ஜனாஸாக்களை எரித்து விட்டு, முஸ்லிம்களிடம் மன்னிப்பு கேட்பதை ஏற்கமுடியாது
-ஆங்கிலத்தில்: பமோதி வரவிட்ட
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்-
‘‘கொவிட் 19 வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் கடந்த அரசாங்கத்தினால் பலவந்தமாக தகனம் செய்யப்பட்டமை தவறு என்பதை ஏற்றுக்கொள்கிறேன். முஸ்லிம் சமூகத்திடம் இதற்காக ஓர் அமைச்சர் என்ற ரீதியில் மன்னிப்புக் கோருகிறேன்’’ என்று கூறி நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அமைச்சரவைப் பத்திரமூடாக மன்னிப்பு கோர முயற்சிப்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏற்க மறுத்துள்ளது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அமைச்சர் தொண்டமானின் மன்னிப்பை மறுப்பதாகவும் ஏனென்றால் அவர் இவ்விவகாரத்துடன் தொடர்புபட்டவர் அல்ல எனவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
கொவிட் 19 தொற்று காலத்தில் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபயவின் பதவிக் காலத்தில் அதிகாரத்திலிருந்த அமைச்சர்களே மன்னிப்புக் கோர வேண்டியவர்களாவர். தற்போதைய அமைச்சர் ஜீவன் தொண்டமானல்ல. இவர் மன்னிப்பு கோருவது வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு தந்திரமாகவே அமைந்துள்ளது எனவும் நிஸாம் காரியப்பர் தெரிவித்துள்ளார்.
2020 ஏப்ரல் மாதம் அரசாங்க வர்த்தமானி அறிவித்தலொன்று வெளியிடப்பட்டது. அந்த அறிவித்தலில் கொவிட் 19 தொற்றினால் மரணிப்பவர்களின் உடல்கள் அனைத்தும் தகனம் செய்யப்பட வேண்டும். கொவிட் 19 தொற்றினால் மரணித்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டால் நிலத்தடி நீர் மாசுபடும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாலே அரசு இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது என வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) வழிகாட்டல் ஆவணங்கள் கொவிட் 19 தொற்று உடல்கள் அடக்கம் செய்யப்படுவது பாதுகாப்பானது எனத் தெரிவித்திருந்த நிலையிலே இவ்வாறான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. அத்தோடு மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் அரசாங்கத்தின் இக்கொடுமையான கொள்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டனர். முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான, அவர்களது சமய வழிமுறைக்கு மாறான இந்த கொள்கைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது. என்றாலும் இந்த நிர்ப்பந்த தகனம் 2021 பெப்ரவரி மாதம் வரை நீடித்தது.
சுமார் 300 ஜனாஸாக்கள் இவ்வாறு பலவந்தமாக, கொவிட் 19 தொற்று காலத்தில் தகனம் செய்யப்பட்டதாக மனித உரிமைகள் செயற்பாட்டாளர் சிறீன் சரூர் தெரிவித்துள்ளார். இந்த எண்ணிக்கையை சுகாதார அமைச்சின் அதிகாரிகளும் உறுதி செய்துள்ளனர்.
மன்னிப்பு வழங்குவதை விட இந்த கொடுமையான பலவந்த தகன கொள்கை மற்றும் அதன் மூலகாரணத்தைக் கண்டறியவே நாம் விரும்புகிறோம். இந்தத் தேவையே எமக்குள்ளது. அப்போதைய ஜனாதிபதியாக இருந்த கோத்தாபய ராஜபக்ஷ தான் எழுதியுள்ள புத்தகத்தில் இவ்வாறான ஒரு தீர்மானத்தை தான் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு மன்னிப்பு வழங்குவதன் மூலம் பலவந்த தகனம் தொடர்பாக நாம் விசாரணைகளை முன்னெடுக்கக் கூடிய அனைத்து வழிகளையும் அரசாங்கம் அடைத்து விட முயற்சிக்கிறது. பலவந்த தகனம் தொடர்பாக அரசாங்கம் மேற்கொண்ட தவறான தீர்மானத்தை வெளிக் கொணர்வதை மன்னிப்பு மூலம் தடுத்து விட முடியாது. பலவந்த தகனம் தொடர்பாக கடுமையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும். அதன்மூலமே இவ்வாறான சம்பவங்கள் எதிர்காலத்தில் தொடராமல் தடுக்க முடியும் எனவும் சிறீன் சரூர் தெரிவித்தார்.
மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில், அரசாங்கம் இவ்வாறு மன்னிக்கும் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளமை இஸ்லாமிய நாடுகளின் அமைப்பினைச் (OIC) சேர்ந்த இஸ்லாமிய நாடுகளின் ஆதரவினை இவ்வருட இறுதியில் ஐ.நாவின் மனித உரிமைகள் கவுன்ஸிலில் பெற்றுக்கொள்வதற்காகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இவ்விவகாரம் தொடர்பில் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை தொடர்பு கொண்டு வினவியபோது அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். இவ்விவகாரம் தொடர்பாக எதுவும் தெரியாது என்று அவர் கூறினார். அரசாங்கம் மன்னிப்பு தெரிவிப்பது தொடர்பாக தான் அறியவில்லை என்றும் தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இஸ்லாமிய நாடுகளின் அமைப்பு (OIC) முஸ்லிம் ஜனாஸாக்களின் பலவந்தமான தகனம் குறித்து கவலை வெளியிட்டது. சில மாதங்களின் பின்பு 2021 மார்ச் மாதத்தில் இலங்கை ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலில் ஒரு வாக்கினை இழந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகிய இருவரும் முஸ்லிம் நாடுளின் ஆதரவினை இது விடயத்தில் கோரி இராஜதந்திர தொடர்புகளை மேற்கொண்டார்கள்.
2021 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அரசாங்கம் தனது பலவந்த தகனம் கொள்கையினை மாற்றிக் கொண்டது. கிழக்கில் ஓட்டமாவடியில் கொவிட் 19 தொற்று ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு மையவாடியொன்றினை ஒதுக்கியது. ஓட்டமாவடி கொவிட் 19 மையவாடியில் 3634 உடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இவர்களில் 2992 பேர் முஸ்லிம்கள், 287 பேர் பெளத்தர்கள், 270 பேர் இந்துக்கள், 85 பேர் கிறிஸ்தவர்கள் ஆவர்.
கடந்த 2ஆம் திகதி நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் ஜீவன் தொண்டமான் ஹட்டனில் நடைபெற்ற இப்தார் நிகழ்வில் கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் கொவிட் 19 தொற்று முஸ்லிம் ஜனாஸாக்கள் தகனம் செய்யப்பட்டமைக்கு மன்னிப்புக் கோரினார். ‘‘இந்த புனிதமான ரமழான் மாதத்தில் முஸ்லிம் சகோதர சகோதரிகளிடம் நான் மன்னிப்பு கோருகிறேன். கட்டாய தகனக் கொள்கையினால் இஸ்லாமிய சமூகத்துக்கு ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் காயங்களுக்கு அரசாங்கம் முறையாக மன்னிப்பு கோர வேண்டும்.கடந்த வருடம் ஜனவரி மாதமே நான் நீர்வழங்கல் அமைச்சைப் பொறுப்பேற்றிருந்தேன். என்றாலும் கடந்த காலங்களில் யார் இந்த அமைச்சுப் பதவியை வகித்த போதிலும் தற்போதைய அமைச்சர் என்ற வகையில் நிலத்தடி நீர் ஊடாக கொவிட் வைரஸ் பரவாது என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டியது எனது பொறுப்பு. நீர்வழங்கல் அமைச்சைப் பொறுப்பேற்ற பின்பு இது தொடர்பில் சுயாதீன ஆய்வொன்றினை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்குப் பணித்தேன். கொவிட் 19 தொற்று உடல்கள் அடக்கம் செய்யப்பட்டால் நிலத்தடி நீர் மூலம் வைரஸ் பரவுமா என்று ஆய்வு செய்யுமாறு வேண்டினேன்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக நிபுணர்கள் தலைமையில் இலங்கையின் பல்வேறு இடங்களில் மேற்பரப்பு மற்றும் கழிவு நீர் மூலம் வைரஸ் பரவுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது.
