பலஸ்தீனம் பற்றி தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு, ஏன் உணர்வு ஏற்படவில்லை...?
(அஸ்லம் எஸ்.மெளலானா)
டலஸ்தீன் மீதான இஸ்ரேலின் இனவெறித் தாக்குதல்களைக் கண்டித்து மேற்குலக நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களில், மாணவர் போராட்டங்கள் வீரியமாக முன்னெடுக்கப்படுகின்ற போது அந்த உணர்வானது இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு ஏன் ஏற்படவில்லை என்று மருதமுனை ஜம்இய்யதுல் உலமா தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் அன்ஸார் மௌலானா (நழீமி) கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
இஸ்லாமிய வரலாற்றில் பலஸ்தீன் ஓர் இதயமாகத் திகழ்வதாலும் மூன்றாவது புனிதஸ்தலமான மஸ்ஜிதுல் அக்ஸா அங்கு அமைந்திருப்பதாலும் இதன் ஆரம்ப வரலாறு, போராட்டங்கள்
நடைபெற்ற பின்னணி மற்றும் அதன் புதிய பரிமாணங்கள் தொடர்பாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஓர் ஆயவு மாநாட்டை நடாத்த வேண்டியதன் அவசியம் உணரப்படுகின்றது.
கடந்த பல மாதங்களாக தமது சுயநிர்ணயத்திற்காக பலஸ்தீன மக்கள் உறுதியோடும் வீரத்தோடும் தொடர் போராட்டத்தில் ஈடுபடுவது
எமது ஈமானிய உணர்வுகளுக்கு உரமூட்டுகிறது.
காஸாவில் தொடங்கி தற்போது ரபாவின் எல்லையில் முடக்கப்பட்டு வாழ்வாதா? மடிவதா? என்ற ஜீவ மரண போராட்டத்தின் உச்சத்தினை பலஸ்தீன் மக்கள் அடைந்திருக்கின்றார்கள்.
இந்நிலையில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், பிரித்தானியா போன்ற மேற்குலக நாடுகளிலுள்ள பல்கலைக் கழகங்களில் மாணவர் போராட்டங்கள் வீரியமாக முன்னெடுக்கப்படுகின்ற போது அந்த உணர்வானது இலங்கையில் முஸ்லிம் பெரும்பான்மை அடையாளத்தைக் கொண்டிருக்கும் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் கதவை ஏன் தட்டவில்லை என்று சிவில் சமூகத்தினர் கேள்வி எழுப்புகிறார்கள்.
பலஸ்தீன் சுதந்திர இறைமையுள்ள தனி நாடாக மாறும் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் ரத்துச் செய்யும் அதிகாரத்தை அமெரிக்கா கையில் எடுத்தால் அதற்கான மாற்று வழிமுறையை சர்வதேச இஸ்லாமிய சமூகம் முன்னெடுப்பது அவசியமாகும். இவ்வாறான சூழ்நிலையில் பலஸ்தீன் தொடர்பான ஓர் ஆய்வு மாநாட்டின் மூலம் தெளிவையும் தீர்வையும் பெறலாம் என்று சிவில் சமூகங்கள் எதிர்பார்க்கின்றன.
ஆகையினால் இனியும் தாமதியாமல் தென்கிழக்கு பல்கலைக் கழகத்தில் பலஸ்தீனம் தொடர்பிலான ஆய்வு மாநாடு ஒன்றை அவசரமாக நடாத்துவதற்கான ஏற்பாடுகளை செய்வதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் முன்வர வேண்டும்- என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
Post a Comment