Header Ads



வர்த்தகரை கொலை செய்துவிட்டு, டுபாய்க்கு தப்பியோடச் சென்றவர் கைது


ஹொரணை கிரேஸ்லேன்ட் தோட்டப் பகுதியில் வைத்து வர்த்தகரை சுட்டுக்கொன்ற பிரதான சந்தேகநபர் சம்பவம் இடம்பெற்று சில மணித்தியாலங்களின் பின்னர்  டுபாய்க்கு தப்பிச் செல்வதற்காக   வந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


ஹொரண குடா உடுவ ஹொரகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.


பலத்த காயங்களுக்கு உள்ளான வர்த்தகர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது சந்தேகநபரே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். அது தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள பொலிஸாருக்கும் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் சந்தேக நபர் தொடர்பில் அறிவிக்கப்பட்டது.


விமான நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமெராக்கள் தொடர்பில் சந்தேக நபர்களை முகத்தை வைத்து அடையாளம் காணும் தொழில்நுட்பத்தின் மூலம் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


சந்தேக நபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் டுபாயில் இருந்து இந்த நாட்டுக்கு வந்தவர் எனவும் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர்   நாடு திரும்பவிருந்தவர் எனவும் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


சந்தேக நபரை ஹொரணை பொலிஸாரிடம் அழைத்து வந்ததன் பின்னர் துப்பாக்கிச் சூட்டுக்கு வந்த சைக்கிளின் ஓட்டுநர் மற்றும் துப்பாக்கிச் சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி என்பன தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வாக்குமூலங்கள் பெறப்படும் என சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.