Header Ads



பறவைக்காய்ச்சல் பரவுவதால், இலங்கையிலும் விழிப்பு அவசியம்


இந்தியா போன்ற அயல் நாடுகளில்   பறவைக் காய்ச்சல் பரவி வரும் நிலையில், இலங்கையும்  அவதானத்துடன் செயற்பட வேண்டுமென உலக சுகாதார அமைப்பு  ஆலோசனை வழங்கியுள்ளது.


இலங்கையிலும்  மனிதர்களுக்கும்  பறவைக்காய்ச்சல் பரவக்கூடிய  ஆபத்து இருப்பதாகவும் அது தொடர்பில் அவதானம் செலுத்துவது அவசியம் என்றும் சுகாதார ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட மருத்துவ நிபுணர் ஜூட் ஜயமஹ தெரிவித்துள்ளார்.


பறவைக் காய்ச்சல் என குறிப்பிடப்படும் இன்புளுவன்ஸா  வைரஸ் மூலம் உருவாகும் தொற்று நோயான பறவைக் காய்ச்சல், முதலில் பறவைகளுக்கும் பின்னர் அது  ஏனைய விலங்குகள் மற்றும் மனிதருக்கும்  பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.


இந்த பறவைக் காய்ச்சல் நோய் இன்புளுவன்சா வைரஸின் பல்வேறு திரிபுகளில் ஒன்று என்றும் H5 உபகரமான இந்த வைரஸ் தீவிரமாக பரவக்கூடியது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


பிரதானமான பறவைக் காய்ச்சல் இன்புளுவன்ஸா திரிபுகளில் H5,H7,H9 மற்றும் H10 ஆகியன உள்ளடங்குகின்றன.


அந்த வகையில் மனிதரில் தொற்றும் திரிபுகளில் H5 N1,H5N8, H7N9,H7N2,H7N3,H7N7,H9N2, மற்றும் H10N 8 ஆகியவைகள் உள்ளடங்குகின்றன.


இதில் H5N1 மற்றும் H7N9  மிக கொடியது என்றும் அதனால் ஏற்படும் மரண வீதங்கள் அதிகரிக்கலாம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.


அது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் (MRI) வைரஸ் தொடர்பான விசேட மருத்துவ நிபுணர் ஜூட் ஜயமக தெரிவிக்கையில்;


பறவைக் காய்ச்சல் பல்வேறு திரிபுகளில் மனிதருக்குள் புதுவிதமான தாக்கங்களை ஏற்படுத்தலாம்.


இது தொடர்பில் கவனம் செலுத்துவது அவசியம்.


இந்த பறவைக் காய்ச்சல் மே மாதத்தில் அவுஸ்திரேலியாவில் முதலாவதாக காணப்பட்டுள்ளது. அந்த வகையில் அண்மையில் ஐக்கிய ராஜ்யத்தில் இருந்து இந்தியாவுக்கு சுற்றுலா சென்ற சிறுவனுக்கும்  இந்தத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


(லோரன்ஸ் செல்வநாயகம்)

No comments

Powered by Blogger.