ஆட்சியாளர்கள் இஸ்ரேலோடு கள்ள உறவு, ஏன் இவற்றுக்கு எதிராக பேச முடியாது..?
தொகுப்பு - லயானா மஹ்தியா காளிமுத்து
இன்று அகில உலகெங்கிலும் முஸ்லிம்களுடைய மிகபெரிய அவலமாக மாறி இருக்கின்ற பலஸ்தீன பிரச்சினை, அந்த ப்பிரச்சினைக்கான தீர்வு அதை இழுத்தடிக்கின்ற வல்லரசுகள் அந்த வல்லரசுகளுக்கு எதிரான போராட்டம் இதை நாம் எந்த அளவுக்கு செய்தோம் என்பதை எங்களை நாங்களே கேள்வி கேட்கக் கடமை பட்டுள்ளோம்.
இப்போது அமெரிக்காவில் எல்லா பல்கலைகழகங்களிலும் போராட்டம். அமெரிக்க பல்கலைகழகங்களில் உள்ள யூத மாணவர்களும் பலஸ்தீனத்துக்கு ஆதரவாகப் பேசுகின்றார்கள். நடக்கின்ற அநியாயத்துக்கு எதிராகப் பேசுகின்றார்கள். அவர்களை அடக்கி ஒடுக்குவதற்காக அரசியல் சக்திகள் பொலிசாரை அனுப்பினாலும் ,நெஞ்சை நிமிர்த்தி அவர்களோடு வாதிடுகிறார்கள். பல்கலைகழக பேராசிரியர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். இந்த நிலையில் நாம் பச்சோந்தித் தனமாக இஸ்ரேலுக்கு எதிரான எதிர்ப்பை பேசிவிட்டோம், காட்டமாகச்சொல்லி விட்டோம் என்பதோடு நின்று விடுவதா? ஏன் ஆட்சியாளர்களை கேள்விக்குட் படுத்துவதில்லையா?
ஆட்சியாளர்கள் இரண்டு தேசங்கள் அமைய வேண்டும். பலஸ்தீனம், இஸ்ரேலும் இரண்டு தேசங்களாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பது எமது வெளிநாட்டுக் கொள்கை என்று சொல்லிக் கொள்கின்றார்கள் அது இன்னும் நான்கு வருட காலத்தில் மலரும் என்றும் அரசாங்க தலைவர்கள் அறிக்கை யிடுகின்றார்கள். ஆனால், இஸ்ரேலோடு கள்ள உறவு கொண்டாடுகின்றார்கள். அமெரிக்கர்கள் கேட்பதை எல்லாம் அடி பணிந்து செய்கின்றார்கள்.
செங்கடலுக்கு கப்பல் அனுப்புங்கள் என்றால், இங்கு இருக்கும் மீன்பிடிப் படகுகள் போன்ற கடற்படை படகுகளை இஸ்ரேலுக்கும், அமெரிக்காவுக்குமாக அனுப்புகின்றார்கள். என்ன கேவலமான வேலைகளை எங்களின் அரசாங்கம் செய்கின்றது?
தென்னாபிரிக்கா அரசாங்கம் சர்வதேச நீதிமன்றத்துக்கு முன்னால் இஸ்ரேலுக்கு எதிராக, அவர்கள் செய்யும் போர் குற்றங்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கின்றார்கள். நாங்களும் காலநிலை மாநாடு என்று போய் சர்வதேச நாடுகளுக்கு சவால் விடுகின்றோம். ஆனால் இந்த இஸ்ரேலுக்கு எதிராக ஒரு சவாலும் கிடையாது. இஸ்ரேல் அபகரித்த பலஸ்தீன மண்ணில் குடியேற்றங்களை செய்து கொண்டு போகின்றது. இன்னும் 4, 5 வருடங்கள் போனால் பலஸ்தீனர்கள் குடியிருக்க ஓர் அங்குல நிலமும் மிஞ்சி இருக்காது. அமெரிக்க அப்பாவி மக்களின் வரிப்பணத்தில் குண்டு மழை பொழிகின்றார்ள். அபகரித்த பூமியில் மாடிவீடுகளைக் கட்டுகின்றார்கள். குடியேற்றங்களை செய்கின்றார்கள்.
