Header Ads



நாய் கடிக்கு இலக்கான சிறுமி - நீதிகோரும் குடும்பத்தினர்


கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட குமாரசாமிபுரம் பகுதியில் கடந்த 10.05.2024 அன்று நாய் கடிக்கு இலக்கான சிறுமி ஒருவர் உரிய சிகிச்சை பெறாத நிலையில் கடந்த 25,06.2024 அன்றைய தினம் வலிப்பு ஏற்பட்டதன் காரணமாக தருமபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அங்கிருந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.


தொடர்ந்து அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கடந்த 26 ஆம் திகதி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 


தியாகரன் சாருஜா என்ற நான்கு வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்த நிலையில் இன்று (28) சடலம் கையளிக்கப்பட்டுள்ளது.


இதேவேளை மேலும் 4 பேர் குறித்த நாய்க் கடிக்கு இலக்கானதுடன் அவர்களுடன் சிறுமியின் பராமரிப்பில் தொடர்பு வைத்திருந்த 11 பேருக்கும் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்தியரின் ஆலோசனைகளுக்கு அமைவாக முற்பாதுகாப்பு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. 


இந்த நிலையில் குடும்பத்தினரும், பாதிக்கப்பட்டவர்களும், பிரதேச மக்களும் சுகாதார தரப்பினர் மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.


நாய்க் கடிக்கு உள்ளான சிறுமியை சிகிச்சைக்காக அழைத்து சென்ற போது, குறித்த நாய்க்கு தடுப்பூசி போடப்பட்டதா என கேட்ட வைத்தியருக்கு ஆம் என்று அழைத்து சென்ற உறவினர் கூறியுள்ளார்.


நாய்க்கு தடுப்பூசி போடப்பட்டதாலும், சிறுமிக்கு குழந்தையில் போடப்படும் தடுப்பூசி போடப்பட்டதாலும் மேற்கொண்டு விசர் நாய் தடுப்பு ஊசி போட வேண்டியதில்லை எனக் கூறி வைத்தியர் அனுப்பி வைத்துள்ளர்.


இதேவேளை, குறித்த நாய் கடித்ததாக 12, 14 வயதுடைய சிறுவர்களும் தர்மபுரம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்ற போது, அதே பதிலை வைத்தியர் வழங்கியுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் ஊடகங்களிற்கு தெரிவிக்கின்றனர்.


நாய் கடித்த சம்பவம் தொடர்பில் சிகிச்சைக்காக செல்லும் போது, குறித்த நாய் தொடர்பில் அறிந்து கொள்வதுடன், நாய்க்கு செலுத்தப்படும் தடுப்பூசி அட்டையை பார்வையிட்ட பின் சிகிச்சை வழங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


2020ம் ஆண்டு குறித்த நாய்க்கு வழங்கப்பட்ட தடுப்பூசிக்கு பின்னர் எந்த தடுப்பூசியும் வழங்கப்படவில்லை என்பதை குறித்த நாய்க்கு வழங்கப்பட்டுள்ள தடுப்பூசி அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இந்த நிலையில், சுகாதார தரப்பினரின் கவனயீனமும் இந்த சிறுமியின் இறப்புக்கு காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.


இந்த விடயம் தொடர்பில் மரண விசாரணையின் போதே தமக்கு தெரிய வந்தது எனவும், தனது பிள்ளையின் மரணத்துக்கு சுகாதார தரப்பினரே காரணம் எனவும் சுட்டிக்காட்டும் உயிரிழந்த சிறுமியின் தந்தை, தனது பிள்ளைக்கு நடந்ததது போன்று யாருக்கும் நடக்கக் கூடாது என கண்ணீர் மல்க கூறுகின்றார்.


விசர் நாய்க்கடி தொடர்பில் தமது பிரதேசத்தில் எந்தவொரு விழிப்புணர்வு செயற்திட்டங்களும் இதுவரை முன்னெடுக்கப்படவில்லை எனவும் பிரதேச மக்களால் சுட்டிக்காட்டப்படுகின்றது.


மிகவும் பின்தங்கிய குறித்த கிராமம் போன்று பல கிராமங்கள் உள்ளன. விசர்நாய்க்கடி தொடர்பான விளக்கங்களையும், விழிப்புணர்வுகளையும் இனியாவது மேற்கொண்டு உயிர்களை பாதுகாக்க வேண்டும் என பிரதேச மக்கள் வினயமான கோரிக்கை முன்வைக்கின்றனர்.


-கிளிநொச்சி நிருபர் சப்தன்-

No comments

Powered by Blogger.