Header Ads



ஈரான் அதிபர்களுக்கு ஏற்பட்ட மோசமான முடிவு


- BBC -


இரான் இஸ்லாமியக் குடியரசின் 45 ஆண்டுகால வரலாற்றில், தற்போதைய உச்ச தலைவர் அலி காமனெயியை தவிர நாட்டின் தலைமைப் பதவியில் இருந்த அனைவரும் ஏதாவது ஒரு சிக்கலை எதிர்கொண்டனர்.


சிலர் ஆட்சியில் இருக்கும்போதே இறந்துவிட்டனர், சிலர் அரசியல் ரீதியாக குறிவைக்கப்பட்டனர். சிலருக்கு அதிபரான பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. இப்படிப் பல சம்பவங்கள் உள்ளன.


முகமது அலி ரசாய்க்கு பிறகு, பதவிக் காலத்திலேயே விபத்தில் மரணமடைந்த இரண்டாவது அதிபர் இப்ராஹிம் ரைசி.


ஞாயிற்றுக்கிழமை கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அணையைத் திறந்து வைத்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்த இப்ராஹிம் ரைசியின் ஹெலிகாப்டர் விபத்துக்கு உள்ளானது.


திங்கள்கிழமை இந்த விபத்து சம்பவம் உறுதி செய்யப்பட்ட நிலையில், அந்த ஹெலிகாப்டரில் பயணித்த அதிபர், வெளியுறவுத்துறை அமைச்சர் உட்பட 9 பேர் உயிரிழந்தனர்.


கடந்த 1960ஆம் ஆண்டு ரைசி பிறந்த ஊரான மஸ்ஹாதிலேயே, வியாழன் அன்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. 1979 இஸ்லாமிய புரட்சிக்குப் பின்னர் இப்படியான சோகமான முடிவுகளை எதிர்கொண்ட இரானிய ஆட்சியாளர்கள் யார்? அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.


மெஹ்தி பசார்கான்


ஒரு பிரதமருக்குக்கூட யாரோ ஒருவரைச் சந்திக்க ஒரு மதத் தலைவரின் அனுமதி தேவைப்படுவது, தாங்க முடியாத வலியைத் தருவதாகக் குறிப்பிட்டிருந்தார் மெஹ்தி பசார்கான். கடந்த 1979ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு பொறுப்பேற்றுக் கொண்ட முதல் அரசின் முதல் பிரதமராகப் (தற்காலிக) பதவியேற்ற மெஹ்தி பசார்கான் முதல் நாளில் இருந்தே பல விமர்சனங்களையும் எதிர்கொண்டார். அவர் தனக்கு அதிக அதிகாரங்கள் வேண்டும் என்று விரும்பினார். பல தடைகளை எதிர்கொண்ட அவர், தெஹ்ரானில் அமெரிக்க தூதரகத்தின் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட விஷயங்களில் எதுவும் செய்ய முடியாமல் பதவி விலகினார். பதவி விலகிய இரண்டு நாட்கள் கழித்து நாட்டு மக்களுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஒரு பிரதமருக்குக்கூட யாரோ ஒருவரை சந்திக்க ஒரு மதத் தலைவரின் அனுமதி தேவைப்படுவது, தாங்க முடியாத வலியைத் தருவதாகக் குறிப்பிட்டிருந்தார்.


அபுல்ஹசன் பானிசதர்


உச்ச தலைவர் காமனெயி, அரசியலமைப்பைத் தாண்டி, பொதுப் படைகளின் கட்டளையை பானிசதரிடம் ஒப்படைக்கும் அளவுக்கு அவரை நம்பினார். இரான் இஸ்லாமிய குடியரசின் முதல் மதத் தலைவரான ஆயதுல்லா ருஹோல்லா காமனெயி, நாட்டின் அதிபராக அபுல்ஹசன் பானிசதர் என்ற சாதாரண மனிதரை நியமித்தார். அபுல்ஹசனும் 75 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று தேர்தலில் வெற்றி பெற்றார். அவர் போர் விவகாரங்களை நிர்வகிக்கும் பாணி மற்றும் இஸ்லாமிய குடியரசுக் கட்சியால் திணிக்கப்பட்ட அதிகாரமான பிரதமர் முகமது அலி ராஜாய் மீதான அவரது எதிர்ப்பு ஆகியவை கருத்து வேறுபாடுகளை அதிகரித்தன.


இராக்குடனான போரில் ராணுவத்தின் பங்கை அவர் வலியுறுத்திய நிலையில், இஸ்லாமிய குடியரசுக் கட்சியோ குடியரசுக் காவலர் படைக்கு (IRGC) பெரிய பங்கை வழங்க நினைத்தது. உச்ச தலைவர் காமனெயி, அரசியலமைப்பைத் தாண்டி, பொதுப் படைகளின் கட்டளையை பானிசதரிடம் ஒப்படைக்கும் அளவுக்கு அவரை நம்பினார்.


