மௌலவியை சிறைக்குத் தள்ளிய, பிச்சைக்கார குடும்பம் - வைரல் வீடியோவினால் வெளியான உண்மை
- எப்.அய்னா -
அனுராதபுரம் மாவட்டம் ஹொரவ்பொத்தான நகரில் துணிக்கடை வைத்திருக்கும் மெளலவி ஒருவர் கடந்த பெப்ரவரி மாதம், ஹொரவ்பொத்தான பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். தன் கடைக்கு யாசகம் கேட்டு வந்த பெண் ஒருவரை, யாசகம் தருவதாக கடையின் அறை ஒன்றுக்குள் அழைத்து சென்று துஷ்பிரயோகம் செய்தார் என கிடைக்கப் பெற்றிருந்த முறைப்பாடு ஒன்றுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலைய சிறுவர் மற்றும் மகளிர் விவகார விடயங்களை விசாரணை செய்யும் பிரிவினரால் கைது செய்யப்பட்ட மெளலவி பின்னர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் சில நாட்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அது குறித்த வழக்கு தொடர்கின்றது.
இந் நிலையில், அண்மையில் சமூக வலைத் தளங்களில் உணவூட்டும் போது சிறுமி ஒருவரை மிகக் கொடூரமாக ஒருவர் தாக்கும் காட்சிகள் வெளியான நிலையில், அந்த தாக்குதல்களை முன்னெடுக்கும் ‘குக்குல் சமிந்த’ எனும் பெயரால் அறியப்படும் நபரை வெலி ஓய பொலிஸார் கைது செய்தனர். அவரோடு சேர்த்து சிறுமி மீதான தாக்குதல் மற்றும் சிறுமியை கொடூரமாக நடாத்த உதவி ஒத்தாசை புரிந்ததாக கூறி, குக்குல் சமிந்தவின் சட்ட ரீதியற்ற மனைவிகள் எனக் கூறப்படும் இரு பெண்களையும் பொலிஸார் கைது செய்திருந்தனர். இவர்களின் விபரங்கள் வீடியோ காட்சிகள் பிரதான செய்தியாக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டதுடன் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கப்பட்டன.
இந்த செய்திகள் தான் ஹொரவ்பொத்தான மெளலவிக்கு நடந்த கொடுமையை வெளியே கொண்டுவரவும், அவருக்கு நியாயத்தை பெற்றுக்கொடுக்கவும் ஏதுவாக அமைந்தது எனலாம்.
ஆம், இந்த செய்திகளை ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நவீன் தயாநந்தவும் பார்த்துள்ளார். அப்போது, வெலி ஓய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மூவரில் அடங்கும் ஒரு பெண் தொடர்பில் அவர் விஷேடமாக அவதானம் செலுத்தியுள்ளார். அதற்குக் காரணம், துணிக்கடையில் வைத்து தன்னை துஷ்பிரயோகம் செய்ததாக ஹொரவ்பொத்தான பொலிஸாருக்கு முறைப்பாடளித்த பெண்னை ஒத்த சாயலில் அவர் இருந்தமையாகும். அவரது அடையாளத்தை வெலி ஓய பொலிஸார் ஊடாக பின்னர் பொறுப்பதிகாரி உறுதிப்படுத்திக்கொண்டுள்ளார்.
இது தொடர்பில் உடனடியாக தேடிப் பார்க்குமாறு, பிரதான பொலிஸ் பரிசோதகர் தயாநந்த, தனது பொலிஸ் நிலைய உப பொலிஸ் பரிசோதகர் இந்திக மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பெண் பொலிஸ் சார்ஜன் சந்தியா ஜயதிலக்க ஆகியோருக்கு ஆலோசனை அளித்துள்ளார்.
அவ்வாறு விஷேட அவதானம் செலுத்தவும் காரணம் உள்ளது. முறைப்பாட்டை அளிக்க ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலையத்துக்கு கடந்த பெப்ரவரி மாதம் வந்த அந்த பெண், அதன் பின்னர் இருக்கும் இடம் தெரியாமல் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காமல் இருந்து வந்துள்ளார். இதனால் குறித்த துஷ்பிரயோக வழக்கில் அவசியமான சட்ட வைத்திய பரிசோதனைகளைக் கூட முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. நீதிமன்றம் சட்ட வைத்திய பரிசோதனைகளுக்கான அறிவித்தல்களை பிறப்பித்தும் அவர் மன்றையும் புறக்கணித்து வந்துள்ளார். இதனாலேயே செய்திகளில் அப்பெண்ணை கண்டதும் பொறுப்பதிகாரி அது தொடர்பில் ஆராய தன் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் அளித்துள்ளார்.
