Header Ads



சோசலிசவாதிகள் விலைபோய் விட்டனர், திருமதி பண்டாரநாயக்கா தரப்பும் எம்முடன் இணைந்து கொள்ளும்.


மாற்று தரப்பு என்று கூறிக் கொள்ளும் ஏனைய கட்சிகளைப் போல், சஜித் பிரேமதாச பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை தாரை வார்க்க மாட்டேன். ஏலம் விடமாட்டேன். பன்னாட்டு நிறுவனங்களால் சஜித் பிரேமதாசவை விலைக்கு வாங்க முடியாது என்பதை பால் உற்பத்தி செய்யும் பால் பண்ணையாளர்களுக்கும், கால்நடை அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான பண்ணைகளில் வேலை செய்பவர்களுக்கும் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய வளங்கள் குறித்து வாய் கிழிய பேசும் கம்யூனிஸ, மார்க்சிஸ, தீவிர போக்குடையவர்கள் தங்கள் கொள்கைகளுக்கு துரோகம் செய்து நாட்டை  பணத்திற்காக விற்றுவிட்டனர். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் அவ்வாறானதொன்றுக்கு இடமில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


அம்பாறையில் இன்று(11) நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் விவசாயப் பிரகடனத்தை வெளியிட்டு வைக்கும் மாவட்ட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.


🟩நாட்டுக்கு சோறு போடும் விவசாயியை தெய்வமாக நடத்த வேண்டும்.


நாட்டில் விவசாயத்திற்கு தேவையான விதைகளின் விலை அதிகரித்துள்ளதால், நாட்டிற்கும் விதைகளை உற்பத்தி செய்வதற்கான திட்டமொன்று தேவை. நாட்டின் 2.4 மில்லியன் ஹெக்டேர் நிலம், அதாவது நாட்டின் 1/3 பகுதி பயிர் உற்பத்திக்கு பயன்படுத்தப்படுகிறது. 25% தொழிலாளர்கள் இந்த விவசாயத்தில் ஈடுபட்டுள்ளனர். நமது நாட்டில் நம்பகமான நீர்ப்பாசன கட்டமைப்பு இருப்பதால், ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், காணி, காணி அபிவிருத்தி, விவசாயம், நீர்ப்பாசனம் மற்றும் மகாவலி அபிவிருத்தி போன்ற அமைச்சுக்களை ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவரப்படும். தேசிய விவசாயக் கொள்கை உருவாக்கப்பட்டு, இந்நாட்டின் விவசாயிகள் உண்மையிலேயே நாட்டின் அரசர்களாக மாற்றப்படுவார்கள். நாட்டுக்கு சோறு போடும் விவசாயியை தெய்வமாக நடத்த வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


🟩நாட்டைக் கட்டியெழுப்ப அரச நிதி மட்டும் போதாது.


அபிவிருத்தியை மேற்கொள்ள அதிகாரத்தைக் கோருபவர்கள் மக்களின் நேரடி, மறைமுக வரிப்பணத்தை அபிவிருத்தி என்ற பெயரில் பகிர்ந்து வருகின்றனர். இந்நாட்டை கட்டியெழுப்ப, நாட்டின் அரச வருமானம் மட்டும் போதாது. எனவே வெளிநாடுகளில் இருந்து கூடிய ஒத்துழைப்பையும், மானியங்களையும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


🟩விவசாயி தொழில்முயற்சியாளராக மாற வேண்டும்.


விவசாயி பாரம்பரிய விவசாய கண்ணோட்டத்தில் இருக்கக் கூடாது. விவசாயி ஒரு தொழில்முனைவர் ஆவார். விவசாயி யாருடை அடிமையும் அல்ல. விவசாய நிலங்கள் மூலம் தொழில்முனைவோரை உருவாக்க நடவடிக்கை எடுப்போம்.


