Header Ads



இலங்கையில் ஈரானிய அமைச்சரை கைது செய்யுமாறு கேட்ட ஆர்ஜென்டினா


ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியுடன்அந்நாட்டு உள்துறை அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் அவர் திடீரென தனது முடிவை மாற்றிக்கொண்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


ஈரானிய ஜனாதிபதி  இலங்கைக்கு மின்சாரம் மற்றும் நீர்ப்பாசனத் திட்டத்தைத் ஆரம்பித்துவைப்பதற்காக வருகை தந்திருந்தார். இருப்பினும் ஈரானிய உள்துறை அமைச்சரின் துணையின்றி அவர் இலங்கை வந்துள்ளார்.


கடந்த 1994 ஆம் ஆண்டு ஆர்ஜென்டினாவின் தலைநகரில் யூத சமூகத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் 85 பேர் கொல்லப்பட்டனர்.


இந்தத் தாக்குதலுக்கு ஈரானின் தற்போதைய உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹிதியே  காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.


இந்த அமைச்சர் ஈரான் ஜனாதிபதியுடன் பாகிஸ்தான் சென்ற பின்னர் இலங்கை வருவதற்கு திட்டமிட்டிருந்தார். எனினும், அவரை கைது செய்ய வேண்டும் என இன்டர்போல் (Interpol) எனப்படும் சர்வதேச பொலிஸார் அறிவிப்பொன்றை விடுத்திருந்தனர்.


ஆர்ஜென்டினாவின் வேண்டுகோளையடுத்து இன்டர்போல் இந்த அறிவிப்பை விடுத்தது.


இதன்படி, இலங்கையும், பாகிஸ்தானும் ஈரானின் உள்துறை அமைச்சரை கைது செய்ய வேண்டும் என ஆர்ஜென்டினா கோரியிருந்தது.


எனினும், அஹ்மத் வஹிதி செவ்வாய்கிழமை (23) ஈரானுக்கு திரும்பியுள்ளதாக ஈரானின் அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.


இதேவேளை, இலங்கை வந்த ஈரானிய தூதுக்குழுவில் அந்த நாட்டு உள்துறை அமைச்சர் அஹ்மத் வஹிதி இருக்கவில்லை என இலங்கையின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments

Powered by Blogger.