Header Ads



சிறுநீரகம் திருடப்பட்டு கொல்லப்பட்ட ஹம்தியின் வழக்கில் திருப்பம் ஏற்படுமா..?


- Azeez Nizaruddeen -


கடந்த 2022ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறுவன் ஹம்திக்கு கொழும்பு லேடி றிஜ்வே மருத்துவமனையில் நடந்த அநீதியை மறந்திருக்க மாட்டீா்கள்.


ஹம்திக்கு அவனது இடது பக்க சிறுநீரகத்தில் ஏற்பட்டிருந்த ஒரு குறைபாடு  காரணமாக அவனது இடது பக்க சிறுநீரகத்தை அறுவை சிகிச்சை ஒன்றின் மூலம் அகற்ற வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரை செய்திருந்தனர்.


அதற்கமைய ஹம்திக்கு அறுவை சிகிச்சை 2022ம் ஆண்டு டிஸம்பர் மாதம் இடம்பெற்றது.  இந்த அறுவை சிகிச்சையின் போது பழுதடைந்திருந்த இடது சிறுநீரகம் அகற்றப்பட்டதாக பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டது.  என்றாலும் ஓரிரு நாட்களின் பின்னர் ஹம்தியின் நல்ல நிலையில் இருந்த அவனது வலது பக்க சிறுநீரகம் காணாமல் போயிருந்த தகவல் அம்பலமானததால் ஹம்தஇயஇன் பெற்றோர் பேரதிர்ச்சிக்கு ஆளாகினர்.


காணாமல் போன ஹம்தியின்  வலது பக்க சிறுநீரகத்திற்கு என்ன நடந்தது என்பதைக் கூற மருத்துவர்களோ மருத்துவமனை நிர்வாகமோ முன்வரவில்லை. ஹம்தியின் பெற்றோர் உதாசீனப் படுத்தப்பட்டாா்கள். அலைக்கழி்கப்பட்டார்கள்.


இந்த கொடுமையான நிகழ்வு தொடா்பாக சமூக ஊடகங்களிலும், இலத்திரனியல் ஊடகங்களிலும் செய்திகள் பரவியதைத் தொடர்ந்து மருத்துவா்களும், மருத்துவமனை நிா்வாகத்தைச் சோ்ந்தவா்களும் முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வெளியிட்டு வந்தனா்.


மரண விசாரணை நடாத்திய சட்ட வைத்திய அதிகாரி ஹம்தியின் மரணம் தொடர்பாக தவறான தகவல்களை வழங்கியிருந்தார். அரசியல்வாதிகளின் ஆதரவோடு இயங்கிய, ஏற்கனவே பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகியிருந்த இந்த சட்ட வைத்திய அதிகாரி ஹம்தியின் மரணம் தொடா்பாக தவறான அறிக்கையை வெளியிட்டதைக் கண்டித்து நாம் செய்த போராட்டத்தின் பின்னா் அவரது பதவி இடை நீக்கம் செய்யப்பட்டது.


ஹம்திக்கு நடந்த இந்த அநீதி தொடர்பாக கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் ஹம்தியின் பெற்றோரால் அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவா்களுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதிமன்றில் வழக்கு  தொடரப்பட்டது.


கடந்த ஏழு மாதங்களுக்கு மேலாக விசாரணைகள் தொடர்கிறது.


ஹம்தியின் அறுவை சிகிச்சையோடு தொடா்புபட்ட மருத்துவா்கள் பலரும் நீதிமன்றில் சாட்சியம் வழங்கினார்கள். பலாின் வாக்குடமூலங்களும் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததை  பிரதான அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட்டன.


ஹம்தியின் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட நவீன் விஜேகோன் என்ற மருத்துவா் வெளிநாடு ஒன்றில் வசித்து  வருகிறார். நீதிமன்றில் சாட்சிமளித்த ஒருசிலரும் வெளிநாட்டுக்கு சென்றிருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.


கடந்த ஏப்ரல் மாதம் 27ந்திகதி நடைபெற்ற விசாரணையில், சத்திர சிகிச்சையை மேற்கொண்ட சில நாட்களில் குடும்பத்துடன் அவுஸ்திரேலியா சென்று குடியமர்ந்துள்ள வைத்தியர் நவீன் விஜேகோன் சார்பாக முதன் முதலாக ஜனாதிபதி சட்டத்தரணி ஒருவர் ஆஜரானார்.


இந்த வழக்கில் நேரடியாக விசாரிக்க வேண்டிய முக்கியமானவர்களான, வைத்தியர் நவீன் விஜேகோன் மற்றும் சத்திர சிகிச்சை நடைபெற சில மணித்தியாலங்களுக்கு முன்பதாக ஸ்கேன் செய்து சிறுவன் ஹம்தியின் இரண்டு சிறுநீரகங்களும் இருப்பதாக உறுதி செய்த  நுவன் ஹேரத் என்ற மருத்துவரையும்  இலங்கைக்கு மீள வரவழைப்பதற்கான உத்தரவை சீஐடிக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. இந்த நுவன் ஹேரத் என்ற மருத்துவரும்  நவீன் விஜேகோனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியாவில் குடியேறியவராவார்.  


மேலும் வைத்தியர் நவீன் விஜேகோன் இலங்கைக்கு கொண்டு வருவதற்கான சட்டரீதியான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாக  அவருடைய சட்டத்தரணிகள் நீதி மன்றத்தில் தெரிவித்தனர்.


ஹம்தியின் வழக்கு விசாரணையை மந்த கதியில் நகர்த்திச் செல்லும் பொரல்லை பொலிஸாரின் செயற்பாடுகளைக் கண்டித்த சட்டத்தரணிகள் அதனை நீதிமன்றின் கவனத்திற்கும் கொண்டு வந்ததோடு, இந்த விசாரணையை கொலை விசாரணை எனக்கருதி  விசாரணை நடாத்தும் பொறுப்பை சீஐடியினருக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். சட்டத்தரணிகளின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் மேலதிக விசாரணையை சீஐடி மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டது.


இதன் பிரகாரம் நாராஹேன்பிட்டியவில் உள்ள பூட்டானி கெப்பிடல் கட்டடத்தில் அமைந்துள்ள குற்றப்புலனாய்வு திணைக்களத்தின்  மனித கொலைகளை விசாரிக்கும் பிரிவுக்கு சென்று ஹம்தியின் பெற்றோர் மீண்டும் தமது வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர்.


இந்த வழக்கில் ஆரம்பம் முதல் பெரும் பங்காற்றி வரும் மருத்துவரும் சட்டத்தரணியுமான வை.எல். எம்.  யூசுஃப் அவர்களது அயராத முயற்சியினால் சிறுவன் ஹம்தியின் பெற்றோருக்காக வாதாடுதற்கு ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா அவர்களை ஏற்பாடு செய்திருக்கின்றார்.


இப்போது தான் இந்த வழக்கு ஒரு புதிய திருப்பத்தை நோக்கி நகர்கிறது. மேலும் ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா அவர்களின் ஜூனியாராக கடமையாற்றும் இளம் சட்டத்தரணி அஸ்லம் அலாவுதீன் அவர்களும் பக்கபலமாக செயற்படுகிறார்.


வழக்கு விசாரணை மீண்டும் நாளை புதன்கிழமை அதாவது  மே மாதம் 15ந் திகதி விசாரணைக்கு வரவுள்ளது.

No comments

Powered by Blogger.