"இருதய சத்திர சிகிச்சை நிபுணராகி, உயரிய சேவை செய்ய ஆசை"
(எஸ்.அஷ்ரப்கான்)
க.பொ.த.உயர் தர பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மருத்துவத்துறையில் அம்பாறை மாவட்டத்தில் முதல் இடம் பிடித்த கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலை மாணவன் பிர்தெளஸ் இஹ்ஸான் அஹமட் மருத்துவத் துறைக்கு தெரிவாகியுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்தில் முதல் இடத்தைப் பெற்றுள்ளார்.
இவரது எதிர்கால இலட்சியம் சிறந்த ஒரு "இருதய சத்திர சிகிச்சை நிபுணராக" வந்து, இந்த நாட்டுக்கும் தனது பிரதேச மக்களுக்கும் உயரிய சேவை செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
கல்முனையைச் சேர்ந்த முஹம்மது பிர்தெளஸ், வை.எல்.சம்சுன் நிஷா ஆகியோரின் மூன்றாவது புதல்வரான இவர் தனது ஆரம்பக் கல்வியை கல்முனை அல்- மிஸ்பாஹ் மகா வித்தியாலயத்திலும் பின்னரான கல்வியை கல்முனை ஸாஹிறா தேசிய பாடசாலையிலும் கற்றார்.
இவர் ஆரம்ப காலம் முதலே சிறந்த நல்லொழுக்கமும் நற்பண்புகளும் நிறைந்தவராக காணப்பட்டதுடன் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் அதிக ஆர்வம் கொண்டு செயல்பட்டு பல பரிசில்களையும் பெற்றார். அதுபோன்று பாடசாலை மட்ட வலையமட்ட போட்டிகளிலும் தன்னை ஈடுபடுத்தி திறமைகளை வெளிகாட்டினார்.
சிறந்த மார்க்கப்பற்றும் இறை நம்பிக்கையும் கொண்ட இஹ்ஸான் அஹமட், கொரோனா மற்றும் பொருளாதார பிரச்சினை என பல தடைகள் இருந்தபோதும் அதனை சவாலாக எடுத்து தனது அயராத முயற்சியின் காரணமாக இந்த அடைவினை இறைவனின் உதவியுடன் பெற்றுள்ளார்.
இவரது இந்த அடைவினை பெறுவதற்கு காரணமாக இருந்த இவரது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர், பாடசாலை அதிபர், தனக்கு கற்பித்த பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலைய ஆசிரியர்கள் என அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள் என்பதோடு இவரது நண்பர்கள் உட்பட அனைவருக்கும் இவர் நன்றி கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment