2 தடவை தீப்பற்றி எரிந்த வெலிகம ஹப்ஸா கல்லூரி - உண்மைகள் வெளியாகுமா..?
- எஸ்.என்.எம்.சுஹைல் -
‘வெலிகம’ என்ற சிங்கள பெயர்கொண்டு அழைக்கப்படும் தென்னிலங்கையின் பாரம்பரிய முஸ்லிம் கிராமம்தான் வெலிகாமம். 2008 ஆம் ஆண்டுமுதல் தென்னிலங்கையில் தீனொளி பரப்பும் கல்விக் கூடமாக திகழ்கிறது வெலிகம ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரி. வெலிகம பிரதேச செயலகத்தில் பதிவு செய்யப்பட்டட சமூக சேவை அமைப்பான வெலிகம அல் இஹ்ஷான் நலன்புரி சங்கத்தினால் நடத்தப்படும் குறித்த அரபுக்கல்லூரி, முஸ்லிம் சமய கலாசார பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் MRCA13/1/PSA/137 எனும் இலக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அங்கு 120 மாணவிகள் கல்வி பயில்வதுடன் 10 ஆசிரியர்களும் கற்பிக்கின்றனர். மேலும், மார்க்கக் கல்வியுடன் பாடசாலை பாடத்திட்டத்திற்கமைய போதனைகளும் இடம்பெறுகின்றன.
கடந்த இரண்டு மாத இடைவெளிக்குள் இரண்டு தடவைகள் இந்த பெண்கள் அரபுக் கல்லூரியானது தீப்பற்றி எரிந்த சம்பவம் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இத் தீ விபத்துகளால் மத்ரஸாவின் விடுதி முற்றாக நாசமாகியுள்ளது. எனினும் இதற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என அரபுக்கல்லூரியின் பணிப்பாளர் எம்.ஒ.பத்ஹுர் ரஹ்மான்(பஹ்ஜி) தெரிவித்தார்.
கடந்த திங்கட் கிழமை 29 ஆம் திகதி மாலை 4.45 மணிக்கும் 5 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் வெலிகம ஹப்ஸா பெண்கள் அரபுக் கல்லூரியின் மூன்றாம் மாடியில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. இதன்போது, மாணவர்கள் அனைவரும் பாடசாலை கல்வித் திட்டத்திற்கு அமைய இடம்பெறும் வகுப்புகளில் கலந்துகொண்டிருந்தனர். எனினும், ஆசிரியை ஒருவரும் விடுதி மேற்பார்வையாளரும் அங்கு தங்கியிருந்தனர். விடுதியின் பின் அறையிலுள்ள அடுக்கு கட்டிலின் மெத்தை பற்றி எரிவதை கண்ட விடுதி மேற்பார்வையாளரும் ஆசிரியரொருவரும் பதறியடித்துக்கொண்டு கீழ் மாடிக்கு ஓடி வந்து தீயை அணைக்குமாறு உதறு கோரி ஏனையோரை அழைத்துள்ளனர். அதற்குள் தீ கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு முழுமையாக பற்றிக்கொண்டுள்ளது.
உடனடியாக பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து குறித்த தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். எனினும், அரபுக் கல்லூரியின் மூன்றாம் மற்றும் இரண்டாம் மாடிகள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன.
இதன்போது, குறித்த விடுதிக் கட்டடத்திற்குள் இருந்த மாணவர்களின் உடைகள் ஏனைய உடமைகள், தளபாடங்கள் என்பன முழுமையாக எரிந்து நாசமடைந்துள்ளன. இதனால் பெருமளவு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கல்லூரியின் பணிப்பாளர் மேலும் கூறினார்.
அத்தோடு, ‘கடந்த மார்ச் மாதம் 3 ஆம் திகதியும் இது போன்ற பேரனர்த்தம் குறித்த மத்ரஸாவில் இடம்பெற்றது. இதன்போது, ஏற்பட்ட சேதங்களை திருத்திய பின்னர் கடந்த 25 ஆம் திகதியே மாணவர்களை கல்லூரிக்கு மீள அழைத்து விரிவுரைகளை 26 ஆம் திகதி ஆரம்பித்தோம். எனினும், சில தினங்களுக்குள் மீண்டும் இவ்வாறானதொரு அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது. கடந்த மார்ச்சில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பிலான பகுப்பாய்வு அறிக்கையை கடந்த வாரம் நாம் கோரியிருந்தோம். அத்தோடு விசாரணை அறிக்கை தொடர்பாகவும் பொலிஸாரிடம் வினவியிருந்தோம். எமக்கு எந்தவொரு பதிலும் தரப்படவில்லை. இதற்கிடையில், கடந்த திங்களன்று ஏற்பட்ட தீ பரவலையடுத்து உடனடியாக பொலிஸார் ஸ்தலத்துக்கு வந்தனர். எம்மிடம் விசாரணைகளை மேற்கொண்டனர். கொழும்பிலிருந்து இரசாயன பகுப்பாய்வு திணைக்கள அதிகாரிகளும் வருகை தந்து தீ பரவ ஆரம்பித்த இடத்திலிருந்து மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளனர்” என்றார் பத்ஹுர் ரஹ்மான்(பஹ்ஜி).
