Header Ads



திருமண நாளில் கீழ்த்தரமான பகிடிவதை (உண்மைச் சம்பவம்)


கடந்த சில தினங்களுக்கு முன் "மாத்ருபூமி" என்ற சிங்கள மொழி முகநூல் பக்கத்தில் ஒரு சகோதரி தனக்கு நிகழ்ந்த சோகக் கதையை பதிவிட்டிருந்தார்.


எமது திருமணம் நிகழ்ந்து மணமகன் வீட்டு அழைப்பிற்கு நாங்கள் காரில் புறப்பட்டு அவரது ஊர் எல்லையை அடைந்திருப்போம், சில முச்சக்கர வண்டிகளில் வந்தவர்கள் எமது காரை வழிமறித்து சுற்றி வளைத்து எம்மை "பஹபல்லா எளியட" வெளியே இறங்குவீர் என அச்சுறுத்தினர்.


இருவரும் அதிர்ந்து நிற்க எனது கணவர் சிறிது நேரத்தில் "மகே யாழு செட் எக"  எனது நண்பர்கள் எனக் கூறிக் கொண்டே வெளியே இறங்கியது தான் தாமதம் அவர் மீது குட்டை நீர், அழுகிய முட்டை , அழுகிய குப்பை வாழைப்பழ தோல்  என்பவற்றை கொட்டினர்.


நான் காரிலிருந்து வெளியே குதித்து,  வேண்டாம்! ஏன் இவ்வாறு செய்கிறீர்கள்? என சப்தமிட்ட போது, நங்கி தங்கையே, இந்த வீல்பரோவில் அமருங்கள் என வற்புறுத்தி எனது கழுத்தில் சொல்ல முடியாத தூஷன வார்த்தைகளை கொண்ட ஒரு பதாகையை மாட்டி விட்டனர்.


எனது கணவரும் அவர்களை தடுக்காது கட்டுப்படுமாறு சைகை  செய்தார், நான் வெட்கம் தாளாமல்  பாய்ந்து காருக்குள் குதித்து சாரதியிடம் கதவை தாளிடுமாறு கேட்க அவரும் அவ்வாறே செய்தார்.


எனக்கு பயமாக இருக்கிறது என்னை எனது வீட்டிற்கே கொண்டு செல்லுங்கள் என மன்றாடினேன், எனது கணவரும் அவர்களும் காரை திறக்குமாறு என்னிடமும் சாரதியிடமும் கேட்டுக் கொண்டிருந்த போது பின்னால் வண்டியில் வந்த தந்தை வண்டியை நிறுத்தி ஓடோடி வந்து ஏன் மகளே என்ன நடந்தது என கேட்க நான் அவரைத் தழுவி அழுது விட்டேன்.


என்ன மருமகனே இது என தந்தை எனது கணவரைக் கேட்க அவரோ,  அவர்கள் எனது நண்பர்கள் மாமனாரே விளையாட்டாக எங்களை கேளிக்கை செய்கிறார்கள் என கூறினார்.


ஆத்திர மேலீட்டால் தந்தை கணவரின் நண்பர்களைப் பார்த்து ஒரு நண்பருக்கு  இவ்வாறு தான் செய்வீர்களா என சப்தமிட்டார், மருமகன் தடுத்த போது நீங்கள் உங்கள் நண்பர்களை தடுத்திருக்க வேண்டும், எனது மகளை பாதுகாப்பாக உங்களிடம் ஒப்படைத்தால் நீங்களல்லவா அவளை பாதுகாக்க வேண்டும் என கவலையோடு கூறினார்.


விளையாட்டு கேளிக்கை தெரியாதவர்களோடு இன்னும் பழைய யுகத்தில் இருப்பவர்களோடு நமக்கு சரிப்பட்டு வராது என கணவரின் நண்பர்கள் கூறி விலகிச் செல்ல ஆரம்பித்தனர்.


பயந்து போயிருந்த என்னிடம், மகளே, என்ன சொல்கிறாய்? எனக் கேட்க நானும் எனக்கு அங்கு செல்ல பயமாக இருக்கிறது என்று கூறினேன், தந்தை எனது கணவரிடம் மருமகனே நீங்களும் அங்கு வந்து சேருங்கள் எனக் கூறி விட்டு அவரது வண்டியில் என்னை ஏற்றிக் கொண்டு வீட்டுக்கு வந்து விட்டார்.


வரும் வழியில் அதிர்ச்சியில் மனமுடைந்து தந்தையின் தோலில் சாய்ந்து அழுது வண்ணம்  வந்த என்னிடம், மகளே, மருமகன் தவறை உணர்ந்து இங்கு வருவார், அவ்வாறு உணர்ந்து வருந்தி வரும் மனநிலை அவருக்கு இல்லை என்றால் அந்த வாழ்க்கை உனக்கு பாதுகாப்பானதாக இருக்க மாட்டாது என ஆறுதல் கூறினார்.


குறிப்பு: 

இது சுருக்கமாக தமிழில் தரப்பட்டுள்ளது, விளையாட்டு  கேளிக்கை கள் என்ற பெயரில் சமூக கலாசார மானுட மரபுகளை அகோரமாக மிகவும் மட்டரகமாக கட்டுடைக்கும் மனநிலை புதிய தலைமுறைகள் மத்தியில் ஏற்பட்டு வருகிறது.


வாழ்க்கையில் அழகிய தருணங்களை எல்லாம் அசிங்கப் படுத்துகிற இறக்குமதி செய்யப்பட்ட கீழ்தரமான  தொற்று நோய் நகர் புறங்களில் இருந்து இன்று கிராமப்புறங்களிலும் பரவி வருகிறது.


விதவிதமான அடிமுட்டாள் தனமான மட்டரகமான நினைவுகளை தருணங்களை பதிவு செய்து சமூக சீர்கேடுகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து சில்லறை உழைக்க காத்திருக்கும் கயவர்கள் வாழும் யுகமிது.


திருமணம், வலீமா சார்ந்த சகல விடயங்களும் விசுவாசிகளுக்கு இபாதத் ஆகும், அது பழைய புதிய எல்லாத் தலைமுறைகளுக்கும் பொதுவானது.


குடும்ப சமூக சன்மார்க்க மானுட விழுமியங்களை கட்டுக்கோப்புகளை கட்டுடைத்து மகிழ்பவர்கள் தமக்கு மாத்திரமல்ல ஒட்டு மொத்த சமூகத்திற்கும் சன்மார்க்கத்திற்கும் கேடு விளைவிக்கும் சாபத்தை அல்லவா வரிந்து கட்டிக் கொள்கின்றனர்.


பெற்றார் பெரியவர்களின் ஆசீர்வாதத்துடன் துஆக்கள் பிரார்தனைகளுடன் ஆரம்பமாக வேண்டிய தருணங்களை நாம் பதுஆக்களுடன் சாபங்களுடன் ஆரம்பிப்பதில் என்ன வகை மகிழ்ச்சி இருக்கிறது.


திருமண பயான்களில் குத்பாக்களில் இத்தகைய சீர்கேடுகளை பற்றியும் பேசுமாறு உலமாக்களை கேட்டுக் கொள்வோம்!


மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்

24.05.2024

No comments

Powered by Blogger.