அபுல்ஹசன் பானிசதர் மற்றும் இரானிய மஜ்லிஸில் பெரும்பான்மையைக் கொண்டிருந்த இஸ்லாமிய குடியரசுக் கட்சிக்கு இடையே ஏற்பட்ட முரண்பாடு, இறுதியில் ஹசனின் பதவி நீக்கத்திற்கு வழிவகுத்தது.


இரானிய நாட்காட்டியின்படி, ஜூன் 1981இல், இரானின் முதல் அதிபர் "அரசியல் திறமையின்மை" என்ற காரணத்தின் அடிப்படையில் நாடாளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பின் மூலம் பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.


அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகள் நடந்து வந்த நேரத்தில், அலி காமனெயி உட்படப் பலரும் அவருக்கு எதிராக வலுவான வாதங்களை முன்வைத்தனர்.


பதவி நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பானிசதர் மீது "தேசத் துரோகம் மற்றும் ஆட்சிக்கு எதிரான சதி"ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.


ஆனால், அவர் பிரான்சுக்கு தப்பிச் சென்றது மட்டுமின்றி, தனது இறுதிக் காலத்தை அங்கேயே கழித்தார்.


முகமது அலி ரஸாய்


பிரதமர் அலுவலகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் நாட்டின் பிரதமர் முகமது ஜாவத் பஹ்னருடன், முகமது அலி ரஸாயும் உயிரிழந்தார்.


பானிசதர் பதவி நீக்கத்தைத் தொடர்ந்து, முகமது அலி ரஸாய் அதிபரானார். ஆகஸ்ட் 2, 1981இல் பொறுப்பேற்ற அவரது முதல் சில வாரங்கள் அவ்வளவு சிறப்பு வாய்ந்ததாக இல்லை.


அதே ஆண்டில், பிரதமர் அலுவலகத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் நாட்டின் பிரதமர் முகமது ஜாவத் பஹ்னருடன், முகமது அலி ரஸாயும் உயிரிழந்தார். இந்தச் சம்பவம் 1981 ஆகஸ்ட் 30 அன்று நடைபெற்றது.


இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு மக்கள் மொஜாஹிதீன் அமைப்பு (Sazman e Mujahideen e Khalq) மீது குற்றம் சாட்டப்பட்டது. இருப்பினும் அந்த அமைப்பு இதற்கு அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்கவில்லை.


அவருக்குப் பிறகு அலி காமனெயி அதிபரானார். அவர் தனது பதவிக் காலம் முடியவிருந்த நேரத்தில், காமனெயின் மரணத்திற்குப் பிறகு அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


இரானியப் புரட்சிக்குப் பின்னர் தனது பதவிக்காலத்தின் முடிவில் உயர் பதவியை அடைந்து அரசியல் போட்டியில் வெற்றி பெற்ற அரசின் ஒரே தலைவர் காமனெயிதான்.


மீர் ஹுசைன் மௌசவி


பிப்ரவரி 2, 2013 அன்று மௌசவி கைது செய்யப்பட்டார். அவர் இன்னும் சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார்.


பிரதமராக அலி அக்பர் வேலாயாதி வர வேண்டும் என்று காமனெயி விரும்பினார், ஆனால் வேலாயாதியால் நாடாளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பைப் பெற முடியவில்லை. இறுதியில், அவர் மீர் ஹுசைன் மௌசவியின் பெயரை நாடாளுமன்றத்தில் முன்வைக்க வேண்டியிருந்தது.


இந்நிலையில் இவர்களது உறவில் விரிசல் ஏற்பட்டதால், மீர் ஹுசைன் மௌசவி ஒருமுறை தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.


காமனெயின் தலைமையின் கீழ் மற்றும் 1980களில் செய்யப்பட்ட அரசியலமைப்பு சட்டத் திருத்தத்திற்குப் பிறகு, பிரதமர் பதவியே முற்றிலுமாக நீக்கப்பட்டது.


இதற்குப் பிறகு, அரசியலில் இருந்து விலகிய மொசாவி இருபது ஆண்டுகளாக பொது வெளியில் தென்படவில்லை. ஆனால், மீண்டும் 2009ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிட ஒப்புக்கொண்டு வெளியே வந்த அவருக்கு அதில் வெற்றி கிடைக்கவில்லை.