அத்தோடு பேராதனைப் பல்கலைக்கழகத்தின் நீர் தொழில்நுட்பத்துக்கான கூட்டு ஆராய்ச்சி மற்றும் விளக்க மையம் ஒரு விரிவான ஆய்வினை முன்னெடுத்தது. கொவிட் 19 தொற்று உடல்களை அடக்கம் செய்வதால் நிலத்தடி நீர் மாசுபடுகிறதா என ஆய்வு செய்யப்பட்டது. இந்த ஆய்வின் இறுதியில் தொற்று நோய்களின் போது முறையான பாதுகாப்புடன் புதைகுழிகளில் சடலங்களை அடக்குவதால் நிலத்தடி நீருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று முடிவு செய்யப்பட்டது. இந்நிலையில் தவறான வழிநடத்தல்கள் மூலம் பலவந்த தகனம் உத்தரவிடப்பட்டுள்ளது.
எனவே, விரைவில் கொவிட் 19 தொற்று ஜனாஸாக்கள் பலவந்த தகன கொள்கைக்கு அமைய தகனம் செய்யப்பட்டமைக்கு மன்னிப்பு கோருவதற்கான அமைச்சரவைப் பத்திரமொன்றினைச் சமர்ப்பிக்கவுள்ளேன் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.- Vidivelli
மந்திரி அவர்க ளே, இந்த படுபாவத்தைப் பற்றி விளங்கும் புரிந்து கொள்ளும் பக்குவமும் அனுபவமும் உங்களுக்கு நிச்சியம் இருக்கமுடியாது. ஏனெனில் உங்கள் தந்தையின் பிரேதத்துக்கு தீவைத்துக் கொளுத்திய உங்களால் அதன் பாரதூரமும் அந்த பாவத்தின் உச்சத்தையும் நிச்சியம் புரிந்து கொள்ள முடியாது. அதுமட்டுமன்றி அந்த பாவத்துக்கு மன்னிக்கும் கேட்க நீங்கள் யார் என்பதையும் குறிப்பாக நீங்கள் அதற்குத் தகுதியற்றவர் என்பதும் மட்டுமன்றி அந்த பாவத்தை மன்னிக்க இந்த நாட்டில் வாழும் 10 இலட்சத்துக்கு மேற்பட்ட முஸ்லிம்களில் யாரும் அநியாயம் செய்த யாரையும் மன்னிக்கத் தயாராக இல்லை. நீங்களும் உங்களுக்கு அது பற்றி ஆலோசனை சொன்ன ரணிலும் ராஜபக்ஸ அடிவருடிகளும் அதுபற்றி முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்டாலும் இந்த நாட்டில் வாழும் ஒரு முஸ்லிமும் அதனை மன்னிக்கத் தயாராக இல்லை. அதற்கான தண்டனையை இறைவன் நிச்சியம் அது தொடர்பாக தீர்மானம் எடுத்த ஆட்சியாளர்களும், அதன் அடிவருடிகளும் முஸ்லிம்களின் ஜனாஸாவை எரிக்க எல்லாவகையிலும் ஒத்துழைத்த டாக்டர்கள், அது தொடர்பான அனைவரையும் இந்த நாட்டில் வாழும் ஒரு முஸ்லிமும் மனனிப்பதும் இலலை. மன்னிக்கத் தயாராகவும் இல்லை என்பதை இந்த நாட்டில் வாழும் ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.
ReplyDelete