ஏன் இவற்றுக்கு எதிராக இலங்கை அரசாங்கத்தினால் பேச முடியாது. அதை பற்றி ஒரு வார்த்தை கிடையாது. காத்திரமாக சொல்லுங்கள், குடியேற்றங்களை நிறுத்துங்கள். இந்த யுத்தத்தை நிறுத்துங்கள், உடனடியாக போர் நிறுத்தங்கள் செய்யுங்கள். ஐக்கிய நாடுகள் சபையில் இஸ்ரேலுக்கு எதிராக வாக்களித்த கூட்டத்தில் நாம் இருக்கின்றோம். அமெரிக்காவுடைய “வீட்டோ” ஐக்கிய நாட்டின் பொதுச்சபையின் தீர்மானத்தையும் ரத்து செய்கின்ற அதிகாரம் நிரந்தர பாதுகாப்பு சபையின் உறுப்பினர் என்ற அடிப்படையில் அமெரிக்காவின் கைகளில் இருக்கும் வரை இஸ்ரேலை ஒன்றும் செய்து விட முடியாது.
நாங்கள் அமெரிக்கா கூறியதும் செங்கடலுக்கு படகுகளை அனுப்புகின்றோம். இந்த இரட்டை வேடம் களையப்பட வேண்டும். இதை களைந்து நேரடியாக அப்பாவி பலஸ்தீன் மக்களின் விடிவுக்காக எங்கள் நாட்டின் அரசும் தலைமைகளும் பேச வேண்டும். இதுதான் காலத்தின் தேவை.
இரண்டாம் உலக மகா யுத்தம் முடிந்ததும் ஜே.ஆர். ஜெயவர்தன சென்பிரான்சிஸ்கோ மாநாட்டில் போய் ஜப்பானுக்கு சார்பாகப் பேசினார். அனைவரும் ஹிட்லரோடு சேர்ந்து ஜப்பான் இரண்டாம் மகா யுத்தத்தில் பாதிக்கப்பட்ட போது ஹிரோஷீமா, நாகசாகியில் அணுகுண்டுகள் பொழியப்பட்டு அழிக்கப்பட்ட போது, ஜப்பானை துண்டு போடுவதற்கு, ஜப்பானை பங்கிட்டு கொள்வதற்கு மேற்கத்தைய வல்லரசுகள் முனைப்புக் காட்டிய போது, ஜப்பானுக்காக பேசினார் என்பதுதான் ஜே. ஆர். ஜெயவர்தனவுக்குரிய அந்தஸ்த்து. ஜே. ஆர். ஜெயவர்தன ஜப்பானுக்கு எப்போது போனாலும் அவருக்கு அங்கு தனியான மரியாதை. ஏன் என்றால் எல்லா வல்லரசு நாடுகளும் தங்களது நாட்டை கூறு போடுவதற்கு, பங்கிட்டு கொள்வதற்கு எத்தனித்தபோது, பௌத்த தர்மத்தின் அடிப்படையில் ஜப்பானுக்கு மன்னிப்பு வழங்குங்கள், ஜப்பானை மீள கட்டியெழுப்புவதற்கு உதவுங்கள். என்று அவர் துணிகரமாகச் சொன்னார் என்பதற்காக அவருக்கு அந்த மரியாதை.
இந்த அளவு அநியாயம் நடக்கின்ற போது இஸ்ரேலுக்கு எதிராக பலஸ்தீனத்துக்கு ஆதரவாக பேசிய தலைவர்கள் எமது நாட்டில் இல்லை.
இந்த பம்மாத்து வேலைகளை விட்டு விட்டு பலஸ்தீனர்களுடைய அவலங்கள் முழுமையாக தீர்வதற்கு அவர்களுக்கு அந்த அங்கீகாரம் கிடைப்பதற்கு மிகப் பெரிய போராட்டங்களை செய்வதற்கு இந்த நாட்டில் இருக்கின்ற சகல இன மக்களையும ஒன்று திரட்டுகின்ற பணியில் நாம் இறங்க வேண்டும். இது முடிவுராத போராட்டமாக இருந்தாலும் நியாயமான, நேர்மையான போராட்டம். உலகெங்கிலும் கிளர்ச்சி வெடிக்கின்றது. எமது பிரகடனங்களிலும் இது விடயமாக பேசப்பட்டது.
Post a Comment