இவ்வாறான நிலையில் சிறுமி மீது கொடூரமாக தாக்கியமைக்காக வெலி ஓய பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குக்குல் சமிந்தவும் இரு பெண்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். அதனால் நீதிமன்றில் பெற்றுக்கொண்ட விஷேட அனுமதிக்கு அமைய, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மூவரில் உள்ளடங்கும், கடந்த பெப்ரவரி மாதம் பாலியல் துஷ்பிரயோகம் குறித்து முறைப்பாடளித்த பெண்ணை சிறையில் வைத்தே பெண் பொலிஸ் சார்ஜன் சந்தியா ஜயதிலக்க விசாரித்துள்ளார். அப்போது தான் பல உண்மைகள் வெளிப்பட்டுள்ளன.
‘மேடம் … நாம் ஒவ்வொரு நாளும் வெலி ஓயாவில் இருந்து யாசகம் எடுக்க ஒவ்வொரு பிரதேசங்களுக்கு செல்வோம். அந்த பயணத்தில் சமிந்த, அவரது இரு மனைவிமாரான (சட்ட ரீதியற்ற) நானும் மற்றைய பெண்ணும் எனது சிறிய மகளும் செல்வோம். நாம் முச்சக்கர வண்டியிலேயே செல்வோம். எமக்கு பொய் கூறி யாசகம் எடுக்க சமிந்தவே கூறுவார். எனது மாமனார் அதாவது சமிந்தவின் தந்தை இறந்துவிட்டதாகவும் அவர் குறித்த தான விடயங்களுக்கு எனக் கூறி வர்த்தகர்கள், பொதுமக்களிடம் யாசகம் பெறுவோம்.
குழந்தையை காட்டி, அவருக்கு ஒருவகை அரிய வகை நோய் பீடித்ததாகவும், அந் நோய் குணமடைந்தால், மக்களிடம் யாசகம் பெற்று நேர்ச்சை கடன் நிறைவேற்றுவதாக வேண்டி இருந்ததாகவும், தற்போது நோய் குணமடைந்ததால் நேர்ச்சை கடனை நிறைவேற்ற யாசகம் பெறுவதாகவும் கூறி ஏமாற்றி மக்களிடம், வர்த்தகர்களிடம் பணம் பெறுவோம். இப்படி ஏமாற்றி ஒரு நாளைக்கு பெரும் தொகை பணத்தை நாம் சம்பாதித்தோம். சமிந்த கூறியதாலேயே அவற்றை நாம் செய்தோம். அவருக்கு ஊரில் குக்குல் சமிந்த என்ற பெயரும் உள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் நாம் ஹொரவ்பொத்தான நகருக்கு யாசகம் பெற சென்ற போது, அங்கு துணிக்கடை முதலாளி ஒருவருடன் பிரச்சினை ஏற்பட்டது. அப்போது முச்சக்கர வண்டியில் இருந்த சமிந்த கத்தி ஒன்றை எடுத்து வந்து, குறித்த முதலாளியை கொல்வதாக மிரட்டினார். அப்போது அந்த முதலாளி, பொலிஸாருக்கு அறிவித்து எங்களை பிடித்துக் கொடுப்பதாக கூறினார்.
இதனையடுத்து சமிந்த அவசரமாக எங்களை அழைத்துக்கொண்டு அங்கிருந்து வெளியேறினார். அந்த முதலாளி பொலிஸாரிடம் செல்ல முன்னர் நாம் முந்திக்கொள்ள வேண்டும் என சமிந்த கூறினார்.
யாசகம் எடுக்க துணிக்கடை ஒன்றுக்கு சென்ற போது, அதன் முதலாளி என்னை ஓர் அறைக்கு இழுத்துச் சென்று துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாடளிக்குமாறு சமிந்த கூறினார். அதனையே நான் செய்தேன். என் முறைப்பாட்டுக்கு அமைய அந்த முதலாளியை பொலிஸார் கைது செய்தனர். விளக்கமறியலிலும் வைத்தனர். எனக்கு வைத்திய பரிசோதனைக்கு வருமாறு பல முறை கூறியும் நான் செல்லவில்லை. ஏனென்றால் நான் செய்த பொய் முறைப்பாடு வெளிப்பட்டு விடும் என்ற பயத்தில் நான் செல்லவில்லை.’ என குறித்த பெண் விசாரணைகளின் போது வாக்கு மூலம் அளித்துள்ளார்.
இந் நிலையில், கெப்பித்திகொல்லாவ பொலிஸ் வலயத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் கே. விக்ரமநாயக்கவின் மேற்பார்வையில் உதவி பொலிஸ் அத்தியட்சர் எதிரிசிங்கவின் நெறிப்படுத்தலில் பொறுப்பதிகாரி தயாநந்தவின் ஆலோசனையில் மேலதிக விசாரணைகள் நடாத்தப்பட்டுள்ளன.
