Header Ads



புத்தளம் ஸாஹிராவின் முதல் மாணவி 85 ஆவது வயதில் காலமானார்


புத்தளம், காஸிம் லேனில் வசித்து வந்த, புத்தளம் ஸாஹிரா தேசிய பாடசாலையின் முதல் மாணவி சித்தி பாத்திமா கடந்த வியாழக்கிழமை (11.04.2024) காலமானார்.


25.01.1939 இல் பிறந்த இவர் முன்னாள் தப்லீக் ஜமாஅத் ஏரியா பொறுப்புதாரி மர்ஹும் ஷாபி ஹாஜியாரின் மனைவியாவார்.


சித்தி பாத்திமாவின் தந்தை, புத்தளத்தில் புகழ்பெற்ற முதலாளி குடும்பத்தை சேர்ந்த சி.அ.க. ஹமீது ஹுஸைன் மரைக்கார் ஆவார். ‘சீனானாகானா’ என அழைக்கப்பட்ட இவர் புத்தளம் மக்களின் கெளரவத்தைப் பெற்றவர்.


காதியாரான இவர், தேசாதிபதி சேர் வில்லியம் மனிங் அவர்களால் 1923 இல், புத்தளத்தின் இரண்டாவது சோனகர் தலைவராக நியமிக்கப்பட்டு சிறிது காலத்தின் பின்னர் Head Moor man ஆனார்.


புத்தளம் மன்னார் வீதியில் அமைந்துள்ள தாய், சேய் சுகாதார மருத்துவமனை அவரின் அன்பளிப்பே. தற்போதைய ஸாஹிறா ஆரம்பப் பாடசாலைக் காணியின் ஒரு பகுதியும் இவரின் நன்கொடையே.


1938 இல் கட்டி முடிக்கப்பட்ட புத்தளம் பெரியபள்ளிவாசலை சம்பிரதாயபூர்வமாகத் திறந்துவைத்தவரும் அன்றைய Head Moor man ஹமீது ஹுஸைன் மரைக்காராவார்.


புத்தளம் ஸாஹிராக் கல்லூரியின் உருவாக்கத்திலும் அவரின் பங்கு அளப்பரியது. அன்று அவர் வழங்கிய ரூபா 1500 பணத் தொகையுடனேயே ஸாஹிராக் கல்லூரியைத் தொடங்குவதற்கான நிதி சேகரிப்பு ஆரம்பமானது.


கல்லூரியின் முதல் மாணவர் பதிவு 12.02.1945 அன்று இடம்பெற்றபோது ஆண்களும் பெண்களுமாக 44 மாணாக்கர் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். அவர்களுள் பெண்கள் வரிசையில், முதலாமவர் இவர்.


புத்தளம் தினகரன் நிருபர்

No comments

Powered by Blogger.