Header Ads



ஜனாதிபதியின் கருத்து ஆபத்தானது


தேர்தலை ஒத்தி வைத்து பதவிக்காலத்தை நீடிப்பதற்கு ஜனாதிபதி முயற்சிப்பதாக கூறப்படும் நிலையில், பாலியல் சமத்துவம் தொடர்பான சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ஜனாதிபதி ஏற்றுக்கொள்ளாமை எதிர்காலத்தில் ஆபத்தானதாக மாறலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் புதன்கிழமை (19) விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றும் போதே சுமந்திரன் இவ்வாறு கூறினார்.

 

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் நிறைவேற்றப்படும் போது நீதிமன்ற அறிவிப்புகளையும் தாண்டி எதிர்ப்புகளுக்கு மத்தியில் சாதாரண பெரும்பான்மையில் நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து இரண்டாவது முறையாக பால்நிலை சமத்துவம் தொடர்பான சட்டமூலம் குறித்த உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பின்பற்றத் தேவையில்லை என்று கூறியுள்ளார். இதற்கு காரணம் என்ன? அதாவது கூடியவிரைவில் ஜனாதிபதியின் பதவிக்காலத்தை 6 வருடங்களாக அதிகரிக்க முயற்சிக்கின்றனர் என்றார். 


அதனை செய்வதென்றால் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு மேலதிகமாக சர்வஜன வாக்கெடுப்புக்கு செல்ல வேண்டுமென்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தால் அதனை செய்யாது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் மட்டும் அதனை நிறைவேற்ற முயற்சிக்கலாம். எம்.பிக்களுக்கு இலஞ்சம் கொடுத்து நிறைவேற்றவே திட்டமிடுகின்றனர். இதுவே பாலியல் சமத்துவம் தொடர்பான சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு மதிப்பளிக்காமை காரணமாக உள்ளது. இது ஆபத்தான முன்னுதாரணம். இது தொடர்பில் மிகவும் கவனமாக சபாநாயகர் உள்ளிட்ட நாங்கள் இருக்க வேண்டும்.


பாராளுமன்றம்  அரசியலமைப்புக்கு அமையவே செயற்பட வேண்டும். நீதிமன்றம் வியாக்கியானத்துக்கு அமையவே நடந்துகொள்ள வேண்டும். இந்நிலையில், ஜனாதிபதியின் கருத்து பிற்காலத்தில் ஆபத்தானதாக இருக்கும் என்றார்.  

No comments

Powered by Blogger.