புதிய கறுப்புப் பட்டியலினால் - முஸ்லிம் சமூகத்திற்கு தொடர்ந்து சிக்கலா..?
(எப்.அய்னா)
அரசு, 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ் 2024 ஜூன் மூன்றாம் திகதியிடப்பட்ட 2387/02 ஆம் இலக்க அதி விஷேட வர்த்தமானி ஊடாக வெளியிட்டுள்ள பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புபட்ட தனி நபர்கள், அமைப்புக்களின் பெயர் விபரங்கள் அடங்கிய கறுப்புப் பட்டியல் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜூன் 3 ஆம் திகதியிடப்பட்ட 2387/02 ஆம் இலக்க வர்த்தமானி பிரகாரம் 60 இற்கும் மேற்பட்ட முஸ்லிம் நபர்களும், 6 அமைப்புக்களும் தடை செய்யப்பட்டோர் குறித்தான கறுப்புப் பட்டியலில் தொடர்ந்து உள்ளடக்கப்பட்டுள்ளன.
தனது கைது நடவடிக்கை காரணமாக சர்வதேச அளவில் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பில் கேள்விகளை தொடுக்கச் செய்த கவிஞரும் இளம் ஆசிரியருமான அஹ்னாப் ஜஸீமின் பெயர் தொடர்ச்சியாக கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டு சர்ச்சைகளை தோற்றுவித்த நிலையில், இம்முறை அவரது பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இதனைவிட உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களின் பின்னர் கைது செய்யப்பட்டு, சாட்சிகள் இல்லாமையால் நீதிமன்றால் விடுதலை செய்யப்பட்ட சிலரும், சட்ட மா அதிபரின் ஒப்புதலுடன் சாட்சிகளில் காணப்படும் பலவீனம் காரணமாக பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள பலரும், நியாயமான வழக்கு விசாரணைகளுக்கு கூட சந்தர்ப்பம் அளிக்கப்படாத பலரும் இந்த கறுப்புப் பட்டியலில் தொடர்ந்தும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
எந்த நியாயமான விசாரணைகள் மற்றும் காரணிகளும் இன்றி பலர் இவ்வாறு குறித்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளமையால், குறித்த வர்த்தமானியை சவாலுக்கு உட்படுத்துவது தொடர்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகள் பலர் ஆராய்ந்து வருகின்றனர்.
பயங்கரவாதிகளுக்கு உதவி ஒத்தாசை அளிப்பதை தடுப்பது குறித்தான நோக்கத்துக்காக, 2012 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க ஐ. நா. கட்டளைகளின் 4 (7) ஆம் விதிவிதானத்துக்கு அமைய, பயங்கரவாத நடவடிக்கைகளுடன் தொடர்புடைய நபர்கள் பட்டியலிடப்படுகின்றனர். இதனை இலங்கை 1968 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ் முன்னெடுக்கின்றது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி அப்போதைய வெளிவிவகார அமைச்சர் ஜி. எல்.பீரிஸ் வெளியிட்ட 1758/ 19 எனும் வர்த்தமானி ஊடாக இதற்கான அடித்தளம் இடப்பட்டது.
பின்னர், கடந்த 2014 மார்ச் 21 ஆம் திகதி, பயங்கரவாத நடவடிக்கை தொடர்பிலான முதலாவது கறுப்புப் பட்டியல் அடங்கிய வர்த்தமானி 1854/41 எனும் இலக்கத்தின் கீழ் அப்போதைய பாதுகாப்பு செயலரான தப்பியோடிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டிருந்தது. அதில் 424 தனி நபர்களும் 16 அமைப்புக்களும் தடை செய்யப்பட்டோர் பட்டியலில் இணைக்கப்பட்டிருந்தனர். அது முதல் இறுதியாக கடந்த 2023 ஜூன் 8 திகதி வெளியிடப்பட்ட வர்த்தமானி வரை அவ்வாறான 9 தடைப் பட்டியல்கள் அடங்கிய வர்த்தமானிகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த 2015 ஆம் ஆண்டு 1941/44 எனும் வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதுடன், 2016 ஆம் ஆண்டு 1992/25 எனும் வர்த்தமானி வெளியிடப்பட்டு தடை செய்யப்பட்டோரின் பட்டியல் வெளியிடப்பட்டது. பின்னர் 2018 ஆம் ஆண்டு 2016/18 ஆம் இலக்க வர்த்தமானி ஊடாக அப்பட்டியல் வெளியிடப்பட்டது.
இவ்வாறான நிலையில் கடந்த 2019 ஆம் ஆண்டு இரு வர்த்தமானி அறிவித்தல்கள் ஊடாக அப்பட்டியல் வெளியிடப்பட்டது. 2019 மே 23 ஆம் திகதி 2124/32 எனும் இலக்கத்தின் கீழும் 2019 செப்டம்பர் 9 ஆம் திகதி 2140/16 எனும் இலக்கத்தின் கீழும் இரு வர்த்தமானிகள் வெளியிடப்பட்டன.
