Header Ads



64 ஆயிரம் Email ல்கள் அழிக்கப்பட்டமை குறித்து விசாரணை


இலங்கையின் கடற்பரப்பில் பேரழிவை ஏற்படுத்திய எக்ஸ்பிரஸ் பேர்ல் (X-Press Pearl ) கப்பல் தொடர்பில் பரிமாறிக்கொள்ளப்பட்ட மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டமை குறித்து தடயவியல் விசாரணைகள் தொடர்கின்றன.


கொழும்பு  துறைமுகத் தரப்பினர் மற்றும் கப்பலின் உள்ளூர் முகவர் ஆகியோருக்கு இடையே பரிமாறப்பட்ட மொத்தம் 75,927 மின்னஞ்சல்களில் இருந்து சுமார் 64,706 மின்னஞ்சல்கள் அழிக்கப்பட்டதாக ஏற்கனவே நீதிமன்றில் முறையிடப்பட்டுள்ளது.


குறித்த கப்பலானது 2021 மே 20ஆம் திகதியன்று தீயினால் எரியுண்டது.


இந்தநிலையில் 2021 மே 10 முதல் மே 21 ஆம் திகதிகள் வரையிலான மின்னஞ்சல்கள் பிரதான தளத்தில் இருந்து அழிக்கப்பட்டுள்ளன.


எனவே இந்த குற்றம் தொடர்பில் பரந்த அளவிலான தடயவியல் ஆய்வை ஆரம்பிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


விபத்துக்குள்ளான கப்பலை கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வருவதற்கான உண்மை தகவல்களை மறைக்க தரவுகள் நீக்கப்பட்டிருக்கலாம் அல்லது மாற்றப்பட்டிருக்கலாம் என்று நீதிமன்றில் அரச தரப்பு சந்தேகம் வெளியிட்டுள்ளது.


இந்தநிலையில், முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு ஆகஸ்ட் 6ஆம் திகதி நீதிமன்றில் முன்னேற்ற அறிக்கையை சமர்ப்பிக்குமாறு, மேலதிக நீதவான் கெமிந்த பெரேரா குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு உத்தரவிட்டுள்ளார்.


குறித்த கப்பல் தொடர்பில் தற்போது பிணையில் உள்ள சந்தேகநபர்கள் அனைவரையும் அன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.