இதன்போது வெலி ஓய பகுதிக்கு ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலைய குழுவொன்று சென்று விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், குக்குல் சமிந்த இரு பெண்கள், குழந்தையுடன் ஒவ்வொரு நாளும் காலையில் முச்சக்கர வண்டியில் வெளியே செல்வதும் இரவு வேளையில் வீடு திரும்புவதாகவும் பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் அவர்கள் என்ன செய்கிறார்கள், என்ன தொழில் செய்கிறார்கள் என தெரியாது எனவும், எப்போதும் அவர்களது கையில் பணப் புழக்கம் இருந்ததாகவும் அயலவர்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இந் நிலையில், குக்குல் சமிந்த இரு பெண்களுடன் யாசகம் எடுக்கச் செல்லும் இடங்களில் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறி மேலும் பலரிடம் பணம் பறித்திருக்கலாம் எனவும் மானத்துக்கு பயந்து பலர் அவற்றை பொலிஸில் முறையிடாமல் இருந்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கும் பொலிஸார் அது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
உண்மையில், ஹொ ரவ்பொத்தான துணிக்கடை மெளலவி கைது செய்யப்பட்ட போது அவரை விசாரித்த பொலிஸார் சரிவர அவர்களது கடமைகளை செய்தனரா என்ற கேள்வி எழுகின்றது. காரணம், வெறுமனே முறைப்பாட்டாளர் கொடுத்த தகவலை மட்டும் வைத்துக்கொண்டு வேறு எந்த சாட்சிகளும் இன்றி அவர் கைது செய்யப்பட்டமையே அவ்வாறான சந்தேகத்துக்கு காரணமாகும். இது தொடர்பில் அப்போது கைது செய்த அதிகாரிகளுக்கு எதிராக நிறுவன மட்ட நடவடிக்கைகள் அவசியமாகும்.
அவ்வாறு குறித்த மெளலவி கைது செய்யப்பட்டது முதல் தன் மீதான துஷ்பிரயோக குற்றச்சாட்டை மறுத்து வந்துள்ளார். கடைக்குள் வைத்து துஷ்பிரயோகம் செய்ததாக முறைப்பாட்டில் இருந்த போதும் குறித்த தினம் அக்கடை மூடப்பட்டே இருந்துள்ளது. அது தொடர்பில் கூட அப்போது பொலிஸார் அவதானம் செலுத்தி இருக்கவில்லை.
இது தொடர்பில் விடிவெள்ளி ஆராய்ந்த போது, குறித்த கைது நடக்கும் போது ஹொரவ்பொத்தானை பொலிஸ் பொறுப்பதிகாரி இருக்கவில்லை எனவும் பெண் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவரே அந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமையும் தெரியவந்தது. எனவே மெளலவியின் கைது தொடர்பில் உரிய பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக நிறுவன மட்ட நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டும்.
இதனைவிட, பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டிருந்தபோதும், குற்றச்சாட்டை முன் வைத்த பாதிக்கப்பட்டதாக கூறப்பட்ட பெண்ணை இதுவரை சட்ட வைத்திய பரிசோதனைகளுக்கு உட்படுத்தாமை விசாரணையின் பாரிய குறைபாடாகும்.
உண்மையில் மெளலவியை நீதிமன்றில் ஆஜர் செய்தபோது, சட்ட வைத்திய அதிகாரியிடம் குறித்த பெண்ணை முன்னிறுத்தி அறிக்கை பெற நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த போதும், அன்றைய தினம் குறித்த பெண்ணுக்கு மாதவிடாய் காலம் என்பதால் அந் நடவடிக்கை தாமதித்துள்ளது. எனினும் அதன் பின்னர் அவர் சட்ட வைத்திய பரிசோதனைகளுக்கு முகம் கொடுக்கவே இல்லை.
பொலிஸாரின் பொறுப்பற்ற நடவடிக்கையால் ஒரு அப்பாவி மெளலவி சந்தித்த கொடுமைகள் ஏராளம். இதனால் அவர் சமூக அந்தஸ்துக்கு பாரிய இழுக்கு ஏற்பட்டதுடன் அவரது குடும்பத்தினர் பிள்ளைகள் முகம் கொடுத்த மன உளைச்சல் நிலைமைக்கு யார் பொறுப்புக் கூறுவது?
தற்போது, இச்சம்பவத்தின் உண்மை நிலைமை வெளிப்பட்டுள்ள நிலையில், இது குறித்து நீதிமன்றுக்கு அறிவித்து, இந்த துஷ்பிரயோக சம்பவம் ஒரு நாடகம் என்பதையும், அதற்கும் மெளவிக்கும் எந்த தொடர்புகளும் இல்லை என்பதையும் அறிவித்து, மெளலவியை முற்றாக வழக்கில் இருந்து விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக ஹொரவ்பொத்தான பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அதே நேரம் பொய் முறைப்பாடு தொடர்பில் குறித்த முறைப்பாட்டை அளித்த பெண்ணுக்கும், அதற்கு உடந்தையாக இருந்த குக்குல் சமிந்தவுக்கும் எதிராக பிறிதொரு வழக்கினை தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.- Vidivelli
Post a Comment