ஞானசாரருக்கு வக்காலத்து வாங்கும் ஞானசூனியர்கள்
- கலாநிதி அமீரலி -
கொழும்பின் உயர்நீதிமன்ற நீதியரசர் ஆதித்திய பதபென்டிகே எனும் ஒரு பௌத்தர் பௌத்த துறவியென்ற போர்வைக்குள் மறைந்திருந்து கலகக்காரன் நாரதன்போன்று இலங்கையெங்கும் இனவாதத்தை வளர்த்துக் கலவரங்களையும் ஏற்படுத்திய அரசியல் பௌத்தத்தின் துஷ்டக் குழந்தை ஞானசாரருக்கு நான்கு வருடக் கடூழியச் சிறையும் நூறாயிரம் ரூபா அபராதமும் தண்டனைகளாக விதித்துள்ளமை இலங்கையின் சுதந்திரத்துக்குப் பின்னுள்ள வரலாற்றில் ஒரு மைல்கல் எனக் கருதலாம். அவர் இழைத்த குற்றம் என்னவெனில் இஸ்லாத்தைப் பற்றியும் அதன் புனித குர்ஆனைப்பற்றியும் முஸ்லிம்களைப் பற்றியும் பல அவதூறுகளைப் பரப்பி கலகங்களுக்கும் வித்திட்டார் என்பதாகும். ஆனால் அவர் முஸ்லிம்களை மட்டும் புண்படுத்தவில்லை. ஏனைய சிறுபான்மையினரின் மதக்கொள்கைகளையும் அவர்களது புனித ஸ்தலங்களையும் மாசுபடுத்தி உள்ளார். உதாரணத்துக்கு, முல்லைத்தீவின் நீராவியடிப்பிள்ளையார் கோவில் முன்றத்தில் கொழும்பிலே மரணித்த ஒரு பௌத்த துறவியின் சிதையை நீதிபதியின் தடையுத்தரவையும்மீறித் தகனம் செய்து இந்துக்களின் புனித தலத்தினை மாசுபடுத்தியதை இந்து மக்கள் மறக்க மாட்டார்கள். அதேபோன்று 2014ல் அளுத்கமயில் வெடித்த சிங்கள முஸ்லிம் இனக்கலவரத்தின் பிரதான சூத்திரதாரியும் இவர்தான் என்பதையும் காத்தான்குடிக்கு விஜயம்செய்து அங்கு நீண்ட காலமாகப் புகைந்துகொண்டிருந்த ஒரு மதவாதப் பிரச்சினைக்கு எண்ணையூற்றிக் கொழுந்துவிட்டெரியச் செய்தமையையும் முஸ்லிம்கள் மறப்பார்களா? இந்தக் கலகக்காரப் பிரகிருதியின் செயல்களையெல்லாம் பட்டியலிட்டால் ஓர் அகராதியையே படைத்துவிடலாம். தன்னைத் தட்டிக்கேட்க யாருமில்லை என்ற மமதையில் ஓடிக்கொண்டிருந்த இந்தக் கௌத்தமரின் எதிரியைச் சிறைக்குள் தள்ளிய பௌத்த நீதியரசர் முஸ்லிம்களுக்கென எந்தச் சலுகையையும் வழங்கவில்லை. அவர் தனது கடமையை அதாவது சட்டத்தின் வலுவை எவருக்கும் பயப்படாது நிலைநாட்டியதையே இக்கட்டுரை பாராட்டுகிறது. இலங்கையின் இன்றைய அரசியற் சூழலில் அவரது தீர்ப்பு நீதித்துறையின் சுதந்திரத்துக்குக் கிடைத்த மகத்தான ஒரு வெற்றி. அது மட்டுமல்ல, இரண்டு வருடங்களுக்கு முன்னர் இந்த நாட்டின் சமூகப் பொருளாதார அரசியல் அமைப்பையே மாற்று என்ற கோஷத்துடன் கிளர்ந்தெழுந்த ஓர் இளைய தலைமுறையின் அரகலய ஆர்ப்பாட்டத்துக்குக் கிடைத்த இரண்டாவது வெற்றியுமாகும். அதைப்பற்றிப் பின்னர் விபரிப்போம்.
