"இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகளுக்கு எவ்வித தடைகளோ, பிரச்சினைகளோ இல்லை"
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
பகிர்ந்தளிக்கப்பட்டுள்ள இவ்வருடத்துக்கான ஹஜ் கோட்டாக்களை இரத்துச் செய்து மீள பகிர்ந்தளிக்கும்படி மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கியிருந்த உத்தரவினை கடந்த திங்கட்கிழமை உச்ச நீதிமன்றம் இரத்துச் செய்தது.
உச்ச நீதிமன்றின் குறிப்பிட்ட உத்தரவினையடுத்து இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகளுக்கு எவ்வித தடைகளோ பிரச்சினைகளோ இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. அரச ஹஜ் குழுவும், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ஹஜ் ஏற்பாடுகளை வழமைப்போன்று முன்னெடுத்து வருகின்றன.
அரச ஹஜ் குழு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்ததையடுத்தே இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நீதியரசர் முர்து பர்ணாந்து தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர் குழாம் இத்தீர்ப்பினை வழங்கியது.
யுனைடட் டிரவல்ஸ் ஹஜ் முகவர் நிலையம் இவ்வருட ஹஜ் கோட்டா பகிர்வில் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றின் ஹஜ் வழிகாட்டல்கள் பின்பற்றப்படவில்லை எனவும் தனக்கு இரண்டு வருட கால தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சுமத்தி மேன்முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் பகிரப்பட்டுள்ள ஹஜ் கோட்டாவை இரத்துச் செய்து தீர்ப்பளித்திருந்த அதேவேளை குறிப்பிட்ட ஹஜ் முகவர் நிலையத்துக்கு கோட்டா வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கவில்லை.
மேன்முறையீட்டு நீதிமன்றின் உத்தரவு இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளுக்கு எவ்வித பாதிப்புகளையும் ஏற்படுத்தாது என கடந்த மாதம் 26ஆம் திகதி விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.உச்ச நீதிமன்றில் அரச ஹஜ் குழுவின் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, சட்டத்தரணி சிபான் மஹ்ரூப் என்போர் ஆஜராகியிருந்தனர்.
அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க மற்றும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி விராஜ் தயாரத்னவும், யுனைடட் டிரவல்ஸ் ஹஜ் முகவர் நிலையத்தின் சார்பில் சட்டத்தரணிகள் சஹீதா பாரி மற்றும் ஹபீல் பாரிஸ் என்போர் ஆஜராகியிருந்தனர்.
இவ்வருட ஹஜ் விவகாரம் நீதிமன்றில் சவாலுக்குள்ளான நிலையில் குறிப்பிட்ட முகவர் நிலையத்துக்கும் , அரச ஹஜ் குழுவுக்கும் இடையில் இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்துவதற்கு பல தரப்பினர் அழுத்தங்களைப் பிரயோகித்த நிலையில் எதிர்காலத்திலும் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு அரச ஹஜ் குழு இவ்விவகாரத்தை நீதிமன்றின் மூலமே தீர்த்துக் கொள்வதற்கு உறுதியாக இருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.- Vidivelli
Post a Comment