இதனைவிட கடந்த 2021 ஆம் ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதி 2216/37 எனும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தது. அதன் பின்னரே கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திகதி 2291/02 எனும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அது 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி 2335/16 எனும் வர்த்தமானி ஊடாக திருத்தப்பட்டது. இந் நிலையிலேயே தற்போதைய வர்த்தமானி புதிதாக வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி தற்போதைய வர்த்தமானி அறிவித்தல் பிரகாரம், 210 தனி நபர்களும் 15 அமைப்புக்களும் ஐ. நா. சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சினால் கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அவ்வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் வெளிநாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் கருத்தியலை பரப்பும் வகையில் செயற்பட்டுவந்த அவ்வியக்கத்தின் கட்டமைப்பையொத்த தமிழீழ விடுதலைப்புலிகள், தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, தமிழர் கூட்டிணைவுக்குழு, உலகத்தமிழர் இயக்கம், நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், உலகத்தமிழர் உதவி நிதியம், தலைமைக்காரியாலயக்குழு, தேசிய தௌஹீத் ஜமா-அத், ஜமா அத்தே மில் அத்தே இப்ராஹிம், விலாயத் அஸ் செய்லானி, தாருல் அதர் அல்லது ஜாமியுல் அதர் பள்ளிவாசல், தேசிய கனேடியத்தமிழர் பேரவை, தமிழ் இளைஞர் அமைப்பு, இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கம், சேவ் த பேர்ள் ஆகிய 15 அமைப்புக்களே தற்போது தடை செய்யப்பட்டுள்ள அமைப்புக்கள் பட்டியலில் உள்ளடங்குகின்றன.
எவ்வாறாயினும் ஏற்கனவே இலங்கை இஸ்லாமிய மாணவர் இயக்கத்தின் நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்ட தடைகளை எதிர்த்து அந்த இயக்கம் உயர் நீதிமன்றில் வழக்குத் தொடுத்துள்ளது. குறித்த வழக்கு நிலுவையில் உள்ள பின்னணியில், இடைக்கால தடை உத்தரவொன்றும் வழங்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னோக்கி நகர்த்தப்பட்டுள்ள நிலையில், அந்த இயக்கம் பயங்கரவாத கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு பாதுகாப்பு அமைச்சின் செயலரால் விடுக்கப்பட்டுள்ள வர்த்தமானி எந்தளவு தூரம் நியாயமானது என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக அவ்வியக்கம் சார்பில் ஆஜராகும் சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் குறிப்பிட்டார்.
அத்துடன் தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில், வறிய மாணவர்களுக்கு கல்வியை வழங்கிய சேவ்த பேர்ள் அமைப்பு எதற்காக அப்பட்டியலில் தொடர்ந்து பெயரிடப்பட்டுள்ளது என்பது குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.
‘சேவ் த பேர்ள் ‘ பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக இதுவரை எங்கும் நிரூபிக்கப்படாத நிலையில் அந்த அமைப்பு கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டமை ஆச்சரியமானது என இது குறித்து விடிவெள்ளியிடம் பேசிய சமூக ஆர்வலர் ஒருவர் கூறினார்.
சேவ்த பேர்ள் அமைப்பு, கடந்த 2020 ஆம் ஆண்டின் பின்னர், கட்டார் அறக்கட்டளையிடம் இருந்து உதவிகளைப் பெற்றிருந்தமையை மையப்படுத்தி பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்தப்பட்டது. அவ்வமைப்பின் முன்னணி செயற்பாட்டாளராக திகழ்ந்த சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வும் கைது செய்யப்பட்டிருந்தார்.
இவ்வாறான நிலையில் கட்டார் அறக்கட்டளையை பயங்கரவாத தடைப் பட்டியலில் இருந்து இலங்கை நீக்குவதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர கட்டாரில் வைத்து 2020 இல் அறிவித்திருந்தார். அவ்வாறான பின்னணியில் கட்டார் அறக்கட்டளையிடம் இருந்து உதவிகளைப் பெற்றமையை மையப்படுத்தி பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட சேவ்த பேர்ளை புதிதாக தடை செய்யப்பட்ட அமைப்புக்கள் பட்டியலில் தொடர்ச்சியாக வைத்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதனைவிட பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து கைது செய்யப்பட்டு பின்னர் சாட்சியம் இல்லாமையால் நீதிமன்றால் விடுவிக்கப்பட்டவர்கள் உட்பட பலர் இந்த கறுப்புப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.- Vidivelli
Post a Comment