Header Ads



வீட்டு வாடகை பணம் இதுவரை செலுத்தவில்லை


முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் தனிப்பட்ட பாவனைக்கு தற்காலிகமாக வழங்கப்பட்ட மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்துக்கு மார்ச் மாதத்துக்கான வாடகை தொகை கிடைக்காததால், கெஹெலியவின் சம்பளத்திலிருந்து உரிய வாடகைப் பணத்தை பெற்றுக்கொள்ளுமாறு பாராளுமன்ற செயலாளருக்கு மத்திய மாகாண முதலமைச்சு கடிதம் அனுப்பியுள்ளது.


அரகலய போராட்ட காலத்தில் கண்டி, அணிவத்த பிரதேசத்தில் உள்ள அவரது வீடு தீக்கிரையாக்கப்பட்டதையடுத்து, தற்காலிகமாக இந்த வீடு அவருக்கு வாடகைக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த வீட்டுக்கான வாடகைப் பணத்துக்கே இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பான கடிதம் கடந்த ஏப்ரல் முதலாம் திகதி அனுப்பி வைக்கப்பட்டதாகவும், இதுவரை எந்தப் பதிலும் வரவில்லையெனவும் மத்திய மாகாண சபையின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


கெஹெலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராக கடமையாற்றிய காலத்தில் இந்த வீட்டை பயன்படுத்துவதற்காக தனது சம்பளத்தில் 20 வீதத்தை மாகாணசபை கணக்கில் வரவு வைத்துள்ளார் என்றும், சுற்றாடல் அமைச்சராக இருந்த காலத்தில் உரிய தொகையை மத்திய மாகாணசபை உரிய முறையில் பெற்றுக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவர், அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.


இக்கடிதம் ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்டதையடுத்து, கெஹெலிய ரம்புக்வெல்ல தற்போது பாராளுமன்ற உறுப்பினராக உள்ளதால், அவரது தனிப்பட்ட ஊழியர்கள் தற்போது மத்திய மாகாண முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்தை பயன்படுத்தி வருகின்றனர்.


முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அமைச்சுப் பதவியை இழந்துள்ளமையினால், அவரது அமைச்சுப் பதவியில் இருந்து இல்லத்தை பயன்படுத்துவதற்கு மாகாண சபைக்கு செலுத்த வேண்டிய தொகையை பெற்றுக்கொள்ளுமாறு கோரி மாகாண முதலமைச்சு பாராளுமன்ற செயலாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

No comments

Powered by Blogger.