மலேசிய பல்கலைக்கழகத்துடன் இலங்கையின் ஜாமிஆ நளீமிய்யா புரிந்துணர்வு ஒப்பந்தம்
ஸயன்ஸ் இஸ்லாம் மலேசிய பல்கலைக்கழகம் (USIM) சார்பாக, பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி டத்தோ ஷரிபுதீன் மாட் ஷாராணி, துணைவேந்தர் (கல்வி மற்றும் சர்வதேச விவகாரங்கள்) பேராசிரியர் கலாநிதி மொஹமத் ராதி இப்ராஹிம் ஆகியோரும் ஜாமிஆ நளீமிய்யா சார்பாக, கலாபீடத்தின் முகாமைத்துவம் மற்றும் பரிபாலன சபை தலைவர் அல்-ஹாஜ் முஹம்மத் நளீம் முஹம்மத் யாகூத், முதல்வர் உஸ்தாத் அஷ்ஷெய்க் அப்துல் கரீம் அகார் முஹம்மத் ஆகியோரும் கையொப்பமிட்டனர்.
ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம், அது உருவான காலம் முதல் அதன் கலைத்திட்ட மேம்பாடு, விரிவுரையாளர் பரிமாற்றம், மாணவர் பரிமாற்றம் முதலான பல்வேறு விடயங்களுக்காக சர்வதேச அளவில் கொண்டுள்ள உறவுகளில் ஒன்றாகவே, சர்வதேச தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுடன் மேற்கொள்ளும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நோக்கப்படுகின்றன.
அந்த வகையில், மலேசியாவின் இஸ்லாமிய கலைகளுக்கான பல்கலைக்கழகத்துடன் (USIM), ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம் கைச்சாத்திட்ட இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவாக, விரிவுரையாளர், மாணவர் பரிமாற்றம், பரஸ்பர ஆய்வு முயற்சிகள், பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தக மேம்பாடு தொடர்பான செயலமர்வுகள், வெளியீடுகள், சர்வதேச ஆய்வு மாநாடுகள் முதலான செயற்றிட்டங்கள் எதிர்காலத்தில் கூட்டாக முன்னெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்நிகழ்வில், இரண்டு கல்வி நிறுவனங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் உயர் அதிகாரிகள், சிரேஷ்ட விரிவுரையாளர்கள் முதலானோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
- Jemsith Azeez -
Post a Comment