முதலில், பௌத்தம் இலங்கைக்குக் கிடைத்த ஓர் அருட்கொடை என்றால் அரசியல் பௌத்தம் அதற்குக் கிடைத்த ஒரு சாபக்கேடு. 1950களில் உருவாகிய அரசியல் பௌத்தமே சிங்கள பௌத்த பேரினவாதத்தை இந்த நாட்டின் ஜனநாயகத்தின் அடித்தளமாக மாற்றிவிட்டது. அரசியல் சட்ட யாப்பும் பௌத்தத்துக்கு அதியுன்னத இடத்தை வழங்கி அதன் மறைமுகமாக பௌத்த சங்கத்தினருக்கும் அதியுன்னத நிலையை வழங்கிற்று. அந்தப் பேரினவாதத்தைத் தழுவிய அரசியற் கட்சிகளையும் அதன் அங்கத்தவர்களையும் ஆட்சிபீடத்தில் ஏற்றிவிட்டு அவர்களுக்குப் பேரினவாதத்தை நிலைநாட்டுவதற்காக எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்வதற்குப் பூரண சுதந்திரமும் வழங்கப்பட்டது.
அவ்வாட்சியாளர்களின் குற்றங்களைத் தண்டிக்க நீதிமன்றம் தேவையில்லை, பௌத்த சங்கத்தினரின் காலடிகளிலே வீழ்ந்தாற்போதும் என்ற ஒரு நிலை உருவாகிற்று. அந்த அமைப்புதான் கடந்த ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இந்த நாட்டில் பிரிவினைவாதத்தை வளர்த்து, ஒரு பல்லின சமூகத்தின் ஒற்றுமையைச் சீரழித்து, உள்நாட்டுப் போர் ஒன்றையும் தோற்றுவித்து, பொருளாதாரத்தை வங்குரோத்து அடையச்செய்து பாரிய கடன் சுமைக்குள் நாட்டை மூழ்கவும் வைத்துள்ளது. எனினும், மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளுள் மிகவும் ஆபத்தானதுதான் நீதித்துறைக்குள் அரசியல் புகுந்தமையாகும். அந்தத் தலையீடே பல நிரபராதிகள் தண்டிக்கப்படுவதற்கும் குற்றவாளிகள் விடுதலையாவதற்கும் அரசியல்வாதிகளின் அடியாட்கள் குற்றம் இளைப்பதற்கும் அடிப்படைக் காரணமாய் அமைந்தது. அந்தக் காரணத்தினாலேதான் கலகப்பிரியர் ஞானசாரரும் இன்றுவரை தனது துஷ்டகைங்கரியங்களை பயமேதுமின்றி நிறைவேற்றி வந்தார்.
ஆனாலும் ஞானசாரர் சிறைக்குள் தள்ளப்பட்டது இதுவே முதற்தடவை அல்ல. இதற்கு முன்னரும் நீதிமன்றத்தை அவமதித்ததற்காகவும் ஒரு கேலிச்சித்திரக்காரனின் மனைவியைத் துன்புறுத்தியதற்காகவும் அவர் சிறைக்குள் தள்ளப்பட்டார். ஆனால் முன்னைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிறைவேற்று அதிகாரத்தின்கீழ் அவருக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்தார்.
