ரொஹான் பெரேராவாக வாழ்ந்து, மரணித்த பஸ்லி நிஸார்
-சபீர் மொஹமட்-
கடந்த ஞாயிறு(14) மாலை நண்பன் ஒருவரை சந்திக்க சென்று கொண்டிருக்கும் போது பொரல்லை ‘ஜயரத்ன’ மலர்ச்சாலைக்கு முன்பாக சில நண்பர்களும் இடதுசாரி கம்யூனிஸ கொள்கை அரசியலில் ஈடுபடுகின்ற ஒரு சிலரையும் கண்டேன். யாரோ என் நண்பர்களுக்கு தெரிந்த ஒருவர் இறந்திருப்பார், என நினைத்து எனது பயணத்தை தொடர்ந்து சென்று கொண்டிருக்கும்போது மழை குறுக்கிட்டதால் திரும்பவும் வீட்டை நோக்கி பயணித்தேன். அப்போது பொரல்லைக்கு சென்று இறந்திருப்பது யார் என்பதை பார்த்துவிட்டுச் செல்வோம் என்ற ஒரு எண்ணம் தோன்றியதால் பொரல்லை ஜயரத்ன மலர்ச்சாலைக்கு சென்றேன்.
அங்கே சென்றபோது இறந்திருப்பது ரொஹான் பெரேரா என்கின்ற ஒருவர் என்பதை நண்பர்கள் ஊடாக தெரிந்து கொண்டேன். சிறிது நேரத்தில் இன்னும் ஒரு உண்மையை அறிந்தேன். அதுதான் ரொஹான் பெரேரா என்பவர் பிறப்பில் ஒரு முஸ்லிம் என்பதுடன் அவருடைய பூதவுடலை இன்னும் கொஞ்ச நேரத்தில் ஜாவத்தை ஜும்ஆ பள்ளிக்கு அடக்கம் செய்வதற்காக எடுத்துச் செல்லவுள்ளார்கள் என்பது. கூறியதுபோல் பூதவுடலும் வாகனம் ஒன்றில் ஏற்றப்பட்டு ஜாவத்தையை நோக்கிச் சென்றது. ஆனால் பொரல்லை ஜயரத்ன மலர்ச்சாலையில் குழுமியிருந்தவர்கள் அனைவரும் பெரும்பான்மையினத்தவர்கள் என்பதால் அவர்கள் எவருக்குமே பள்ளிக்கு செல்ல வேண்டிய தேவை இருக்கவில்லை.
அப்போது என் மனதில் பள்ளிக்குச் சென்று ஜனாஸா தொழுகையை தொழுதுவிட்டு வீட்டுக்குச் செல்லலாமே என்ற எண்ணம் தோன்றியதால் நான் பள்ளியை நோக்கி சென்றேன். பள்ளியை அடைந்ததும் கடும் மழை பெய்வதற்கான சாத்தியம் இருந்ததால் மீண்டும் வீட்டுக்கே வந்தேன். வீட்டுக்கு வந்து முதல் வேலையாக யார் இந்த ரொஹான் பெரேரா என இணையதளத்தில் ஆராயும் போதுதான் அவர் பற்றிய ஒரு சில விடயங்களை அறியக்கிடைத்தது.
யார் இந்த ரொஹான் பெரேரா?
1964 ஆம் ஆண்டு பிறந்துள்ள இவர் ஊடகங்களில் பிரசித்தி பெறாத ஆனால் கல்விமான்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற ஒரு தத்துவஞானி என்பதை தெரிந்து கொண்டேன். ரொஹான் பெரேரா என அழைக்கப்படுகின்ற இவர், நவீன உலக பெண்மைத்துவம் பற்றிய பல தத்துவங்களையும் கோட்பாடுகளையும் தர்க்க ரீதியில் முன்வைத்துள்ளார். மேலும் இது சார்ந்த பல ஆராய்ச்சிகளையும் இவர் மேற்கொண்டுள்ளார். இன்னும் அவர் குறித்து ஆராய்வதற்கு முன்னர் மழை நின்று விட்டதால், ஜாவத்தை மையவாடியில் என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்ள வேண்டிய ஆர்வம் என்னை தூண்டியது.
