Header Ads



சவூதி அரேபியாவுக்கான இலங்கையின், புதிய தூதுவருக்கு தகாமுல் நிறுவனம் வரவேற்பு


சவுதி அரேபியாவின் தொழில் அமைச்சின் பிரதிநிதியும் சவுதி அரேபிய தொழிற்சந்தையை அபிவிருத்தி செய்து முகாமை செய்கின்ற நிறுவனமுமான ‘தகாமுல் ஹோல்டிங்ஸ்’ (Takamol Holdings) சவுதிக்கான இலங்கையின் புதிய தூதுவர் உமர் லெப்பை அமீர் அஜ்வத் அவர்களை கௌரவிக்கும் வகையில் இம்மாதம் 6ம் திகதி பகலுணவு விருந்தொன்றினை ஏற்பாடு செய்திருந்தது.


சவுதி அரேபியாவுக்கான புதிய இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வத் அவர்களை வரவேற்றுப் பேசிய  நிறுவனத்தின் பணிப்பாளர் டாக்டர் வாபி அஸ்ஸிர்ரி, தகாமுல் நிறுவனம் தோற்றம் பெற்ற காலம் முதல் இலங்கை அதன் மிக நெருங்கிய பங்காளியாக இருந்து வருவதாகத் தெரிவித்ததுடன் இனிவரும் காலங்களிலும் இலங்கைக்கான புதிய தூதுவருடன் நெருங்கிச் செயற்பட எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.


இக்கலந்துரையாடலின் போது தூதுவர் அமீர் அஜ்வத் அவர்கள், ரியாதில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு தகாமுல் நிறுவனம் வழங்கி வருகின்ற ஆதரவுக்கும் கூட்டுறவுக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டதுடன் பரஸ்பரம் இரு நாடுகளும் பயனடைவதை நோக்காக கொண்டு தொழில் சார்ந்த இருதரப்பு உறவுகளை மேலும் மேம்படுத்திக் கொள்ள வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார். சவூதி அரேபிய தொழில் சந்தையில் இலங்கை மனிதவளம் சிறந்த பங்களிப்புச்செய்ய முடியும் எனவும் சுட்டிக்காட்டினார். 


தகாமுல் நிறுவனமே சவூதி அரேபியாவின் மனித வளங்கள் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சகத்தின் முன்னெடுப்புக்களில் ஒன்றான  முஸானத் இலத்திரனியல் தளத்தைக் கையாளுகிறது.  முஸானத் இலத்திரனியல் தளம் என்பது ஒருங்கிணைக்கப்பட்ட விதத்தில் வீட்டுப் பணியாளர்கள்  ஆட்சேர்ப்புச் செய்யப்படுவதை உறுதிப்படுத்தி, அனைத்து தரப்பினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை அதிகரிக்கும் நோக்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ஒரு முன்னெடுப்பாகும்.


இலங்கையும் சவுதி அரேபியாவும் 2014 ஆம் ஆண்டு வீட்டுப் பணியாளர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டன. மேலும் ஆட்சேர்ப்புச் செயன்முறையை நெறிப்படுத்தி அதில் ஏற்படுகின்ற குறைபாடுகளை தீர்க்கும் நோக்கில் 2015 ஆம் ஆண்டு முஸ்ஸானத் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது.


இலங்கையின் மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவும்,  தகாமுல் நிறுவனமும் சவுதி தொழிலாளர் சந்தையிலுள்ள பணியாட்களின் தொழிற் தேர்ச்சியினை மேம்படுத்துவதனை நோக்காகக் கொண்டு  திறன்களைக் கண்டறிவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் அண்மையில் கைச்சாத்திட்டன. இதன் மூலம் இலங்கையிலிருந்து செயற்றிறன் வாய்ந்த பணியாளர்களை ஆட்சேர்ப்புச் செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்நிகழ்வின் போது சவூதி அரேபிய தரப்பில் சவூதி தொழில் அமைச்சின் மனிதவள மற்றும் சமூக அபிவிருத்திக்கான பொது முகாமையாளர் முஹம்மத் அல்பக்ரி, தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சர்வதேச விவகாரங்களுக்கான பொது முகாமையாளர் முஹம்மத் அல் ஷஹரி மற்றும் முஸானத் அதிகாரி அப்துல்லாஹ் அல்குவைர் ஆகியோர் கலந்து கொண்டதுடன், இலங்கை சார்பில் தூதரகப் பிரதானி மொகமட் அனஸ் மற்றும் தொழிலாளர் கவுன்சிலர் எச். டபிள்யூ.  சமந்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.


இலங்கை தூதரகம்

ரியாத்

10.06.2024


No comments

Powered by Blogger.