அதற்கு முழுக்காரணம் சிரிசேனவின் அரசியல் இலாபநோக்கே. ஜனாதிபதியின் ஆட்சிக்காலம் முடிவுறும் தறுவாயில் அடுத்த தேர்தலில் அவர் போட்டியிட்டு வெல்வதற்காக பௌத்த சங்கத்தினரினதும் பௌத்த வாக்காளர்களினதும் ஆதரவை நாடியே அந்த மன்னிப்பை வழங்கினார். ஆனாலும் அவரைவிடவும் அரசியல் பௌத்தத்தில் மூழ்கிய கோத்தாபய ராஜபக்ச 2019 தேர்தலில் வென்று ஜனாதிபதியாகியபின் கலகக்கார ஞானசாரரை ஒரே சட்டம் ஒரே நாடு என்ற பேரினவாத நியதியை அமுலாக்குவதற்காக நியமிக்கப்பட்ட அரசபணிச் சபைக்குத் தலைவராக்கியதை எவ்வாறு சரி காண்பதோ? சிங்கள பௌத்த பேரினவாத அரசியல் எந்த அளவுக்கு இந்த மாணிக்கபுரியை உலகபார்வையில் மங்கவைத்துள்ளது என்பதற்கு இதைவிடவும் உதாரணம் வேண்டுமா?
இவை ஒரு புறமிருக்க, ஞானசாரரை மீண்டும் மன்னித்து விடுதலை வழங்குவதற்கான ஒரு சூழ்நிலை உருவாகுவதை இன்றைய அரசியல் நிலைப்பாடு தோற்றுவிக்கக்கூடும் என்பதற்கு சில அறிகுறிகள் காணப்படுகின்றன. அவற்றுள் முக்கியமானது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹவின் நிலைப்பாடு. தேர்தலொன்று இவ்வருட இறுதிக்குள் நடைபெறும் என்பதை அவர் அறிவித்துள்ளார். அந்தத் தேர்தலில் அவர் களமிறங்குவதும் பெரும்பாலும் நிச்சயம். ஆனால் அவரை எதிர்த்துப் போராடப்போகிறவர்கள் ஒருவரா இருவரா அல்லது மூவரா என்பது இன்னும் தெரியாது. எவ்வாறாயினும் அவர்களுள் ஒருவர் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுர குமார திஸாநாயக என்பது உறுதி. அனுரவுக்கான ஆதரவு நாளுக்கு நாள் அதிகரிப்பதை அவதானிகள் உணர்கின்றனர். இந்த நிலையில் ஜனாதிபதிக்கான போட்டி இருமுனைப் போட்டியாக அமைந்தாற்தான் அனுரவைத் தோற்கடிக்கலாம் என்ற ஒரு நிலைப்பாடும் தோன்றியுள்ளது. அதனைச் சாத்தியப்படுத்துவதற்காகப் பல முனைவுகள் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் மேற்கொள்ளப்படுகின்றன. அவ்வாறாயின் அந்த இருவருள் மற்றவர் இப்போதைய ஜனாதிபதிதான் என்ற கருத்தும் வலுவடைந்துகொண்டு வருகின்றது.
இந்த நிலையில் பௌத்த சிங்கள வாக்குகளுட் பெரும்பாலானவற்றையும் சிறுபான்மை இனங்களின் வாக்குகளையும் விக்கிரமசிங்ஹவினால் திரட்ட முடியுமாயின் அவர் நிச்சயம் வெற்றிடைவார் என்பது பலரதும் எதிர்பார்ப்பு.
அந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே அவரது அரசியல் நடவடிக்கைகளும் அமைந்துள்ளன. இந்தச் சூழலில் ஞானசாரரின் சிறைவாசம் ஒரு தலையிடியை அரசியல் வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ளது என்பதை மறுக்கமுடியாது. ஏற்கனவே பௌத்த சங்கத்தினருள் ஒரு குழுவினர் ஞானசாரர் தன் தவறை உணர்ந்து முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டார். ஆதலால் அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்யப்படவேண்டும் என்று குரல் எழுப்பியுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து முஸ்லிம்களும் ஞானசாரரின் மன்னிப்பை ஏற்றுக்கொண்டு அவரின் விடுதலைக்கு ஆதரவளித்தால் நிலமை சுமுகமாக முடிவுறும். எவ்வாறு சிங்கள பௌத்த வாக்குகளை முன்வைத்து சிரிசேன அன்றைய சிறைக்கைதி ஞானசாரருக்கு மன்னிப்பு வழங்கினாரோ அதேபோன்ற ஒரு நிலைப்பாடு இன்று விக்கிரமசிங்ஹவுக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் சிரிசேனவைவிட விக்கிரமசிங்ஹ மகா புத்திசாலி. அரசியல் தந்திரங்களை அவரது மாமா ஜே. ஆர். ஜெயவர்த்தனவிடமிருந்து கற்றுக்கொண்டவர்.
