பாலஸ்தீனத்தை இல்லாதொழிக்கும் இஸ்ரேலின் வெறியாட்டம் வெற்றியளிக்காது - பாராளுமன்றத்தில் ரிஷாட் ஆவேசம்
பாராளுமன்றத்தில் (14) இடம்பெற்ற பாலஸ்தீனின் தற்போதைய நிலை குறித்த விவாதத்தில் உரையாற்றிய போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது குறித்து தொடர்ந்து உரையாற்றிய அவர்,
“இந்திய மீனவர்களின் ஊடுருவல்களால் நம் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது. இதைக்கூட கட்டுப்படுத்த அரசாங்கத்துக்கு திராணியில்லை. இந்தக் கடற்படையா மத்திய கிழக்கு கடற்பகுதியின் கப்பற்போக்குவரத்தை பாதுகாக்கப்போகிறது? எனவே, அரசாங்கம் பாலஸ்தீன் விவகாரத்தில் இரட்டைமுகத்துடன் செயற்படுவதாக நான் சந்தேகிக்கின்றேன்.
பாலஸ்தீனர்களை விரட்டியதால் ஏற்பட்ட இஸ்ரேலிய தொழில் வெற்றிடங்களை நிரப்புவதற்கு இலங்கையும் ஆட்களை அனுப்பியுள்ளது. இது ஏன்? இஸ்ரேலின் பொருளாதாரம் மற்றும் இராணுவத்தை பாதுகாக்கும் தேவை அரசாங்கத்துக்கு ஏன் ஏற்பட்டது? வெளிநாட்டமைச்சர் இதற்குப் பதலளிக்க வேண்டும். வெறும் தலையாட்டியாக இருக்காமல், இஸ்ரேலின் வெறித்தனங்களை அரசாங்கம் கண்டிப்பது அவசியம்.
சொந்தமண்ணிலிருந்து பாலஸ்தீனர்கள் வெளியேற்றப்பட்ட "நக்பா" தினத்தில், நான் இந்த வேண்டுகோளை விடுக்கிறேன். சர்வதேச நியதிக்கு உடன்பட்டு பாலஸ்தீனை அங்கீகரியுங்கள். இஸ்ரேலின் இன ஒழிப்புச் செயற்பாடுகளை ஆதரிக்கும் வகையில், இலங்கை செயற்படக்கூடாது. தர்மமின்றி, இனவெறியோடு தலைவிரிகோலமாக தாண்டவமாடும் யூத இராணுவம் முழு பாலஸ்தீனையுமே அழிக்கத் துடிக்கிறது.
பதிலடிப்போரென்ற போர்வையில் பெண்கள், குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணித்தாய்மார்கள் மற்றும் நிரபராதிகள் அனைவரையும் சல்லடைகளால் துளைக்கிறது இஸ்ரேல். வைத்தியசாலைகள், அகதிமுகாம்கள் இன்னும் நிவாரண நிலையங்களும் விமானத்தாக்குதல்களால் தகர்க்கப்படுகின்றன.
அமெரிக்கா உள்ளிட்ட ஏகாதிபத்திய அரசுகளின் ஒருதலைப்பட்ச போக்குகள், ஜனநாயகத்துக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. வீட்டோ அதிகாரத்தால் இஸ்ரேலைப் பாதுகாக்கும் அமெரிக்கா, பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டங்களையோ அல்லது மனிதாபிமானத்தையோ கண்டுகொள்ளவில்லை” எனவும் அவர் குறிப்பிட்டார்.
Post a Comment