜலீலி ஆகியோர் போட்டியிடுகின்றனர். வாக்குப் பதிவு ஆரம்பமான விரைவில் தமது வாக்கை அளித்த ஈரான் உயர் மட்டத் தலைவர் ஆயதொல்லா அலி கமனெய், மக்களுக்கு தமது வாக்குகளை அளிக்கும்படி அழைப்பு விடுத்தார். இன்று காலையில் ஆரம்பக் கட்ட முடிவுகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கும் நிலையில் நாளை (30) உத்தியோகபூர்வ முடிவுகள் வெளியாகவுள்ளன.


எந்த வேட்பாளரும் 50 வீத வாக்குகளை வெல்லாத பட்சத்தில் எதிர்வரும் ஜூலை 05 ஆம் திகதி இரண்டாவது சுற்று தேர்தல் நடைபெறும். இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் 2005 ஆம் ஆண்டு தேர்தலில் மாத்திரமே இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


பெசஷ்கியான் பெரிதாக அறியப்படாத வேட்பாளராக இருந்தபோதும் ஈரானில் நீண்ட காலமாக பழைமைவாத மற்றும் தீவிர பழைமைவாத முகாம்கள் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில் சீர்திருத்தவாத முகாமில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.


ஈரானில் கடைசியாக முஹமது கத்தாமியே சீர்திருத்தவாத முகாமில் இருந்து ஜனாதிபதியாக தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.