தனது சங்கடம் தீர்வதற்கு முஸ்லிம் அரசியல் பிரபல்யங்களையும் முல்லாக்களையும் துரும்பாகப் பயன்படுத்தத் தயங்கமாட்டார். முஸ்லிம் பிரபல்யங்களோ அற்ப சலுகைகளுக்காக எதையும் செய்வார்கள் என்பதை அவர்களின் அண்மைக்கால அரசியல் வரலாறு நன்கு உணர்த்தும். அந்த நிலையை அறிந்து அதே பிரபலங்களையும் முல்லாக்களின் திருச்சபையையும் மறைமுகமாகத் தூண்டி இஸ்லாத்தின் தார்மீகப் பண்புகளின் அடிப்படையில் முஸ்லிம் சமூகம் ஞானசாரரை மன்னிக்கத்தயார் என்ற ஒரு பகிரங்க அறிக்கையை வெளியிட்டால் அதன் வாக்குப் பெறுமதி அளப்பரியதாக அமையும். அவ்வாறான ஒரு முயற்சியில் சில முஸ்லிம் ஞானசூனியங்கள் ஈடுபடுவதாக அறியக்கூடியதாக உள்ளது. ஆகையால் அவர்களுக்கு எச்சரிக்கையாகப் பின்வரும் ஒரு விடயத்தை இக்கட்டுரை சுட்டிக்காட்ட விரும்புகிறது.
பெருமானார் அவர்கள் தனது சொந்த மாமா அபூ தாலிபின் பாவங்களை மன்னிக்குமாறு அல்லாஹ்விடம் இறைஞ்ச முற்பட்டபோது அது இறைவனால் தடைசெய்யப்பட்டதற்கு குர்ஆனே சாட்சி. அதே குர்ஆன் நபிகளாரின் பரம எதிரி அபூலஹபுக்கு என்ன நடந்தது என்பதையும் தெட்டத்தெளிவாக்கி உள்ளது. இந்த நிலையில் ஞானசாரருக்கு வக்காலத்துபேசி அவரை மன்னிக்க ஆயத்தமாவதற்கு இந்தச் சில்லறைப் பிரபலங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ? அவருக்கு வழங்கப்பட்ட தண்டனை நீதியரசர் முஸ்லிம்களுக்கு வழங்கிய சலுகையோ அல்லது ஞானசாரரின் மேலுள்ள வெறுப்போ அல்ல. அது சட்டத்தின் நிலைப்பாடு. அதனைச் செவ்வனே நிறைவேற்றி சட்டத்தின் வலுவை நிலைநிறுத்தியுள்ளார் அந்த நீதிபதி. அந்தத் தண்டனையை கைதி அனுபவித்தே ஆகவேண்டும். அந்த நீதியரசரைப்போன்று ஏனைய நீதியரசர்களையும் தமது கடமையை அரசியல் தலையீடின்றி இயங்கவிட்டிருந்தால் இலங்கை இன்றைய இழிநிலைக்குத் தள்ளப்பட்டிருக்க மாட்டாது. அதனை உணர்ந்து கிளர்ந்தெழுந்தவர்களே அரகலயவின் இளம் தலைமுறையினர். அமைப்பையே மாற்று என்ற அவர்களின் கோஷத்தினுள் நீதித்துறையின் சுதந்திரம் நிலைநிறுத்தப்படல் வேண்டும் என்பதும் அடங்கும்.
