Header Ads



விளம்பரப் பலகையினால் விபரீதம் - இறந்தவர்கள் 14 ஆக உயர்வு


மும்பையில் நேற்று (13) வீசிய புயல் மற்றும் மழைப்பொழிவு காரணமாக, இராட்சத விளம்பரப் பலகையொன்று சரிந்து விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.


இந்த விபத்தில் சுமார் 60 பேர் காயமடைந்துள்ளனர்.


நேற்று 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.


அதன்படி மாலை 4 மணியளவில் திடீரென வானத்தில் கருமேகங்கள் திரண்டு பலத்த காற்று வீசத் தொடங்கியது. 50 முதல் 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசியது. இதனால் புழுதி பறந்தது. அத்துடன் இடியுடன் கூடிய பலத்த மழையும் பெய்தது. காற்று, புழுதி, மழையும் சேர்ந்து தாக்கியதால் மும்பை நகர் மற்றும் புறநகர் பகுதிகள் தூசி படலமாக காட்சியளித்தது.


மும்பை புறநகரில் அமைந்துள்ள காட்கோபர் பகுதியில் உள்ள சம்தா காலனியின் ரயில்வே பெட்ரோல் நிலையம் அருகே ஒரு ராட்சத விளம்பர பலகை பொருத்தப்பட்டிருந்தது. நேற்று மாலை 4.30 மணியளவில் திடீரென வீசிய பலத்த சூறைக்காற்றால் இது சரிந்து விழுந்தது. 70×50 மீட்டர் என்ற அளவில் இருந்த மிகப்பெரிய பலகை அது.


அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்த விளம்பரப் பலகை பெட்ரோல் நிலையம் மீது விழுந்துள்ளது. மழை மற்றும் புழுதிப் புயல் காரணமாக ஏராளமான மக்கள் அந்த பெட்ரோல் நிலையத்தில் ஒதுங்கி நின்றுள்ளனர்.


சம்பவ இடத்தில் மீட்புப் பணி நள்ளிரவு வரை தொடர்ந்ததாகவும், மேலும் சிலர் சிக்கியிருக்க வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


தேசியப் பேரிடர் மேலாண்மைக் குழுவினரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.


முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே சம்பவ இடத்துக்கு நேரில் சென்று மீட்பு பணிகளைப் பார்வையிட்டார். உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா ரூ.5 இலட்சம் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.


No comments

Powered by Blogger.