Header Ads



அரசியல்வாதியின் வாகனத்தில் மோதுண்ட இளைஞன் : பலரை வாழ வைத்து விட்டு உயிரிழப்பு


நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியில் மோதி 08 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் நேற்று உயிரிழந்துள்ளார்.


திஹாரிய, கல்கெடிஹேன பகுதியைச் சேர்ந்த 22 வயதான ஷனுக ரவிந்து என்பவரே உயிரிழந்துள்ளார். இந்த இளைஞன் மோட்டார் சைக்கிள் விற்பனை தொழில் செய்து வந்ததாக கூறப்படுகிறது.


குறித்த இளைஞன் விபத்தில் சிக்கிய நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்துள்ளார்.


இந்த நிலையில் அவர் அவசர சிகிச்சைப் பிரிவில் உயிருக்கு போராடியுள்ளார். மூளைச்சாவு அடைந்ததை மருத்துவர்கள் முடிவு செய்ததையடுத்து, இளைஞரின் பெற்றுார் சிறுநீரகம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளனர்.


விபத்துக்கு முன்னர் குறித்த இளைஞனின் விருப்பத்தை கருத்தில் கொண்டு குடும்பத்தாரின் தகவல் குறிப்பிடப்பட்டுள்ளது.


அதற்கமைய, நேற்றிரவு இளைஞனின் உறுப்புகள் அகற்றப்பட்டு மூன்று பேருக்கு மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


கடந்த 03ஆம் திகதி காலை இந்த இளைஞன் விபத்தில் சிக்கியுள்ளார். கொழும்பு பிரதான வீதியில் கொங்கஸ்தெனிய சந்திக்கு அருகில், நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார பயணித்த ஜீப், இளைஞன் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.


இந்த விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை என்பதுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் காயமடைந்து வத்துப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குறித்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.


இந்த விபத்தின் காரணமாக அந்த இளைஞன் தலையில் பலத்த காயம் அடைந்து விபத்து நடந்த நேரம் முதல் சுயநினைவின்றி இருந்துள்ளார். விபத்து நடந்த போது, ​​அப்பகுதியில் மழை பெய்து கொண்டிருந்தது.


விபத்தின் பின்னர், நளின் பண்டார பயணித்த ஜீப் வண்டியின் சாரதியை நிட்டம்புவ பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.