பொலிஸ் நிலையம் முன், சடலத்துடன் மக்கள் போராட்டம்
நேற்றைய தினம் அதிகாலை நெடுந்தீவு ஏழாம் வட்டாரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
பிரேத பரிசோதனையின் பின் நேற்று இரவு சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்ட நிலையில் இன்று இறுதி கிரிகைகள் அவரது இல்லத்தில் நடைபெற்று அதன் பின்னர் நல்லடக்கத்திற்காக சேமக்காலைககு எடுத்துச் செல்லும் போது மக்கள் சடலத்தையும் தோள்களில் சுமந்தவாறு நெடுந்தீவு பொலிஸ் நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நேற்றைய தினம் நடைபெற்ற இளைஞர் கொலையுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் ஒருவர் ஏற்கனவே நேற்றைய தினம் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்ற நிலையில், இக்கொலையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய மூவரையும் விரைவாக கைது செய்யுமாறு கோரி நெடுந்தீவு மக்கள் சடலத்துடன் சென்று நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது பொலிசாரின் அசமந்த போக்கை சுட்டிக்காட்டிய மக்கள் பொலிசாரிடம் வாய்த்தர்க்கத்திலும் ஈடுபட்டனர்.
அதன் பின்னர் கலைந்து சென்ற மக்கள் கொலை செய்யப்பட்ட இளைஞரின் சடலத்தை சேமக்காலையில் நல்லடக்கம் செய்தனர்.
-யாழ். நிருபர் பிரதீபன்-
Post a Comment