Header Ads



மரண தண்டனையிலிருந்து காப்பாற்ற தீவிர முயற்சி - 2 தினங்களில் குவிந்த 20 கோடி


இதோ மீண்டும் ஒருமுறை நிரூபணம் ஆகியுள்ளது கேரள மக்களின் மதம் கடந்த மனித நேயம்..


அப்துல் ரஹீம் எனும் முஸ்லிம் இளைஞர் உயிர் காக்க ஜாதி மதத்திற்கு அப்பால் ஒட்டுமொத்த கேரள மக்களும் இணைந்துள்ளனர்.


கோழிக்கோட்டில் இருந்து 18 வருடங்கள் முன்பு சவூதி அரேபியா சென்ற அப்துல் ரஹீம் அங்குள்ள ஒரு அரபு குடும்பத்தில் வீட்டு வேலையுடன் ஓட்டுநராக (Servant cum House Driver) பணியாற்றி வந்தார்..


அந்த குடும்பத்தின் மாற்று திறனாளியான மாணவரை பராமரிக்கும் பணியும் அப்துல் ரஹீம் செய்து வந்தார்..


ஒருநாள் அந்த மாணவரை காரில் வெளியே அழைத்து சென்ற போது அந்த மாணவர் கழுத்தில் பொருத்தியிருந்த செயற்கை உணவு குழாய் அடைப்பு ஏற்பட்டு மாணவர் மரணமடைந்தார்.


மாணவரின் பெற்றோர் அப்துல் ரஹீம் தங்கள் மகனை கொலை செய்ததாக புகாரளிக்க கைது செய்யப்பட்ட அப்துல் ரஹீம் கடந்த 18வருடங்களாக சவூதி அரேபியா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


மேற்படி வழக்கை விசாரித்த சவூதி அரேபியா நீதிமன்றம் அப்துல் றஹீமிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.


வருகிற ஏப்ரல் 16ம் தேதி சவூதி அரேபியாவில் மரண தண்டனை நிறைவேற்ற ஏற்பாடுகள் நடந்து வரும் நிலையில் அப்துல் றஹீமின் வயதான தாய் பாத்தும்மாவின் கண்ணீர் வேண்டுகோளை கண்ட அரபுலக மலையாள அமைப்புக்கள் மரணமடைந்த மாணவரின் பெற்றோரை சந்தித்து தொடர்ந்து பேசிய போது கொஞ்சம் கொஞ்சமாக இறங்கி வந்தவர்கள் தங்கள் மகன் மரணத்திற்கு இழப்பீடாக 34கோடி ரூபாய் தந்தால் மன்னிப்பு வழங்குவதாக உறுதியளித்தனர்..


34கோடி ரூபாய் எனும் பெருந்தொகை வழங்கி அப்துல் ரஹீம் உயிரைக் காப்பாற்றும் முயற்சியில் மலையாளிகள் ஈடுபட துவங்கினர்.


கேரளாவின் பிரபல நகைக்கடை குரூப் செம்மனூர் ஜுவல்லரி நிறுவன அதிபர் போபி செம்மனூர் ஒரு கோடி ரூபாய் வழங்குவதாக அறிவித்ததுடன் இரண்டு தினங்கள் முன்பு திருவனந்தபுரத்தில் இருந்து அப்துல் ரஹீம் உயிர் காக்க கேரள மக்களிடம் கையேந்துவதாக கூறி  "யாசக யாத்திரை" மேற்கொண்டு வருகிறார்.. அவரோடு உண்டியல் ஏந்தி நூற்றுக்கணக்கானவர்கள் நிதி சேகரித்து வருகின்றனர்.


எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் இரண்டு தினங்களில் மலையாளிகள் வாரிக்கொடுத்த தொகை 20 கோடி தாண்டியது பிரமிப்பாக உள்ளதாக கூறும் போபி செம்மனூர் மீதமுள்ள மூன்று தினங்களில் 14கோடி ரூபாய் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


வேறு பல அமைப்புக்களும் நிதி திரட்டி வருகின்றனர்..


இதற்கிடையில் அப்துல் ரஹீம் தாயார் பாத்தும்மா இந்திய பிரதமர் அலுவலகம் வழி மரண தண்டனையை தள்ளி வைக்க கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது


ஒட்டுமொத்த மலையாள சமூகம் இணைந்து வருகிற 16ம் தேதிக்கு முன் 34கோடி ரூபாய் திரட்டப்பட்டு இழப்பீடு தொகை வழங்கி அப்துல் ரஹீம் தாயகம் திரும்பி தாயுடன் இணைய நடைபெறும் முயற்சிகளை வல்ல இறைவன் எளிதாக்குவானாக...


Colachel Azheem

No comments

Powered by Blogger.