இதனிடையே, கடந்த திங்கட் கிழமை மதியம் ஹப்ஸா அரபுக்கல்லூரி வான் பரப்பில் ட்ரோன் கெமராவொன்று பறந்துள்ளதை விடுதி மேற்பார்வையாளர் அவதானித்துள்ளார். இது குறித்து மத்ரஸா நிர்வாகம் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளது. எனினும், குறித்த ட்ரோன் கெமரவானது அப்பகுதியில் தங்கியிருக்கும் ஜேர்மனியைச் சேர்ந்த சுற்றுலா பிரயாணி ஒருவருடையது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, அடுத்தடுத்து இரு தடவைகள் குறித்த மத்ரஸாவில் தீப்பரவல் ஏற்பட்டுள்மையானது பிரதேச மக்களிடையே ஒருவித சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, கடந்த திங்களன்று 29 ஆம் திகதி வெலிகம பகுதியில் முழுமையாக மின்துண்டிப்பு ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் இவ்வாறு தீ அனர்த்தம் நிகழ்ந்துள்ளமை பல்வேறு சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் ஏற்பட்டதையடுத்து குறித்த மத்ரஸா கட்டடத்திற்குள இன,மத பேதமின்றி அனைத்து தரப்பினரும் சென்று தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தமையானது பிரதேசத்தின் இன ஐக்கியத்தை காட்டுவதாகவும் பணிப்பாளர் குறிப்பிட்டார். மேலும், இயக்க, கொள்கை வேறுபாடுகளுக்கப்பால் அனைவரும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதையும் அவர் ஞாபகமூட்டினார்.
அத்தோடு, ஸ்தலத்துக்கு வருகை தந்த ஐக்கிய தேசியக் கட்சியின் வெலிகம அமைப்பாளர், ஜனாதிபதி அலுவலக பிரதானியும், ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான ஆலோசகர் சாகல ரத்னாயக்கவை தொடர்பு கொண்டு விடயத்தை தெரியப்படுத்தியுள்ளார். இதபோது, இவ்விடயம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கும் எனவும் அவர் இதன்போது உறுதியளித்துள்ளார்.
சம்பவத்தையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த வெலிகம நகரசபை முன்னாள் நகர பிதா எச்.எம்.முஹம்மத், சபாநாயகருக்கு இதுவிடயமாக தெரியப்படுத்தியுள்ளார்.
தீ விபத்தை அடுத்து அங்கு கற்கும் மாணவிகள் சிலரது பெற்றோரும், அந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் சிலரும் அறிவித்ததைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் அன்று நள்ளிரவு 12 மணியளவில் வெலிகமைக்குச் சென்று தீ பரவலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள பிரஸ்தாப மகளிர் அரபிக் கல்லூரியை பார்வையிட்டதோடு, அங்கிருந்தவர்களிடம் நிலைமையைக் கேட்டறிந்து கொண்டார்.
கடந்த மார்ச் மாதம் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக 60 இலட்சம் ருபா வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தனவந்தர்களும், ஊர் மக்களும், பழைய மாணவிகளும் ஒத்துழைப்புடன் மத்ரஸா திருத்தப்பட்டு மீள கடந்த வாரம் ஆரம்பிக்கப்பட்டது.
எனினும் மீண்டும் அனர்த்தம் ஏற்பட்டதையடுத்து, அரபுக் கல்லூரியில் பயிலும் 120 மாணவிகளும் தத்தமது ஊர்களுக்கு பெற்றோர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.
இது தொடர்பில் பொலிசார் நியாயமானதொர விசாரணையை நடத்தி தீ விபத்துக்கான உண்மையான காரணத்தை கண்டறிய வேண்டியது அவசியமாகும்.- Vidivelli
Post a Comment