Header Ads



ஜனாதிபதி ரணிலுக்கு பெரும் மாலை அணிவிப்பு


தோட்டத் தொழிலாளர்களின்  நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக அதிகரிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.


பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை தாம் ஒருபோதும் மறக்கவில்லை எனவும், ஜனாதிபதி என்ற வகையில் எதிர்காலத்தில் அவர்களின் உரிமைகளை தாம் உறுதிப்படுத்துவதாகவும்  ஜனாதிபதி வலியுறுத்தினார்.


கொட்டகலை பொது  மைதானத்தில் இன்று (01) முற்பகல் இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.


இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த நிகழ்வில் இணைந்து கொண்டதுடன், மைதானத்திற்கு வருகை தந்த ஜனாதிபதியை இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளர் நாயகம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் வரவேற்றனர்.


பெருந்திரளான மக்களின் பங்குபற்றுதலுடன் மே தினக் கூட்டமும் பேரணியும் நடைபெற்றதுடன் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மிகப்பெரிய தொழிற்சங்கம் மற்றும் அரசியல் கட்சியாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் காணப்படுகிறது.


மே தினக் கூட்டத்தில்  கலந்து கொண்ட ஜனாதிபதிக்கு மலையக மக்களினால் அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.


கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, லயன் அறைகள்  சட்டபூர்வமான கிராமங்களாக மாற்றப்பட்டு அவற்றின் வசதிகள் மேம்படுத்தப்படும் என மேலும் குறிப்பிட்டார். பெருந்தோட்டப் பிள்ளைகளின் கல்வி மற்றும் தொழில்சார் கல்வியை மேம்படுத்துவதற்கு விசேட கவனம் செலுத்தப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.


கடந்த கால பொருளாதார நெருக்கடியின் போது பல்வேறு சிரமங்களை எதிர்கொண்ட போதிலும் நாட்டின் தேசிய பொருளாதாரத்திற்கு பெருந்தோட்ட மக்கள் ஆற்றிய பங்களிப்பிற்காக ஜனாதிபதி நன்றி தெரிவித்தார்.


இங்கு உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:


நாங்கள் அனைவரும் மிகவும் கடினமான காலத்தை கடந்து வந்துள்ளோம். இதன் போது பெருந்தோட்ட மக்களே கூடுதலாகப் பாதிக்கப்பட்டனர் என்பதை நாம் அறிவோம்.


ஆனால் சிரமங்கள் இருந்தபோதிலும், அவர்கள் தேயிலைக் கொழுந்து பறிப்பதன்  மூலம் நாட்டின் தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த பங்களித்தனர். 2023 ஆம் ஆண்டிலும் 2024 ஆம் ஆண்டிலும் தேயிலை ஏற்றுமதி மூலம் அதிக அந்நியச் செலாவணியைப் பெற்றோம். அதற்கு ஜனாதிபதி என்ற வகையில் நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.


உங்களின் கடின உழைப்புத்தான் நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியது என்றே கூற வேண்டும். 2022 இல் நாடு இருந்த நிலைக்கு  மீண்டும் செல்வதை இங்குள்ள யாரும்  விரும்பவில்லை என்று நினைக்கிறேன்.அதற்கு நாங்கள் யாரும் தயாராக இல்லை. நாங்கள் மிகவும் மோசமான சூழ்நிலைக்குச் சென்றோம்.


தற்போது இந்த நாட்டின் பொருளாதாரத்தில் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளது. ரூபாயின் பெறுமதி வலுப்பெற்றுள்ளது. தற்போது அனைவருக்கும் நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.


அரசாங்க ஊழியர்களுக்கு பத்தாயிரம் ரூபா சம்பளம் அதிகரிக்கப்பட்டது. மேலும், அஸ்வெசும  திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் நிவாரணத்திற்கான நிதி ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தனியார் துறையினரின் சம்பளத்தை அதிகரித்துள்ளனர்.


சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், சுற்றுலா வருமானமும் அதிகரித்துள்ளது.அத்துடன், தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளை நாம் மறக்கவில்லை.


 இந்த லயன் அறைகளை சட்டபூர்வமாக கிராமங்களாக அறிமுகப்படுத்த நானும் பிரதமரும் ஆலோசித்துள்ளோம்.அதன் மூலம்  இந்த இடங்களுக்கு கிராமங்களுக்கு கிடைக்கும் வசதிகள் கிடைக்கும். அதற்கான செயற்பாடுகளை அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் இணைந்து தொடர்ந்து முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.


அத்துடன் பெருந்தோட்டப் பிள்ளைகளின் கல்வி முன்னேற்றம் தொடர்பிலும் விசேட கவனம் செலுத்தியுள்ளோம்.அவர்களுக்கு விஞ்ஞானப் பாடங்களை கற்பிக்க தேவையான ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.


நான் பிரதமராக இருந்த போது தோட்டங்களில் உள்ள பல பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வு கூடங்களை ஆரம்பித்தேன்.சில பாடசாலைகளில்  நிலவும் ஆசிரிய பற்றாக்குறையைத் தீர்த்து, அவற்றை மேம்படுத்தும் பணியும் இடம்பெற்று வருகிறது. மேலும், பெருந்தோட்டங்களில் தொழிற்கல்வியை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம்.


தோட்டத் தொழிலாளர்களை அரசாங்கம் என்ற ரீதியில் நாம் மறக்கவில்லை.அந்த மக்களின் அனைத்துப் பிரச்சனைகளையும் நான் புரிந்துகொண்டுள்ளேன்.


எனவே எனக்குக் கீழ் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் உறுதிப்படுத்தப்படும் என ஜனாதிபதி என்ற வகையில் நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.


1982 ஆம் ஆண்டு சௌமியமூர்த்தி தொண்டமானின் வேண்டுகோளுக்கிணங்க நான் அப்போதைய கல்வி அமைச்சராக பெருந்தோட்டப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.பின்னர் 1986 இல் குடியுரிமை இல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்குவதாக ஜனாதிபதி ஜே.ஆர் ஜயவர்தன அறிவித்த போது நானும் அதற்கு ஆதரவளித்தேன்.


2003 ஆம் ஆண்டில் ஆறுமுகன் தொண்டமானுடன் இணைந்து இந்தியாவில் குடியுரிமை இருந்தும் மீண்டும்  அங்கு  செல்ல விரும்பாத மக்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது.தற்போது அந்த பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்துவிட்டன.


இப்போது இந்த பகுதிகளை முன்னேற்றுவதற்கான நேரம் இது. எனவேதான் சம்பளத்தை அதிகரித்து இந்த பகுதிகளில்  உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம்.மேலும் விவசாய நவீனமயமாக்கல் திட்டம் கிராமத்திற்கு மட்டுமல்ல, பெருந்தோட்டத்திற்கும் கொண்டு வரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

1 comment:

  1. இந்த வாக்குறுதிகள் அனைத்தும் தேர்தல் முடிவடைந்ததும் விழலுக்கு இறைத்த நீராக மாறிவிடும் என்பதை மலையக மக்கள் புரிந்து கொள்வார்களா? மலையக மக்களை வழிகெடுக்கும் போலி அரசியல் வாதிகள் பொதுமக்களை வழிகெடுக்கும் வரை இந்த அப்பாவி மக்களுக்கு இந்த எதனையும் புரிந்து கொள்ளும் அடிப்படை அறிவு இல்லை என்பதை நாம் நம்பித்தான் ஆக வேண்டும். மற்றொரு கரட்டைச் சுவைக்க அவர்கள் முயற்சி செய்வார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.