Header Ads



இவர்களை கண்டால் உடன் அறிவிக்கவும்: மக்களிடம் உதவிகோரும் பொலிஸார்

 
குளியாபிட்டிய பிரதேசத்தில் இளைஞரொருவர் காணாமல்போன சம்பவம் தொடர்பில் குறித்த இளைஞரின் காதலி மற்றும் குடும்ப உறுப்பினர்களை கைது செய்வதற்கு பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.


குறித்த சம்பவத்தின் பின்னர் காணாமல்போயுள்ள பிரதான சந்தேகநபரின் குடும்பத்தினரை கைது செய்வதற்காக குடும்பத்தினரின் புகைப்படத்தை பொலிஸார் இன்று (02) ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளனர்.


குளியாபிட்டிய, கபலாவ பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய சுசிதா ஜயவன்ச என்பவர் கடந்த 10 நாட்களாக காணாமல்போயுள்ள நிலையில், கடைசியாக காதலியின் வீட்டிற்கு சென்றுள்ளார்.


இதன்போது காதலியின் தந்தை மற்றும் இரண்டு கொத்தனார்களுடன் சேர்ந்து குறித்த இளைஞரை தாக்கியுள்ளமை பொலிஸ் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இதன்பின்னர் குறித்த இளைஞரை பிரதேசத்தில் உள்ள முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் வீட்டிற்கு அழைத்துச் செல்லுமாறு காதலியின் தந்தை கூறியதாக கைது செய்யப்பட்ட கொத்தனார்கள் இருவரும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.


இச்சம்பவத்தின் பின்னர் பிரதான சந்தேகநபரும் அவரது மனைவியும், காணாமல்போன இளைஞனின் காதலியான அவரது மகள் மற்றும் இரண்டு மகன்களும், பிரதான சந்தேகநபரின் சகோதரி மற்றும் அவரது கணவரும் வீடுகளை விட்டு வெளியேறி தலைமறைவாகியுள்ளனர்.


இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸாரால் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் உள்ளவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அருகில் உள்ள பொலிஸாருக்கு அறிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.


இவ்வாறானதொரு பின்னணியில், சம்பவத்திற்கு உதவிய குற்றச்சாட்டின் கீழ் பிரதான சந்தேகநபரின் பெற்றோர் மற்றும் மாமனார் குளியாபிட்டிய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.