Header Ads



பலஸ்தீன இனப்படுகொலை - இலங்கை ஊடகங்களினால் மூடிமறைக்கப்படுவதாக இம்தியாஸ் Mp கவலை


பலஸ்தீன மண்ணில் ஆறு மாதங்களுக்கும் மேலாக நடத்தப்பட்டு வரும் இனப்படுகொலைகள் மற்றும் பேரழிவை உலகின் பலம் வாய்ந்த ஊடகங்களும், நமது நாட்டின் சில பலம் வாய்ந்த ஊடகங்களும் மூடி மறைத்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.யான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் தெரிவித்தார்.


பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (14) இடம்பெற்ற பலஸ்தீனத்தின் இன்றைய  நிலை தொடர்பாகன  சபை ஒத்திவைப்பு வேளை  பிரேரணை மீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் பேசுகையில்,


  தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சியை காப்பாற்றிய சக்திகள், அதேபாணியில் இன்றும் பலஸ்தீன மண்ணில் நடக்கும் அநீதி, அடக்குமுறைகளை மூடி மறைத்து, உலக மக்கள் ஆணைக்கு எதிராக சென்று, பிரிவினைவாத, மனிதாபிமானமற்ற ஆட்சிக்கு அடைக்கலம் கொடுக்க முயல்கின்றன.


பலம் வாய்ந்த ஊடகங்களும் மூடி மறைத்து வந்தாலும், சமூக ஊடகங்கள் வாயிலாக பாலஸ்தீனத்தின் யதார்த்தம் ஏறக்குறைய சமூகத்திற்கு அம்பலமானது.


கடந்த வாரம், ஐ. நா சபையானது பாலஸ்தீன அரசுக்கு புதிய உரிமைகள் மற்றும் சலுகைகளை வழங்கும் தீர்மானத்தை பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றியது. இது ஐக்கிய நாடுகள் சபையில் முழு அங்கத்துவத்திற்கு வழி வகுத்தது. இந்த முன்மொழிவு தொடர்பான விவாதத்தின் போது, இஸ்ரேலிய பிரதிநிதி ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றினார் மற்றும் இந்த முன்மொழிவு நிறைவேற்றப்பட்டால், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் அதனுடன் இணைந்த அமைப்புகளுக்கான அமெரிக்க உதவியை குறைக்க எதிர்பார்க்கிறேன் என்று அச்சுறுத்தினார். இந்த எச்சரிக்கையையும் பொருட்படுத்தாது 143 நாடுகள் இந்த திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தன, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் உட்பட ஒன்பது நாடுகள் மட்டுமே இதை எதிர்த்தன.


சுதந்திரம், மனித உரிமைகள், நிறவெறி அல்லது இனவெறி போன்றவற்றுக்கு எதிராக எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளும் ஒரு நாட்டின் வீட்டோ அதிகாரத்தால் செல்லாததாக்கப்படுவதை நாம் காண்கிறோம். சர்வதேச நீதிமன்றம், மனித உரிமைகள் ஆணைக்குழு போன்றவற்றுக்கு தொடர்ந்து சவால் விடுப்பதை நாம் இன்னும் பார்க்கிறோம் என்றார்.  


No comments

Powered by Blogger.