🟩 ஐக்கிய மக்கள் சக்திக்கு ஏனைய கட்சிகள் அஞ்சுகின்றன.


ஐக்கிய மக்கள் சக்திக்கு ஏனைய அனைத்து கட்சிகளும் பயப்படுகின்றன. மொட்டும், யானையும், மணியும், திசைகாட்டியும் ஒன்றிணைந்து சதிகளை ஒவ்வொன்றாக நடத்தி வருகின்றன. இந்த கூட்டு சதிகளால் 220 இலட்சம் மக்களை தோல்வி காணவும், பொது மக்களினது உரிமைகளை அழிக்கவும் இடமளிக்க மாட்டோம்.


🟩 திருமதி பண்டாரநாயக்கா அவர்களினது தரப்பும் எம்முடன் இணைந்து கொள்ளும்.


டி. எஸ்.சேனநாயக்கா அவர்கள் சேனநாயக்கா சமுத்திரம் மூலம் பாரிய நீர்ப்பாசன நாகரீகத்தை உருவாக்கினார். அதன் பின்னர், 'மக்களுக்கே சோறு அளித்தவர்' என்னும் பெயர் பெற்ற டட்லி சேனாநாயக்க அவர்கள் எக்கல் ஓய நீர்ப்பாசன திட்டத்தை உருவாக்கினார். திருமதி சிறிமாவோ அவர்களின் காலத்தில் நாமல் ஓயா திட்டம் உருவாக்கப்பட்டது. இதனை மேலும் வலுப்படுத்துவதற்காக திருமதி பண்டாரநாயக்கவின் தரப்பினரும் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொள்வர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.


இந்த நீர்ப்பாசன நாகரிகம் புதிய யுகத்திற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்படும். இரு போகங்களிலும் பயிரிடக்கூடிய வகையில் அபிவிருத்தி செய்யப்படும். பெரும்,சிறும் நீர்பாசன திட்டங்கள் சகலதும் புனரமைக்கப்படும். 


இவற்றைச் சொல்லும் போது, ​​வங்குரோத்து நாட்டில் எப்படி இவற்றைச் செய்யமுடியும் என கேள்வி எழுப்புகின்றனர். சுதந்திரத்திற்குப் பின்னரான 76 ஆண்டுகால ஜனநாயக அரசியலில் வரலாற்றில், அதிகாரம் இன்றி,ஒதுக்கீடுகள் இன்றி,பட்டம் பதவிகள் இன்றி, நாட்டை அபிவிருத்தி செய்யும் ஒரே ஒரு எதிர்க்கட்சியும், மாற்றுத் தரப்புமாக நம்பர் 1 கட்சியாக ஐக்கிய மக்கள் சக்தி திகழ்ந்து வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 


🟩 தேசிய நில பயன்பாட்டுத் திட்டம் அவசியம்.


நாட்டிற்கு தேசிய நில பயன்பாட்டுத் திட்டமொன்று அவசியம். விவசாயத்தில், போட்டி தன்மை அடிப்படையிலான இலாபம் வழங்கும் பரஸ்பர திட்டமொன்றுக்கான தேவைப்பாடுள்ளது. புத்தாக்கம், புதிய தொழில்நுட்பங்கள், டிஜிட்டல் மயமாக்கலை பயன்படுத்தி நமது நாட்டின் விவசாயத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.


🟩ஸ்மார்ட் விவசாயியை உருவாக்குவோம்.


புதிய தொழில்நுட்பம் மற்றும் இணையதள வசதிகளை பயன்படுத்தி அனைத்து விவசாய மையங்களும் சந்தையையும் உற்பத்தியாளரையும் இணைக்கும் திட்டத்தை ஆரம்பிப்போம். விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டு விவசாயிகளுக்கு புதிய தகவல்கள் வழங்கப்படும். ஸ்மார்ட் விவசாயத்திற்கு நாடு திரும்ப வேண்டும். பாடசாலைகளை போன்றே விவசாயிகளையும் ஸ்மார்ட் விவசாயிகளாக மாற்றும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி செயற்பட்டு வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.


