Header Ads



ஜப்பானில் இலங்கை வீரருக்கு ஏற்பட்ட துயரம்


ஜப்பானின் கோபே விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் உலக பரா மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின் தினேஷ் ப்ரியன்த ஹேரத்துக்கு கிடைக்கவிருந்த வெள்ளிப் பதக்கம் பறிபோயுள்ளது.


கடந்த வெள்ளிக்கிழமை (24) மாலை நடைபெற்ற ஆண்களுக்கான F46 வகைப்படுத்தல் பிரிவுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் தினேஷ் ப்ரியன்த 64.59 மீற்றர் தூரத்தைப் பதிவு செய்து இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தார்.


ஆனால், மாற்றுத்திறனாளிகளை வகைப்படுத்தும் பிரிவுக்கமைய தினேஷ் ப்ரியன்த F46 வகைப்படுத்தல் பிரிவில் போட்டியிட தகுதியற்றவர் எனத் தெரிவித்து, இந்தியா பரா மெய்வல்லுநர்கள் சார்பில் அந்நாட்டு பரா மெய்வல்லுநர் சங்கம் மேன்முறையீடு செய்திருந்தது.


இதன் காரணமாக இந்தப் போட்டி நிகழ்ச்சிக்கான முடிவை உலக பரா மெய்வல்லுநர் சங்கம் விசாரணை முடியும் வரை இடைநிறுத்தி வைத்திருந்தது. இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை வகைப்படுத்தும் மருத்துவ அறிக்கைகள் மற்றும் தினேஷ் ப்ரியன்தவின் அவயவங்களை பதிவுசெய்த ஒளிநாடா ஆகியவற்றை மேன்முறையீட்டு விசாரணைக் குழுவினர் பரிசீலித்தனர்.


அதன் பின்னர், தினேஷ் ப்ரியன்த F46 வகைப்படுத்தல் பிரிவுக்கு உரித்துடையவர் அல்லர் எனத் தீர்மானித்த மேன்முறையீட்டு விசாரணைக் குழுவினர் இந்தியாவின் ரின்கு (62.77 மீ.), அஜீத் சிங் (62.11 மீ.) ஆகியோருக்கு முறையே வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வழங்கினர்.


அப்போட்டியில் கியூபாவின் வரோனா கொன்ஸாலஸ் தனது கடைசி முயற்சியில் ஈட்டியை 65.16 மீற்றர் தூரத்துக்கு எறிந்து மைதான சாதனையுடன் தங்கப் பதக்கத்தை வென்றார்.


இந்தப் போட்டியில் தகுதிநீக்கம் செய்யப்பட்ட தினேஷ் ப்ரியன்த ஹேரத்துக்கு பரா ஒலிம்பிக்கில் பங்குபற்றவிருந்த வாய்ப்பும் இல்லாமல் போனமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.