Header Ads



6 கிராமங்கள் புதைந்தன, நூற்றுக் கணக்கானோர் உயிரிழப்பு - பப்புவா நியூகினியில் சோகம்


பப்புவா நியூ கினியில் மலைப் பிரதேசத்தில் ஆறு கிராமங்களை தாக்கிய நிலச்சரிவு ஒன்றில் பல வீடுகள் புதையுண்ட நிலையில் கிராம மக்கள் பலரும் உயிரிழந்திருக்காலம் என்று அஞ்சப்படுகிறது.


தொலைதூர என்கா மாகாணத்தில் உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை 3 மணி அளவில் கிராம மக்கள் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.


‘பாரிய நிலச்சரிவில் பெரும் பொருள் மற்றும் உயிர்ச் சேதங்கள் ஏற்பட்டுள்ளது’ என்று மாகாண ஆளுநர் பீட்டர் இபாடஸ் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். இதில் நூற்றுக்கணக்கானவர்கள் புதையுண்டிருப்பதாக உத்தியோகபூர்வமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன.


இதில் ஆறுக்கும் மேற்பட்ட கிராமங்கள் தாக்கப்பட்டிருப்பதாகவும் இது முன்னெப்போதும் நிகழாத ஓர் அனர்த்தம் என்றும் அவர் பின்னர் குறிப்பிட்டார். இதனால் கணிசமான சேதம் ஏற்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


அவசர மருத்துவக் குழுக்கள், இராணுவம், பொலிஸ் மற்றும் ஐ.நா நிறுவனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து பாதிப்பின் அளவை மதிப்பிட்டு வருவதோடு காயமடைந்தவர்களுக்கு உதவி வருகின்றனர்.


அடர்த்தியான மரங்கள் சூழ்ந்திருக்கும் முங்காலோ மலையில் பாறைகள் மற்றும் மண் மேடுகள் சரிந்திருக்கும் படங்கள் சம்பவ இடத்தில் இருந்து வெளியாகியுள்ளன. உள்ளூரைச் சேர்ந்த ஆண்கள் மற்றும் பெண்கள் உயிர் தப்பியோரை தேடி அந்த மண் மேட்டை தோண்டுவதும், அவநம்பிக்கையில் அழுதபடி இருப்பதையும் காண முடிகிறது.


‘நிலச்சரிவு கடந்த இரவு மூன்று மணி அளவில் இடம்பெற்றதோடு 100க்கும் அதிகமான வீடுகள் புதையுண்டன’ என்று உள்ளூர் சமூக அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் வின்சன்ட் பியாட்டி ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார். ‘அந்த வீடுகளில் எத்தனை பேர் இருந்தார்கள் என்பது இன்னும் தெரியவில்லை. உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை தெரியாதுள்ளது’ என்றும் அவர் கூறினார்.


அனர்த்தம் இடம்பெறும்போது கிராமத்தில் 300 பேர் வரை இருந்திருக்கலாம் என்று அருகில் உள்ள பொர்கேரா பகுதியின் வர்த்தக மற்றும் தொழில்துறை சங்க தலைவர் நிக்சன் பகேயா குறிப்பிட்டுள்ளார். எனினும் இந்த எண்ணிக்கை உடன் உறுதி செய்யப்படவில்லை.


இதில் சுமார் 100 பேர் வரை உயிரிழந்திருப்பதாக அவுஸ்திரேலிய ஒளிபரப்பு கூட்டுத்தாபனம் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எனினும் நிர்வாகம் இதனை இன்னும் உறுதி செய்யவில்லை. 


உயிரிழந்தவர்கள் அல்லது காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 100 மற்றும் 500 இற்கு இடையே இருக்கும் என்று செஞ்சிலுவை சங்கம் கணித்துள்ளது. எனினும் சரியான நிலை குறித்து கண்டறிய முயன்று வருவதாக செஞ்சிலுவை சங்க பப்புவ இடைக்கால பொதுச் செயலாளர் ஜனட் பிலமன் தெரிவித்துள்ளார்.


‘நிலச்சரிவை தூண்டுவதற்கான பூகம்பம் அல்லது எந்த ஒரு சம்பவமும் இடம்பெற்றதாகத் தெரியவில்லை. இங்கே தங்க சுரங்கம் ஒன்று இருப்பதோடு அந்த மலையில் மக்கள் தங்க சுரங்கம் தோண்டியுள்ளனர்’ என்று பிலமன் குறிப்பிட்டுள்ளார்.


இல்லாவிட்டால் கடும் மழை நிலச்சரிவை ஏற்படுத்தி இருக்கக் கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


அடிக்கடி மழை பெய்யும் இந்தப் பகுதியில் இந்த ஆண்டில் கடும் மழை, வெள்ளம் பதிவாகியுள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் அருகாமை மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவு ஒன்றில் 23 பேர் கொல்லப்பட்டனர்.

No comments

Powered by Blogger.