2024 ஹஜ் விவகாரம்: உயர் நீதிமன்ற தடைக்கு எதிராக வழக்கு தாக்கல்
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
உயர் நீதிமன்றம் ஏற்கனவே வழங்கியுள்ள ஹஜ் வழிகாட்டல்களை மீறி இவ்வருடத்துக்கான ஹஜ் கோட்டா பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமையை காரணம் காட்டி நீதிமன்றம் ஹஜ் கோட்டாவுக்கு தடை விதித்துள்ளமைக்கு எதிராக உயர்நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்படவுள்ளது.
அரச ஹஜ் குழு ஹஜ் முகவர்களுக்கு பகிர்ந்தளித்த ஹஜ் கோட்டாக்களுக்கு தடை விதித்து மேல் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை ரத்துச் செய்யக் கோரி உயர் நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யவுள்ளதாக முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் சார்பில் ஆஜராகும் சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
யுனைடட் டிரவல்ஸ் அன்ட் ஹொலிடேஸ் பிரைவட் லிமிடட் ஹஜ் முகவர் நிலைய உரிமையாளர் மொஹமட் லரீப் இவ்வருட ஹஜ் கோட்டா உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஹஜ் வழிகாட்டல்களை மீறி பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், ஹஜ் விசாரணைக் குழு அளித்த தீர்ப்பினை ஆட்சேபித்து இவ்வழக்கு ஹஜ் குழு மீதும், திணைக்களத்தின் மீதும் தொடரப் பட்டிருந்தது. இதனையடுத்தே மேல் நீதிமன்ற நீதிபதி சமரகோன் ஹஜ் கோட்டா பகிர்வுக்கு தடை விதித்து அறிவித்தார்.
இவ்வருடத்துக்கான 3500 ஹஜ் கோட்டாக்கள் 93 ஹஜ் முகவர்களுக்கிடையில் பகிரப்பட்டன. இவற்றில் 26 கோட்டாக்கள் பகிரப்படாது நிலுவையில் இருந்தன.
இந்நிலையில் இவ்வருடத்துக்கான ஹஜ் ஏற்பாடுகள் சவாலுக்குள்ளாகியுள்ளன. ஹஜ் முகவர்களும் ஹஜ் பயணிகளும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் அரச ஹஜ் குழுவின் அறிவுறுத்தல்களை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.
இவ்வருட ஹஜ் ஏற்பாடுகளின் நிலைமை குறித்து திணைக்களத்தின் ஹஜ் பிரிவுக்கு பொறுப்பான அதிகாரியை விடிவெள்ளி பல தடவைகள் அவரது கைப்பேசியூடாக தொடர்பு கொள்ள முயற்சித்தும் பலன் ஏற்படவில்லை.
Post a Comment