Header Ads



கடும் வெப்பத்தினால் ஹஜ் யாத்திரையில் 550 தியாகிகளாகினர் - 51 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவு



கடுமையான வெப்பம் காரணமாக இந்த ஆண்டு ஹஜ் புனித யாத்திரை மேற்கொண்ட சுமார் 550 பேர் உயிரிழந்துள்ளனர் என சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்கள் எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, ஈரான் மற்றும் செனகல் நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இஸ்லாமிய மக்கள் தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் சவூதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் நடப்பாண்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் ஹஜ் பயணம் மேற்கொண்டுள்ளனர்.


இந்த ஆண்டு சவூதியில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக இந்த யாத்திரையின் போது சுமார் 550 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் 323 பேர் எகிப்து மற்றும் 60 ஜோர்டான் நாட்டு மக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களது உடல்கள் மக்காவுக்கு அருகில் உள்ள iவத்தியசாலைகளில் வைக்கப்பட்டுள்ளதாக சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


காலநிலை மாற்றத்தால் ஆண்டுக்கு 0.4 பாகை செல்சியஸ் என மக்காவில் சடங்குகள் மேற்கொள்ளப்படும் முக்கிய இடத்தில் வெப்பம் அதிகரித்து வருவதாக கடந்த மாதம் வெளியான ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமை அன்று மக்காவில் உள்ள அல் ஹராம் பள்ளிவாசலில் சுமார் 51 பாகை செல்சியஸ் வெப்பம் நிலவியதாக சவூதி வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.