இந்தத் தேர்தலுக்குப் பிறகு, பசுமை இயக்கம் என்ற பெயரில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபர் மஹ்மூத் அஹ்மதி நெஜாத்தை அகற்றுவதற்கான பிரசாரத்தை எதிர்ப்பாளர்கள் தொடங்கினர்.


இந்தப் போராட்டங்களின் போது ஏற்பட்ட மோதல் காரணமாக, மீர் ஹுசைன் மௌசவி வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.


அரபு நாடுகளில் ஏற்பட்ட கொந்தளிப்பைத் தொடர்ந்து, பிப்ரவரி 2, 2013 அன்று மௌசவி கைது செய்யப்பட்டார். அவர் இன்னும் சிறையில்தான் அடைக்கப்பட்டுள்ளார்.


அக்பர் ஹஷ்மி ரஃப்சஞ்சனி


காமனெயிக்குப் பிறகு இரானில் அதிகாரத்தில் இருந்த மிக சக்திவாய்ந்த தலைவராகக் கருதப்படுகிறார் அக்பர் ஹஷ்மி ரஃப்சஞ்சனி.


கடந்த 1989ஆம் ஆண்டு இரானின் அதிபராகப் பொறுப்பேற்ற ரஃப்சஞ்சனியின் முதல் நான்கு ஆண்டுகள் பதற்றம் நிறைந்தது. ஹெஸ்புல்லா போன்ற அமைப்புகள் அவருடைய கலாசாரக் கொள்கைகளை எதிர்க்கத் தொடங்கின.


ரஃப்சஞ்சனியின் இரண்டாவது பதவிக் காலம் 1993இல் தொடங்கிய நேரத்தில், இவரது "உயர்நிலை மற்றும் சுதந்திர சந்தைக் கொள்கைகளை" வெளிப்படையாக எதிர்த்தார் ஆயதுல்லா காமனெயி.


காமனெயிக்குப் பிறகு இரானில் அதிகாரத்தில் இருந்த மிக சக்திவாய்ந்த தலைவராகக் கருதப்படுகிறார் அக்பர் ஹஷ்மி ரஃப்சஞ்சனி. 2005 தேர்தலின் இரண்டாவது சுற்றில் இவர் மஹ்மூத் அஹ்மதி நெஜாத்திடம் தோற்றார். ஆனால் இவரது அரசியல் வெளியேற்றத்தின் திருப்புமுனை 17 ஜூலை 2009 அன்று ஏற்பட்டது.


அந்த ஆண்டு, அஹ்மதிநெஜாத் தேர்தலில் வெற்றி பெற்றார். ஆனால் தெஹ்ரான் உட்பட நாட்டின் பல நகரங்களில் அவர் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.


ஜூலை 17 அன்று, தெஹ்ரானில் நடந்த வெள்ளிக்கிழமை தொழுகையின்போது தனது கடைசி அரசியல் உரையை நிகழ்த்தினார் ஹஷ்மி. இதில் அவர் போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்ததோடு மஹ்மூத் அஹ்மதிநெஜாத்தின் தேர்தல் முடிவுகள் 'சந்தேகத்திற்குரியது' என்று பேசினார்.


பின்னர் மீண்டும் 2013ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்தார். அது ஆச்சரியமான செய்தியாகப் பார்க்கப்பட்டது.


முன்னாள் சீர்திருத்தவாத அதிபரான முகமது கடாமி அவரை ஆதரித்த போதிலும், 21 மே 2013 அன்று இரானின் கார்டியன் கவுன்சில் அவரது பரிந்துரையை நிராகரித்தது. ஆனால் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இரான் நாடாளுமன்றத்தின் மேல்சபைக்கான தேர்தலில், அவர் அபாரமான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார்.


இந்நிலையில் 2017 ஜனவரி 8ஆம் தேதி நீச்சல் குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார் ஹஷ்மி. இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டுமென 2018ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் ஹசன் ருஹானி உத்தரவிட்டார்.


அவரது குடும்பம், சாதாரண மனிதர்களைவிட அவரது உடலில் 10 மடங்கு அதிகமான கதிரியக்கம் இருந்ததாகக் குற்றம் சாட்டியது.


முகமது காடமி


அதிபர் முகமது காடமி, 9 நாட்களுக்கு ஒருமுறை தனது அரசு நெருக்கடியை எதிர்கொள்வதாகக் கூறினார்.

முகமது காடமி 20 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகளுடன் இரானின் அதிபராக 23 மே 1997 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் பதவியேற்ற முதல் மாதத்தில் இருந்தே அரசில் பதற்றம் நிலவுவதற்கான அறிகுறிகள் தென்பட்டன.


இரானின் உச்ச தலைவர் 2001ஆம் ஆண்டு சீர்திருத்தவாத பத்திரிகையை 'எதிரி தரவுத்தளம்' என்று அழைத்தது மட்டுமின்றி, டஜன் கணக்கான வெளியீடுகள் முடக்கப்பட்டன.