🟩 ஏனையவர்கள் மறந்துவிட்டாலும், விவசாயிகளின் ஓய்வூதியத்தை நாங்கள் மறக்கவில்லை.


இன்று பலர் விவசாயிகளின் ஓய்வூதியத்தை மறந்துவிட்டுள்ளனர். ஆனால் ஐக்கிய மக்கள் சக்தி அதை மறந்துவிடவில்லை. பங்களிப்பு ஓய்வூதிய முறையின் மூலம் இதனை எமது ஆட்சியில் செயல்படுத்துவோம்.


🟩 யானை-மனித மோதலுக்கு நிலையான தீர்வு.


யானைகள் மனித மோதல்களுக்கு நிலையான தீர்வுகளை வழங்குவோம். சுற்றுச்சூழல் பாதிப்புக்குள்ளான பகுதிகளை பாதுகாப்பதுடன், விவசாயிக்கு விவசாயம் செய்ய உரிமையுள்ள இடங்களும் பாதுகாக்கப்படும். காணிக்கான உரிமையும் வழங்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.


🟩 அம்பாறை மாவட்டத்தின் தற்போதைய விவசாயத் துறை பிரச்சினைகளையும் தீர்த்து வைப்போம். 


ஹெட ஓயா நீர்ப்பாசன திட்டத்தை விரைவாக ஆரம்பிப்பதன் மூலம் சியம்பலாண்டுவ, லாவுகல,  பாணம, பொத்துவில்,  கோமாரி பிரதேச மக்களின் பல ஆயிரக்கணக்கான நெற் காணிகள், இரண்டு போகமும் நெல் உற்பத்தி செய்யக்கூடிய விளை நிலங்கள் ஆக மாற்றுவோம்.  அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, திருக்கோயில் பிரதேச செயலக வாழ் விவசாய மக்களின் விவசாயக் காணியாகவுள்ள சாகாம நெற் காணிகளுக்கு நீர் வழங்கக்கூடிய குளங்களும், நீர்ப்பாசனமும் சீர் செய்து மீண்டும் முன்பு போல் இரண்டு போகமும் நெல் உற்பத்தி செய்யக்கூடிய நிலைக்கு கொண்டு வருவோம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

அவ்வாறே, அக்கரைப்பற்று, ஆலையடிவேம்பு, அட்டாளைச்சேனை பிரதேச விவசாய மக்களின் சம்புக்களப்பு பிரதேசத்தில் உள்ள நெற் காணிகளுக்கு உரிய முறையில் வடிச்சல் திட்டத்தை அறிமுகப்படுத்தி அப்பிரதேசத்தில் உள்ள விவசாய நெல் உற்பத்திகளை ஊக்குவிப்போம். களியோடை ஆற்றின் மூலம் அட்டாளைச்சேனை, நிந்தவூர் பிரதேச மக்களின் நெற் காணிகள் வெள்ளப் பெருக்கு ஏற்படும் போது ஏற்படும் சேதங்களை குறைக்கும் வகையில், அந்த ஆற்றின் இரு பக்கங்களிலும் உள்ள அணைக்கட்டுகள் உரிய முறையில் புனரமைப்பு செய்து தரப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.


இந்நிகழ்வில், ஐக்கிய தேசியக் கட்சியின் திகாமடுல்ல மற்றும் உஹன தேர்தல் தொகுதிகளின் அமைப்பாளர் SSP ஜயந்த ரத்நாயக்க மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தமன பிரதேச சபையின் அமைப்பாளரும், முன்னாள் பிரதேச சபை தவிசாளருமான விபுல ரத்நாயக்க ஆகியோர் ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் நோக்கில் கட்சியில் இணைந்து கொண்டனர்.

No comments

Powered by Blogger.