அவசரப்பட்டு வந்து விட்டோமோ, இவ்வளவு பெரிய ஒரு ஆளுமையின் ஜனாஸாவிற்கான இறுதிக் கடமைகளை என்னால் செய்ய முடியாமல் போனதே என்ற கவலையுடன் திரும்பவும் பள்ளிக்குச் சென்றேன். அங்கே சென்று விசாரித்தபோது குறித்த ஜனாஸாவின் தகவல்களில் ஒரு சில பிரச்சினைகள் காணப்பட்டதால் அங்கே அடக்கம் செய்யவில்லை எனவும் ஜனாஸாவை குப்பியாவத்தை மையவாடிக்கு எடுத்துச் சென்றதாகவும் கூறினார்கள். உடனடியாக குப்பியாவத்தை மையவாடிக்கு சென்றேன். அங்கே ரொஹான் பெரேராவுடைய குடும்ப உறவினர்கள் என நான் பொரல்லையில் கண்ட மூவர் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களிடம் சென்று ஜனாஸாவை என்ன செய்தீர்கள் எனக் கேட்டபோது, இங்கே அடக்க முடியாது இன்னும் சற்று நேரத்தில் மாளிகாவத்த மையவாடியில் அடக்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என கூறினார்கள்.
அப்போது அவர்கள் என்னிடம் உங்களுக்கு இவரை தெரியுமா? இவரிடம் நீங்கள் கற்றுள்ளீர்களா? என கேட்டார்கள். இல்லை என பதிலளித்தேன். அப்போது இவரைப் பற்றி எப்படி உங்களுக்கு தெரியும்? சற்று நேரத்துக்கு முன்பு தான் இணையதளத்தில் இவர் பற்றி ஆராய்ந்தேன். யார் இவர்? இவர் ஒரு ஆசிரியரா ? ஆசிரியர் மட்டுமல்ல. அப்போது அரசியல்வாதியா ? இல்லை இல்லை இவர் ஒரு சமூக அரசியல் தத்துவஞானி !
எங்கே பேஸ்புக்கில் இவர் இல்லையே இவருடைய பெயர் ரொஹான் தானே? இல்லை, இவர் சமூக வலைத்தளங்கள் ஊடகங்கள் எதிலுமே இல்லை என நான் மாலையில் வாசித்தேன்.
அவர்களுடைய முகத்தில் எந்த ஒரு உணர்ச்சியும் அந்த நேரத்தில் இருக்கவில்லை. ஏதோ இனம் புரியாத கவலை அந்த மூவரையும் ஆட்கொண்டிருந்தது. அப்போது அவர்களுக்கு மாளிகாவத்தை மையவாடியில் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக வரும்படி தொலைபேசி அழைப்பு கிடைத்தது. பின் நாங்கள் மாளிகாவத்தைக்குச் சென்றோம்.
என்னுள் இருந்த அடுத்த கேள்வி, ஏன் இவர் ரொஹான் பெரேராவாக வாழ்ந்துள்ளார்? இவர் பற்றி எதுவுமே அறியாதவர்களாக குடும்பத்தவர்கள் ஏன் உள்ளார்கள்? பொரல்லை பொது மயானத்தில் அடக்கப்படவிருந்த இவர் எப்படி மாளிகாவத்தைக்கு வந்தார் ? அங்கே இருந்த குடும்பத்தவர்களிடம் இது பற்றி வினவிய சந்தர்ப்பத்தில் இன்னும் பல உண்மைகளை அறிந்தேன்.
இவருடைய உண்மையான பெயர், மஹ்மூத் பஸ்லி நிஸார். பிறந்து வளர்ந்தது எல்லாம் கொழும்பில்தான். ஆனால் 17 வயதில் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். அங்கிருந்த குடும்ப உறவினர்கள் கூறியதன்படி ‘சிறுவயதில் தங்களது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு ஆண் பிள்ளை வீட்டை விட்டு ஓடிச் சென்றதாக வயோதிபர்கள் கூறியுள்ளார்களாம். இன்று தான் அந்த ஓடிச்சென்ற சிறுவன் இந்த ரொஹான் பெரேரா என்று தெரியவந்ததாக’ அவர்கள் கூறினார்கள். மேலும் ரொஹானுடைய தாய் இன்னும் உயிரோடு இருப்பதுடன் தாயை சந்திப்பதற்காக மாத்திரம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தாய் இருக்கும் இடத்திற்கு சென்று வருவதாகவும் அதற்கு மேல் ரொஹான் குடும்ப உறவினர்களுடன் எந்த ஒரு தொடர்பிலும் இருக்கவில்லை எனவும் அங்கிருந்த உறவினர்கள் கூறினார்கள்.
பின்பு மேலும் ஒரு சில ரொஹான் பற்றிய உண்மைகளை ரொஹானின் நண்பர்கள் ஊடாக தெரிந்து கொண்டேன். ரொஹான் பெரேரா தனது இளமை காலத்தில் அம்பலாங்கொடை, பேராதெனிய மற்றும் தெமடகொட ஆகிய பிரதேசங்களில் மிகவும் எளிமையான முறையில் வாழ்ந்துள்ளார். சட்ட ரீதியான முறையில் திருமணங்கள் எதுவும் செய்து கொள்ளாமல் தனிமையிலேயே பல வருட காலம் வாழ்ந்துள்ளதுடன் 87/89 ஜேவிபி கலவரங்களில் இவருடைய உயிருக்கும் பல ஆபத்துக்கள் இருந்துள்ளன. பல மேற்கத்திய தத்துவங்களையும் புத்தகங்களையும் வாசித்து தனது அறிவை இளமை காலம் முதலிருத்தே இவர் வளர்த்துள்ளார். 1995ஆம் ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட எக்ஸ் (x) என்று அழைக்கப்படுகின்ற கல்விமான்கள் மற்றும் தத்துவஞானிகளுடைய குழுவின் ஒரு முக்கிய அங்கத்தவராக ரொஹான் இருந்துள்ளார். அதேபோல் பல்வேறுபட்ட இடதுசாரி அரசியல் கொள்கைகளை சரமாரியாக தனது நியமங்கள் கொள்கைகளை முன்னிலைப்படுத்தி இவர் விமர்சித்தும் உள்ளார். ரொஹானுடைய உடல் பொரல்லை மலர்ச்சாலையில் வைக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் அனுர குமார திசாநாயக்க உட்பட இடதுசாரி அரசியல்வாதிகள் தொழிற்சங்க தலைவர்கள் என பலரும் இறுதி அஞ்சலிக்காக அங்கே வந்துள்ளார்கள்.
குடும்ப உறவினர்களிடம், 17 வயதில் வீட்டை விட்டு சென்ற பஸ்லி இவர் தான் என்பதை எவ்வாறு நீங்கள் இறந்த பின்னர் அறிந்தீர்கள் என்ற விடயத்தை கேட்டபோது இன்னுமொரு திடுக்கிடும் தகவலை அவர்கள் கூறினார்கள்.
ரொஹான் கிழக்கு மாகாணத்திற்கு பயணித்த வேளை கடந்த 12 ஆம் திகதி வாழைச்சேனை பிரதேசத்தை அண்டிய ஒரு பகுதியில் மாரடைப்பு காரணமாக மரணித்துள்ளார். உடல் வாழச்சேனை வைத்தியசாலைக்கு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதன் பின் ரொஹானுடைய நண்பர்களுக்கு இருந்த பிரச்சினை இந்த உடலை எவ்வாறு கொழும்புக்கு எடுத்து வருவது என்பது. அப்போதுதான் வாழைச்சேனை பொலிசாரின் உதவியுடன் கொழும்பு ஹுனுபிடியைச் சேர்ந்த இஸ்மத் என்பவரை ரொஹானின் நண்பர்கள் தொடர்பு கொண்டு உதவி கேட்டுள்ளார்கள். இஸ்மத் வாழைச்சேனையைச் சேர்ந்த ஹாருன் சஹ்வி என்பவரை தொடர்பு கொண்டு, ரொஹான் பெரேரா என்ற ஒரு சிங்கள சகோதரரின் பூத உடல் வாைழச்சேனை வைத்தியசாலையில் உள்ளதாகவும் அதனை கொழும்புக்கு எடுத்து வருவதற்கான வாகன உதவிகளை செய்து தர முடியுமா எனவும் கேட்டுள்ளார். அப்போது ஹாருன் சஹ்வி தாராளமாக முடியும் எனக் கூறி தனது மருமகனை சாரதியாக அமர்த்தி அந்த விடுமுறை நாளில் கூட ஒரு சிங்கள சகோதரருக்காக கொழும்பை நோக்கி பூத உடலுடன் வந்துள்ளார்கள்.
