‘சிவிலியன்களை கொன்றொழிக்கும் சியோனிஸ அரசை தண்டியுங்கள்’ - சர்வதேசத்திடம் தே.ஐ.மு வேண்டுகோள்!
காசாவில் ஏற்பட்டுள்ள கொடிய அவலங்கள் குறித்து தேசிய ஐக்கிய முன்னணியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
காசாவில் ஏற்பட்டுள்ள யுத்த அவலங்கள் சர்வதேச நடைமுறைகளை மீறியுள்ளன. யுத்த தர்மங்களை மீறி இஸ்ரேல் கட்டவிழ்த்துள்ள வெறியாட்டம், பலஸ்தீனத்தை எரிந்த தேசமாக மாற்றும் வக்கிர நோக்கம்கொண்டது. சர்வதேசத்தின் பார்வைகள் இவ்விடயத்தில் பாரபட்சமாக உள்ளன.
ரபா எல்லையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள இஸ்ரேல், அப்பாவி பலஸ்தீனர்களை யுத்தக் கேடயங்களாகப் பாவிக்கிறது. இதை ஒருபோதும் அனுமதிக்க இயலாது. ரபா எல்லையைக் குறிவைத்து இஸ்ரேல் ஆரம்பித்துள்ள இராணுவ நடவடிக்கைகளால் மே 10இல் 110000 பேர் தப்பியோடியுள்ளனர். மேலும், ஒக்டோபர் 07இல் தொடுக்கப்பட்ட இஸ்ரேலின் இராணுவ நடிக்கைகளால் இதுவரை 2.2 மில்லியன் மக்கள் பலவந்தமாக வெளியேற நேரிட்டுள்ளது.
சர்வதேசத்தால் அங்கீகரிக்கப்பட்ட பலஸ்தீனத்தின் ஆள்புல எல்லைக்குள் இஸ்ரேல் அத்துமீறியுள்ளமை, பிற நாட்டின் மீதான ஆக்கிரமிப்பே! சர்வதேச நியதிகளை புறந்தள்ளியுள்ள இச்செயற்பாடுகளை கண்டிப்பதற்கு மேலைத்தேயம் தயங்குவது ஏன்? சிவிலியன்களை கொன்றுகுவிக்கும் இஸ்ரேலியப் படைகளுக்கு இந்நாடுகள் இன்னும் உதவியளிப்பது வேதனைக்குரியது.
இவ்வாறு நடந்துகொள்ளும் சியோனிஸ அரசை தண்டிப்பதற்கு கீழ் கண்ட விடயங்களை ஐ.நா. அவசரமாகச் செய்ய வேண்டும் எனவும் தேசிய ஐக்கிய முன்னணி ஆலோசனைகளை முன்வைத்துள்ளது.
இஸ்ரேலுக்கான ஆயுத மற்றும் யுத்த தளவாடங்களை நிறுத்துதல், காசாவின் வான்பரப்புக்களில் விமானங்கள் பறப்பதற்கு தடைவிதித்தல், இஸ்ரேலுடனான ராஜதந்திர உறவுகளைப் பகிஷ்கரித்தல் மற்றும் விளையாட்டு, கலாசார உறவுகளிலிருந்து இஸ்ரேலை தனிமைப்படுத்தல். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment