Header Ads



இலங்கைக்கு வரும் உல்லாசப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் நினைவுப் பரிசு


இலங்கைக்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளுக்கும் விமான நிலையத்தில் இலங்கை தேயிலை தொடர்பான நினைவுப் பரிசை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யுமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர யோசனை தெரிவித்துள்ளார்.


தேயிலை கைத்தொழிலை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் அண்மையில் (மே 13) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.


அதன்படி, சிலோன் டீயின் பெயரை உலகில் பிரபலப்படுத்தும் நோக்கில், இந்நாட்டுக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் விமான நிலையத்திலிருந்து வெளியேறும் போது இலங்கை தேயிலை பொருட்கள் அடங்கிய நினைவுப் பரிசு வழங்கப்படவுள்ளது.


அத்துடன் அரசாங்கம் மற்றும் தனியார் துறையினரின் அனுசரணையுடன் இந்த வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதுடன் கலந்துரையாடலின் போது தனியார் தேயிலை கைத்தொழில்துறையினரும் தமது இணக்கத்தை தெரிவித்துள்ளனர். இதற்கான செலவை தேயிலை சபையும், தனியார் துறையும் ஏற்கும்.


இலங்கைக்கு வரும் ஏராளமான சுற்றுலா பயணிகள் தேயிலை



தொழிற்சாலைகள் மற்றும் தேயிலை தோட்டங்களை பார்வையிட வருவதுடன் இலங்கையில் தேநீர் அருந்துவதில் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர்.


இதன்காரணமாக சுற்றுலாப் பயணிகள் மத்தியில் எமது நாட்டில் தேயிலையின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.


இக்கலந்துரையாடலில் இலங்கை தேயிலை சபை, சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபை, தேயிலை தோட்ட உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் மற்றும் தேயிலை தொழில்துறை பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

No comments

Powered by Blogger.