அதன் பின்னர் 13 ஆம் திகதி இரவு வேளையில் வாழைச்சேனையைச் சேர்ந்த ஹாருன் சஹ்வி ஹுனுப்பிட்டியை சேர்ந்த இஸ்மத்திற்கு தொலைபேசி ஊடாக அழைப்பு விடுத்து, நாங்கள் இரண்டு நாட்களாக திண்டாடி கொழும்புக்கு அனுப்பி வைத்த ரொஹான் பெரேராவுடைய உண்மையான பெயர் மஹ்மூத் பஸ்லி நிஸார் என்பதுடன் அவர் பிறப்பில் ஒரு முஸ்லிமாக இருந்துள்ளார் என்ற உண்மைய கூறியுள்ளார். வாழைச்சேனை வைத்தியசாலையின் பிரேத பரிசோதகர் கூறியதன் பிரகாரமே தனக்கு இந்த உண்மை தெரிய வந்ததாகவும் அவர் கூறியுள்ளார். மாளிகாவத்தை மையவாடியில் ஜனாஸா தொழுகையைத் தொடர்ந்து ஒரு சிறிய உரையை ஆற்றிய இஸ்மத் இந்த தகவலை தான் தொலைபேசியில் கேட்டபோது தன்னுடைய உடல் நடுங்கியதாகவும் அல்லாஹ்வுடைய நாட்டம் எப்பேர்ப்பட்டது என்பதை கண்கூடாக தான் அந்த சந்தர்ப்பத்தில் கண்டதாகவும் கூறினார்.
ரொஹானுடைய தாயார் இன்னும் உயிரோடு இருப்பதுடன் தனது மகனுடைய இந்த மரணம் குறித்த செய்திகள் கிடைத்ததைத் தொடர்ந்து தாயுடைய வேண்டுகோளாக அமைந்தது, மகனுடைய ஜனாஸா முஸ்லிம் முறைப்படி அடக்கம் செய்யப்பட வேண்டும் என்பதாகும். அதனைத் தொடர்ந்து இஸ்மத் உட்பட ரொஹானுடைய குடும்பத்தினர் ரொஹானின் நண்பர்களிடம் பொரல்லை ஜயரத்ன மலர்ச்சாலையில் தாயுடைய இந்த வேண்டுகோளை முன்வைத்ததன் பின்னர் மிகவும் மிகவும் பணிவுடன் அதனை அவர்கள் ஏற்றும் உள்ளார்கள். இறந்த தனது நண்பன், சக போராளி, ஆசிரியர் மற்றும் வழிகாட்டி என பலரும் ரொஹான் பெரேராவுக்கு தமது இறுதி அஞ்சலியை செலுத்திவிட்டு பூதவுடலை குடும்ப உறவினர்களிடம் கையளித்துள்ளார்கள். அந்த சந்தர்ப்பத்திலேயே எதிர்பாராத விதமாக நான் அங்கே சென்றுள்ளேன்.
இறுதியாக இரவு 9.45 மணியளவில் ஜனாஸா தொழுகை முடிவடைந்து மாளிகாவத்தையைச் சேர்ந்த இளைஞர்கள், மரணித்த பஸ்லியின் குடும்பத்தினர் மற்றும் உயிரோடு இருக்கும் போது ரொஹான் யார் என்றே தெரியாத ஆனால் இறந்த பின்னர் அவரின் மாணவனாக மாறிய நானும் சேர்ந்து அந்த ஜனாஸாவை அடக்கம் செய்தோம்.
அன்றைய தினம் நடந்த அத்தனை சம்பவங்களையும் ஒருமுறை ஞாபகப்படுத்திக் கொண்டு மஹ்மூத் பஸ்லி நிஸாரின் கப்ரின் அருகே நின்று துஆ செய்தவனாக அங்கிருந்து வீடு வந்து சேர்ந்தேன்.- Vidivelli
Post a Comment