தென்னாபிரிக்கா 7 ஓட்டங்களால் தோல்வி
பார்படோஸில் தற்போது முடிவுக்கு வந்த தென்னாபிரிக்காவுடனான இறுதிப் போட்டியில் வென்றமையைத் தொடர்ந்தே இரண்டாவது தடவையாக இருபதுக்கு - 20 உலகக் கிண்ணத்தை இந்தியா கைப்பற்றியது.
இப்போட்டியின் நாணயச் சுழற்சியில் வென்ற இந்திய அணியின் தலைவர் றோஹித் ஷர்மா, தமதணி முதலில் துடுப்பெடுத்தாடுமென அறிவித்தார்.
அந்தவகையில் விராட் கோலி, ஷர்மா மூலம் வேகமாக ஆரம்பித்த இந்தியா இரண்டாவது ஓவரிலேயே ஷர்மா, அடுத்து வந்த றிஷப் பண்டை கேஷவ் மஹராஜ்ஜிடம் பறிகொடுத்தது. பின்னர் ககிஸோ றபாடாவிடம் சூரியகுமார் யாதவ்விடம் இழந்து தடுமாறியது.
எனினும் கோலியுடன் இணைந்த அக்ஸர் பட்டேலின் 47 (31) ஓட்டங்கள் காரணமாக ஓட்டங்களைச் சேகரித்த இந்தியா, கோலியின் 76 (59), ஷிவம் டுபேயின் 27 (16) ஓட்டங்களோடு 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களைப் பெற்றது. பந்துவீச்சில் அன்றிச் நொர்கியா 4-0-26-2 என்ற பெறுதிகளைக் கொண்டிருந்தார்.
பதிலுக்கு 177 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா ஆரம்பத்திலேயே றீஸா ஹென்ட்றிக்ஸ், அணித்தலைவர் ஏய்டன் மார்க்ரமை ஜஸ்பிரிட் பும்ரா, அர்ஷ்டீப் சிங்கிடம் பறிகொடுத்தது.
பின்னர் குயின்டன் டி கொக்கும், ட்ரிஸ்டன் ஸ்டப்ஸும் இனிங்ஸைக் கட்டியெழுப்பிய நிலையில் 31 (21) ஓட்டங்களுடன் பட்டேலிடம் ஸ்டப்ஸ் வீழ்ந்தார். தொடர்ந்து வந்த ஹென்றிச் கிளாசென் வேகமாக ஓட்டங்களைப் பெற்ற நிலையில் 39 (31) ஓட்டங்களுடன் அர்ஷ்டீப் சிங்கிடம் டி கொக் வீழ்ந்தார்.
தொடர்ந்து வந்த டேவிட் மில்லரும் வேகமாக ஓட்டங்களைப் பெற்ற நிலையில் வெற்றியிலக்கை நோக்கி தென்னாபிரிக்கா நகர்ந்து 30 பந்துகளில் 30 ஓட்டங்களைப் பெற வேண்டியிருந்தது. இச்சந்தர்ப்பத்தில் 52 (27) ஓட்டங்களுடன் ஹர்திக் பாண்டியாவிடம் கிளாசென் வீழ்ந்தார். தொடர்ந்து வந்த மார்கோ ஜன்சனும் பும்ராவிடம் வீழ்ந்தார்.
அந்தவகையில் இறுதி ஓவரில் வெற்றிக்கு 16 ஓட்டங்கள் தேவையென்ற நிலையில் சூரியகுமார் யாதவ்வின் அபாரமான பிடியெடுப்பில் 21 (17) ஓட்டங்களுடன் மில்லர் ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் வந்த றபாடா நான்கு ஓட்டங்களைப் பெற்றபோதும் பாண்டியாவின் இறுதி ஓவரின் ஐந்தாவது பந்தில் அவர் ஆட்டமிழக்க 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 169 ஓட்டங்களையே பெற்ற தென்னாபிரிக்கா ஏழு ஓட்டங்களால் தோல்வியடைந்தது.
Post a Comment