Header Ads



விமான நிலையத்தில் ராஜாங்க அமைச்சரின் சண்டித்தனம்


கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இராஜாங்க அமைச்சர் ஒருவர் பயணிகளின் பயணப்பொதிகளை கொண்டு செல்லும்  ஊழியர் ஒருவரை (போர்ட்டர்) கன்னத்தில்  அறைந்து, பாதுகாப்பு அதிகாரிகளையும் அச்சுறுத்தியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது .


இந்த இராஜாங்க அமைச்சரின் மனைவி உட்பட சிலரின் வெளிநாட்டு பயணமொன்றுக்காக குறித்த இராஜாங்க அமைச்சர் புதன்கிழமை (15) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளார் .


அவர் தனது பாதுகாவலர்களுடன் நுழைவுச்சீட்டு வாங்காமல் பிரதான நுழைவாயில் ஊடாக விமான நிலையத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்துள்ளார்.  அவரின் பாதுகாவலர்கள் துப்பாக்கியுடன் இருந்ததால் அவை கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் இராஜாங்க அமைச்சரிடம் கூறியுள்ளனர் .


அப்போது, அவர் ​​பாதுகாப்பு  அதிகாரிகளை திட்டி, அவர்களை தனது கைத்தொலைபேசியால் புகைப்படமாகவும் பதிவு செய்துகொண்டுள்ளதாக விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் .


பின்னர் , குறித்த இராஜாங்க அமைச்சருடன் வந்தவர்களின் பயணப்பொதிகளை விமான நிலையத்திற்கு  எடுத்துச் செல்வதற்காக வந்த போர்ட்டருக்கு குறைந்த பணத்தை வழங்கியுள்ளதுடன் அவர் உரிய கட்டணத்தை கேட்ட போது ,  ஆத்திரமடைந்த இராஜாங்க அமைச்சர் , தனது காலணியால் போர்ட்டரின் காலை மிதித்து, கன்னத்தில் அறைந்து பாதுகாவலர்களுடன் வெளியேறியதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.


தாக்குதலுக்குள்ளானதாக கூறப்படும் போர்ட்டர், தேவையில்லாத பிரச்னையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தில் பொலிஸாரிடம்  முறைப்பாடு செய்யவில்லை என தெரியவந்துள்ளது .


அரசியல்வாதியின் இந்த செயல்  தற்போது பகிரங்கமான ரகசியமாக மாறியுள்ளமை  குறிப்பிடத்தக்கது .

No comments

Powered by Blogger.