Header Ads



தொலைபேசி கேமுக்கு அடிமையாகி, தாயை கொலை செய்தானா 16 வயது மகன்..?


சிறுவர்களிடம் கைபேசிகளை வழங்குவது தொடர்பில், பெற்றோர்கள் அவதானமாக செயற்படுமாறு காவல்துறை வலியுறுத்தியுள்ளது.


அவர்களுக்கு கைபேசிகளை வழங்குவதன் காரணமாக பல்வேறு வகையான பிரச்சினைகளை எதிர்நோக்குவதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.


கொழும்பில் இன்று (2024.05.05) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில், யாழ்ப்பாணம் - தெல்லிப்பழையில் உள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம் தொடர்பில், கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பகுதியில் வீடொன்றில் இருந்து சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த பெண்ணின் சடலமொன்று நேற்றைய தினம் மீட்கப்பட்டிருந்தது.


அதேநேரம், சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின், 16 வயதுடைய மகன் காணாமல் போயுள்ளார்.


அவர் தொடர்ந்தும் தேடப்பட்டு வருவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.


சடலமாக மீட்கப்பட்ட பெண்ணின் மகன், 'மொபைல் கேம்ஸ்' எனப்படும் கைபேசி விளையாட்டுக்களுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.


அத்துடன், 16 வயதுடைய குறித்த சிறுவன் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கலாம் எனவும், அவரது அறையில் சில வாசகங்கள் இரத்தத்தால் எழுதப்பட்டுள்ளதாகவும் காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.


இந்த நிலையில், இதன்காரணமாக குறித்த 16 வயதுடைய சிறுவன் தமது தாயை கொலை செய்திருக்கலாம் என காவல்துறை சந்தேகம் வெளியிட்டுள்ளது.  jvp

No comments

Powered by Blogger.