Header Ads



ரஷ்ய யுத்த களத்தில், கதறியழும் இலங்கையர்கள்


ரஷ்ய யுத்த களத்துக்கு இலங்கையில் ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை சட்டவிரோதமான முறையில் அனுப்பும் மோசடியின் பின்னணியில் ரஷ்யாவுக்கான  முன்னாள் இலங்கை தூதுவர் தொடர்புப்பட்டுள்ளாரா என்ற சந்தேகம் எழுவதாகத் தெரிவித்த சுயாதீன எதிரணி எம்.பி.யான காமினி வலேபொட, பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான யுத்தம்  தற்போது தீவிரமடைந்துள்ளது. ஆகவே இந்த நாடுகளின் யுத்தக் களத்துக்கும் இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்படலாம் எனவும் தெரிவித்தார்  


பாராளுமன்றத்தில் திங்கட்கிழமை  (13) விசேட கூற்றை முன்வைத்த போதே இவ்வாறு தெரிவித்த அவர் மேலும்  பேசுகையில்,


ரஷ்யாவில்  தொழில் வாய்ப்புக்களை பெற்றுத் தருவதாக கூறி  இங்கு ஓய்வு பெற்ற இராணுவத்தினரை ரஷ்ய இராணுவத்தில் இணைக்கும் மோசடிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன.ரஷ்ய யுத்த  களத்தில் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் எம்மை தொடர்புக் கொண்டு அழுது புலம்புகிறார்கள்.யுத்த  களத்துக்கு செல்வதை தாங்கள் அறியவில்லை என்று  கூறுகின்றார்கள்


 ரஷ்ய யுத்த  களத்தில் காயமடைந்துள்ள இலங்கையர்களுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படுவதில்லை.14 நாட்களாக ஒரே ஆடையுடன் அவர்கள் யுத்தகளத்தில் இருப்பதாக அறிய முடிகிறது. இவ்விடயம் தொடர்பில்  இலங்கைக்கான ரஷ்ய தூதரகத்துடன் பேச்சு  மேற்கொண்ட போது,இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் சென்றுள்ளனர்  ஆகவே எமக்கு தலையிட முடியாது என்று தூதரகம் கூறுகின்றது .


தனக்கு அதிகாரம் கிடைத்தால் ரஷ்யாவிலுள்ள இலங்கையர்களை ஒரு வாரத்துக்குள் அழைத்து வருவதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை  தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.ஆகவே இந்த மோசடியின் பின்னணியில் இவர் உள்ளாரா என்ற சந்தேகம் எழுகிறது.


ரஷ்யாவில் 600 இலங்கையர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.ரஷ்ய யுத்த களத்தில் இதுவரை  74 இலங்கையர்கள் உயிரிழந்துள்ளதுடன்,சுமார் 50 இலங்கையர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.


பலஸ்தீனத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான யுத்தம்  தற்போது தீவிரமடைந்துள்ளது. ஆகவே இந்த நாடுகளின் யுத்தக் களத்துக்கும் இலங்கையர்கள் சட்டவிரோதமான முறையில் அனுப்பி வைக்கப்படலாம்.ஆகவே ரஷ்ய விவகாரம் தொடர்பில் பாராளுமன்றத்தில் தெரிவுக்குழுவை அமைத்து விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்  என்றார். 

No comments

Powered by Blogger.