Header Ads



டாக்டர்களுக்கான உணவகத்தில் பேரதிர்ச்சி




களுபோவிலை போதனா வைத்தியசாலையில் டாக்டர்களுக்கான உணவகத்தில் விற்பனை செய்யப்பட்ட மனித பாவனைக்கு பொருத்தமற்ற ஒரு தொகை உணவுப் பொருட்களை கைப்பற்றியுள்ளதாக,  தெஹிவளை பிரதம பொதுச் சுகாதாரப் பரிசோதகர் வசந்த புஷ்பகுமார தெரிவித்தார்.  நகர ஆணையாளரின்  பணிப்புரையின் கீழ் நேற்று தெஹிவளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் அங்கு  மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இவ்வாறு மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகவும், அவர் தெரிவித்தார்.


நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை காரணமாக உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் ஆகியவற்றின் தயாரிப்பு நிலை, அவற்றின்  தரம் தொடர்பாக  பிரச்சினைகள் காணப்படுவதாக தமக்கு கிடைத்த தகவல்களுக்கு இணங்க கடந்த சில தினங்களாக களுபோவிலை போதனா வைத்தியசாலை மற்றும் அதனை அண்டிய சிற்றுண்டிச்சாலைகள்,  உணவகங்கள் இவ்வாறு சுற்றிவளைப்புக்கு உட்படுத்தப்பட்டன. அதன்போதே வைத்தியசாலையின் டாக்டர்களுக்கான இந்த உணவகமும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், அவர் கூறினார்.


களுபோவிலை வைத்தியசாலையில் இரண்டு உணவகங்கள் உள்ள நிலையில் அங்கு டாக்டர்களுக்கான உணவகத்தில் சுகாதார பாதுகாப்பற்ற நிலை காணப்படுவதாகவும் அவற்றில்  களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள பொருட்களில் மனித பாவனைக்கு உதவாத  பழைய பராட்டா உள்ளிட்ட உணவுகள், சமைத்த கறி வகைகள் பாத்திரங்களிலும் குளிரூட்டிகளிலும் வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாகவும்,  அவர் தெரிவித்தார்.


அங்கு ஈக்கள், எறும்புகள் மொய்த்த நிலையிலும் பல உணவுகள் காணப்பட்டதாகவும் அவற்றை அங்கிருந்து அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும்,  அவர் தெரிவித்தார்.


முறையான வகையில் உணவுகளை தயாரிப்பது மற்றும் பாதுகாப்பது தொடர்பாக அந்த உணவகத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு வழிகாட்டல்  வழங்கப்பட்டதுடன், பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்களும் உணவகத்தின் உரிமையாளருக்கு அறிவிக்கப்பட்ட பின்னர் அதிகாரிகளால் அழிக்கப்பட்டதாகவும், அவர் மேலும் தெரிவித்தார்.


மேற்படி வைத்தியசாலையை அண்டிய பகுதிகளில் காணப்பட்ட உணவகங்கள் மற்றும் வர்த்தக நிலையங்களில் காணப்பட்ட மனித பாவனைக்கு பொருத்தமற்ற உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அளிக்கப்பட்டதாகவும் அந்த வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் கங்கொடவில மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.