அப்போது 9 நாட்களுக்கு ஒருமுறை தனது அரசு நெருக்கடியை எதிர்கொள்வதாகக் கூறினார் அதிபர் முகமது காடமி. 2004 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து, இரானில் உள்ள ஊடகங்கள், காடமியின் புகைப்படங்களை வெளியிடத் தடை விதிக்கப்பட்டது.


ஃபார்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, அவர் நாட்டைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இவர் இரான் அரசியல் செயல்பாடுகளில் இருந்து அகற்றப்பட்டிருந்தாலும்கூட, சீர்திருத்தவாதிகளின் எதிர்ப்புக்கு மத்தியிலும், கடந்த தேர்தலில் மக்கள் பங்கேற்க அழைப்பு கொடுத்தார்.


மஹ்மூத் அஹ்மதிநெஜாத்


கடந்த 2009இல் நடந்த அதிபர் தேர்தலில் அஹ்மதிநெஜாத் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.


அஹ்மதிநெஜாத் 2005இல் அதிபராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதற்குப் பிறகு, ஆயதுல்லா காமனெயி மற்றும் அவருக்கு நெருக்கமான மதகுருக்களின் அறிக்கைகள், இரான் அதிபர் பதவிக்கு சரியான நபர் கிடைத்துவிட்டதற்கான அறிகுறிகளைக் காட்டியது.


ஆனால் இந்த அரசியல் நட்பு நீண்ட காலம் நீடிக்கவில்லை. 2009இல் நடந்த அதிபர் தேர்தலில் அஹ்மதிநெஜாத் இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார்.


பதவியேற்பு விழாவில் இரான் தலைவரின் (மதத் தலைவர்) கைகளுக்குப் பதிலாக தோளில் முத்தமிட்டார் அஹ்மதிநெஜாத். இரானில் அப்படி ஒரு வழக்கமே இல்லை.


சில நாட்களுக்குப் பிறகு, அஸ்ஃபன்டியார் ரஹீம் மாஷேயை முதல் துணைத் தலைவராக முன்வைத்தார் அவர். ஆனால் காமனெயி எழுதிய தனிப்பட்ட கடிதம் ஒன்றில் "இந்த தேர்வு சரியானதாக நான் கருதவில்லை" என்று தெரிவித்திருந்தார்.


ஆனால் இரானின் உச்ச தலைவர் காமனெயி-இன் அலுவலகம் இந்தக் கடிதத்தைப் பொதுவெளியில் பகிரும் வரை, அஹ்மதிநெஜாத் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.


அதற்குப் பிறகு, தகவல் துறை அமைச்சர் ஹைதர் மொஸ்லேஹியை பதவி நீக்கம் செய்ததற்கு காமனெயி எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால் அதிபர் இந்த எதிர்ப்பின் மீது ஆர்வம் காட்டவில்லை.


இதனால் ஏற்பட்ட கோபத்தின் காரணமாக, அவர் 11 நாட்களுக்கு அதிபர் அலுவலகத்திற்குச் செல்லவில்லை. மூன்றாவது முறையாக 2017இல் மீண்டும் மஹ்மூத் அஹ்மதிநெஜாத் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார். ஆனால் கார்டியன் கவுன்சில் அவரது வேட்புமனுவை நிராகரித்துவிட்டது.


ஹசன் ருஹானி


தனது பதவிக் காலத்தின் தொடக்கத்தில் இருந்தே, காமனெயி-இன் நம்பிக்கையைப் பெற ருஹானி முயன்று வந்தார்.

கடந்த 2013ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று ஹசன் ருஹானி ஆட்சிக்கு வந்தார். இவர் மிகவும் குறிப்பிடத்தகுந்த அரசியல் பிரமுகர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.


தனது பதவிக்காலத்தின் தொடக்கத்தில் இருந்தே, காமனெயி-இன் நம்பிக்கையைப் பெற ருஹானி முயன்று வந்தார்.


இருப்பினும், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்றதாகவும், 'கூட்டு விரிவான செயல் திட்டம்' (JCPOA) என்ற ஒப்பந்தத்தைத் தயாரித்ததற்காகவும் காமனெயியால் பலமுறை விமர்சனத்திற்கு உள்ளானார்.


ஹசன் ருஹானி மற்றும் அவரது உறவினர்கள் மீது பல பொருளாதார குற்றங்கள் சுமத்தப்பட்டன. அப்படி ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களில் அவரது சகோதரர் ஹசன் ஃபரிடூனும் ஒருவர்.

No comments

Powered by Blogger.