அந்தத் தலைமுறையின் ஆதங்கங்களுக்கும் இலட்சியங்களுக்கும் குரல் கொடுத்து நாட்டின் இழிநிலையையும் உணர்ந்து இலங்கையின் சமூகப் பொருளாதார அரசியல் அமைப்பையே முற்றாக மாற்ற வேண்டும் என்ற தோரணையில் உதயமானதுதான் தேசிய மக்கள் சக்தி. ஏழரை தசாப்தங்களாக நடைமுறையிலிருக்கும் அமைப்பினுட் சிக்கிச் சீரழிந்தது போதாதா? சிறுபான்மை இனங்களுக்கு விடிவுகாலம் இந்த அமைப்பின்கீழே என்றுமே ஏற்படாது. ராஜபக்சாக்களோ விக்கிரமசிங்ஹாக்களோ ஏன் அனுர குமார திஸநாயகாகூட இந்த அமைப்பினுள் இருந்துகொண்டு எதனையும் சாதித்துவிட முடியாது. எனவேதான் முஸ்லிம்கள் நிதானத்துடன் வருங்கால ஜனாதிபதிப் போட்டியில் தமது தேர்தல் வாக்குகளை உபயோகிக்க வேண்டும்.
இதற்கிடையில் சிங்களவர்களுக்கு வாக்களிப்பதால் தமிழர்களுக்கு என்ன பிரயோசனம் என்ற ஒரு கேள்வி வடக்கிலே இருந்து எழுந்துள்ளது. அந்தப் பாணியிலே சிந்தித்தால் தமிழர்கள் தமிழர்களுக்கு வாக்களிப்பதால் எதனையும் சாதித்து விடலாமா? அதேபோன்று முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கு வாக்களிப்பதால் எதனைச் சாதிக்கப் போகிறார்கள்? அதைத்தானே இதுவரை செய்து ஏமாந்தார்கள்? இரண்டு இனங்களும் ஒன்றை மறந்துவிடக்கூடாது.
இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுந்தான் சொந்தம் என்று ஞானசாரர் கண்டி நகரிலே மூன்று வருடங்களுக்குமுன் பகிரங்கமாகப் பறைசாற்ற அதனை அரசாங்கத்திலுள்ள எந்த ஒரு அமைச்சரோ பிரதிநிதியோ மறுத்துரைக்கவில்லை. காலஞ்சென்ற மங்கள சமரவீரமட்டும் அதனை மறுத்துரைத்து அதனால் அவர் எவ்வாறு பௌத்த சங்கத்தினரால் ஒதுக்கிவைக்கப்பட்டார் என்பதை வரலாறு மறக்கவில்லை. எனவேதான் அமைப்பையே மாற்றினாலன்றி இலங்கைக்கு விடிவுகாலம் கிடையாது என்பதை இளம் தலைமுறை உணர்ந்துவிட்டது. அதற்குக் குரல்கொடுக்கின்றது தேசிய மக்கள் சக்தியின் தலைமைப் பீடம். அவர்கள் இந்தப் புரட்சிகரமான மாற்றத்தை வன்முறைகொண்டு சாதிக்க முனையாது பொதுஜன வாக்குகளைப்பெற்றுச் சாதிக்க முன்வந்துள்ளனர். அவர்களின் கூட்டணியில் சிங்களவர்களும் உண்டு, தமிழர்களும் உண்டு முஸ்லிம்களும் உண்டு. ஆண்களும் உண்டு, பெண்களும் உண்டு.
எனவேதான் ஞானசாரரை மன்னித்து விடுதலைசெய்து அதன்மூலம் பௌத்த மக்களின் வாக்குகளைத் திரட்டி ஆட்சிபீடம் ஏறி பழைய அமைப்பையே மீண்டும் தொடர்வதற்கு முஸ்லிம்கள் துரும்பாகக் கூடாது என்பதை இக்கட்டுரை வலியுறுத்துகிறது. கோத்தாபய ராஜபக்சவின் ராஜினாமாவை அரகல இளவல்களின் முதல் வெற்றியென்றால் ஞானசாரரின் சிறைவாசத்தை அவர்களின் இரண்டாவது வெற்றியெனக் கருத இடமுண்டு.- Vidivelli
Post a Comment