Header Ads



கார் பந்தய விபத்திற்கான உண்மையான காரணம்...


'Fox Hill Super Cross 2024' கார் பந்தய போட்டிகள் இலங்கை ஒட்டோமொபைல் ஸ்போர்ட்ஸ் அசோசியேஷன் மற்றும் இலங்கை இராணுவ பீடம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.


ஓட்டுனர்கள், பார்வையாளர்கள் உள்ளிட்ட தரப்பினரின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக போட்டிக்கு முன்னதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.


ஆனால், முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததால்தான் இதுபோன்ற உயிரிழப்பு நேர்ந்துள்ளதாக சில தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.


இந்த விபத்து தொடர்பில், முன்னாள் நிபுணத்துவ கார் பந்தய வீரர்கள் போட்டியின் ஏற்பாட்டாளர்கள் போட்டி வசதிகளை வழங்கிய விதம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.


அதன்படி, தூசி நிறைந்த சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, போதுமான தண்ணீரில் பாதையை ஈரப்படுத்த ஏற்பாட்டாளர்கள் நடவடிக்கை எடுத்தனரா? பாதையைச் சுற்றியுள்ள மண் மேடு உரிய தரத்தில் மேற்கொள்ளப்பட்டதா? மற்ற வாகன ஓட்டிகளுக்கு விபத்து நடந்ததற்கான சமிக்ஞைகள் உரிய விதத்தில் கொடுக்கப்பட்டதா? என ஏற்பாட்டாளர்களிடம்  கேள்வி எழுப்பினர்.


ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் இத்தகைய நிகழ்வின் அவசர சந்தர்ப்பங்களில் பீதியடையும் பார்வையாளர்களைக் கட்டுப்படுத்த போதுமான எண்ணிக்கையிலான பாதுகாப்புப் பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டனரா என்றும் அவர்கள்  கேள்வி எழுப்பினர்.


Fox Hill Supercross பாதையானது ஏற்றங்கள், சரிவுகள் மற்றும் வளைவுகளுடன் கூடிய 1.2 கிமீ நீளமுள்ள பாதையாகும்.


பாதையில் இருந்து கார்கள் தூக்கி எறியப்படுவதைத் தடுக்க பாதையின் வெளிப்புறத்தில் 3 அடி உயர மண் மேடு பயன்படுத்தப்படுகிறது.


மண் மேட்டில் இருந்து குறைந்தபட்சம் 20 அடி முதல் அதிகபட்சம் 30 அடி வரை மனிதர்கள் அற்ற பகுதி, அதாவது NO MAN AREA  அமைக்கப்பட்டுள்ளது.


அதன் முடிவில் பாதுகாப்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது மற்றும் பார்வையாளர்கள் போட்டியை வேலிக்கு வெளியே இருந்து பார்க்கலாம்.


நேற்றைய விபத்துக்கு முன்னர் அந்த பாதையில் 17 கார் பந்தய போட்டிகள் நடத்தப்பட்ட நிலையில் 18வது பந்தயத்தின் போது விபத்து ஏற்பட்டுள்ளது.


வழக்கமாக பாதையை ஒரு முறை சுற்றிவர குறைந்தது 45 வினாடிகள் எடுக்கும்.


18 ஆவது பந்தயத்தின் இரண்டாவது சுற்றின் போது, பாதையில் கார் ஒன்று திடீரென கவிழ்ந்தபோது, ​​பார்வையாளர்  பகுதியில் இருந்த ஒரு குழு அதைப் பார்ப்பதற்காக பாதுகாப்பு வேலியைத் தாண்டி குதித்து மண் மேடு வரை சென்றுள்ளனர். 


அப்போது பாதையில் அதிவேகமாக வந்த இரண்டு கார்கள் பாதுகாப்பு மண் மேடு மீது மோதியதில் விபத்து ஏற்பட்டது.


மண் மேட்டின் அருகே பணியில் இருக்கும் போட்டி கண்காணிப்பாளர்கள் இது போன்ற சந்தர்ப்பங்களில் மண் மேட்டிற்கு பின்னால் இருக்கும் காலியான இடத்திற்கு பாய்ந்து தம்மை பாதுகாத்து கொள்வார்கள். 


ஆனால், குறித்த சந்தர்ப்பத்தில் மண் மேட்டுக்கு அருகில் பார்வையாளர்கள் வந்திருந்ததால் அவர்களுக்கு அவ்வாறு பாதுகாத்துக் கொள்ள சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

No comments

Powered by Blogger.